பெரியார் தனி மனிதர் இல்லை... கவிதை பாணியில் ரஜினிக்கு பதிலடி கொடுத்த வைகோ!

Published : Jan 23, 2020, 10:26 PM ISTUpdated : Jan 23, 2020, 10:37 PM IST
பெரியார் தனி மனிதர் இல்லை... கவிதை பாணியில் ரஜினிக்கு பதிலடி கொடுத்த வைகோ!

சுருக்கம்

தமிழர்களின் சமூக, அரசியல், பொருளாதார வாழ்வியலுடன் இரண்டறக் கலந்து இருக்கிற தலைவர் தந்தை பெரியார் குறித்து நண்பர் நடிகர் ரஜினிகாந்த், துக்ளக் விழாவில் கூறிய கருத்துகளை, திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி ஆதாரபூர்வமாக மறுத்து இருக்கிறார். அதன்பிறகும் தாம் தெரிவித்த செய்திக்காக வருத்தம் தெரிவிக்க மாட்டேன் என்று கூறி இருக்கும் ரஜினிகாந்த், “இவை மறக்கக் கூடிய நிகழ்வுகள்” என்று மட்டும் கூறுகிறார். மறக்கவேண்டிய நிகழ்வுகளை ஏன் இவர் இப்போது நினைவூட்டுகிறார்? என்ற கேள்வி எழுகிறது!  

தந்தை பெரியார் குறித்து அவதூறாகக் கருத்துக் கூறும் எண்ணம் தனக்கு இல்லை என்றுகூட ரஜினிகாந்த் கூற மறுப்பது எதனால்? எய்தவர்கள் யார் என்று தமிழ்நாட்டு மக்கள் நினைப்பது இயற்கையே! தொடங்கி வைத்தது ரஜினிகாந்த்; அவரேதான் இதற்கு முற்றுப்புள்ளியும் வைக்க வேண்டும் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக வைகோ வெளியிட்டுள்ள அறிக்கை:


பெரியார் தனி மனிதர் அல்ல; ஓர் இயக்கம். சமுதாயத்தை மாற்ற வந்த இயக்கம். மாற்றம் என்றால் சாதாரண மாற்றமா? பாராட்டிப் போற்றி வளர்த்த பழமை லோகம்; ஈரோட்டுப் பூகம்பத்தால் இடிந்தது. பூகம்பம் வந்து கோட்டை, கொத்தளங்களைப் புரட்டிப் போட்டது போல், அவை சாதாரண கோட்டைகளா? ஆயிரக்கணக்கான ஆண்டுகள் அசைந்து கொடுக்காமல் குன்றென நிமிர்ந்து நின்ற கோட்டைகள்.
வேதங்கள், புராணங்கள், சாத்திரங்கள், மதங்கள் என்ற அகழிகளும், ஆசாரம், அனுஸ்டானம், சம்பிரதாயம், சடங்கு என்ற படைக்கலன்களும் குவித்து வைத்திருந்த கோட்டைகள் பெரியார் என்ற பூகம்பத்தால் சரிந்தன; இடிந்தன; விழுந்தன; இருந்த இடம் தெரியாமல் மண்மேடாக ஆயின. தந்தை பெரியார் ‘ஒரு சகாப்தம்’ என்று புகழ்ந்த பெரியாரின் தலைமாணாக்கர் பேரறிஞர் அண்ணா, “பெரியார் பேசாத நாள் உண்டா? குரல் கேட்காத ஊர் உண்டா? அவரிடம் சிக்கித் திணறாத பழமை உண்டா? எதைக் கண்டு அவர் திகைத்தார்? எதற்கு அவர் பணிந்தார்? எந்தப் புராணம் அவரிடம் தாக்குதலைப் பெறாதது?


அக்கிரமம் எங்கு கண்டாலும், எந்த வழியிலே காணப்படினும் எத்தனை பக்கபலத்துடன் வந்திடினும் பெரியார் அதனை எதிர்த்துப் போராடத் தயங்கியது இல்லை” என்று பழமை இருள் அகற்றிப் புத்தொளி கொடுக்க வந்த பகுத்தறிவுப் பகலவன் பெரியாரை புகழ்ந்துரைத்தார். “இந்திய வரலாற்றிலேயே தீண்டாமையையும், சாதிக் கொடுமைகளையும் எதிர்த்து முதன்முதலாக வைக்கத்தில் போராடி வெற்றி கண்ட ‘வைக்கம் வீரர்’ பெரியாரின் போராட்டத்தால் ஈர்க்கப்பட்டதால்தான் மராட்டிய மாநிலத்தில் கோயில் நுழையும் போராட்டத்தைத் தான் நடத்த முடிந்தது” என்று உரக்கச் சொன்னவர் டாக்டர் அம்பேத்கர் என்பது வரலாறு.
சமூக நீதிக்காகப் போராடி, இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தில் முதல் திருத்தம் கொண்டுவரக் காரணமாக இருந்தவர் பெரியார். பெண்ணடிமைக் கோட்பாட்டை அழித்து மகளிர் விடுதலையைச் சாதித்தவர் பெரியார். அந்திமக் காலம் நெருங்கிய நிலையிலும் சென்னை தியாகராய நகரில் டிசம்பர் 19, 1973 இல் ஆற்றிய இறுதிப் பேருரையில் தமிழின விடுதலைக்காக டெல்லி ஏகாதிபத்தியத்தை எதிர்த்து வீர முழக்கமிட்டவர் தந்தை பெரியார்.
தமிழர்களின் சமூக, அரசியல், பொருளாதார வாழ்வியலுடன் இரண்டறக் கலந்து இருக்கிற தலைவர் தந்தை பெரியார் குறித்து நண்பர் நடிகர் ரஜினிகாந்த், துக்ளக் விழாவில் கூறிய கருத்துகளை, திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி ஆதாரபூர்வமாக மறுத்து இருக்கிறார். அதன்பிறகும் தாம் தெரிவித்த செய்திக்காக வருத்தம் தெரிவிக்க மாட்டேன் என்று கூறி இருக்கும் ரஜினிகாந்த், “இவை மறக்கக் கூடிய நிகழ்வுகள்” என்று மட்டும் கூறுகிறார். மறக்கவேண்டிய நிகழ்வுகளை ஏன் இவர் இப்போது நினைவூட்டுகிறார்? என்ற கேள்வி எழுகிறது!


தந்தை பெரியார் குறித்து அவதூறாகக் கருத்துக் கூறும் எண்ணம் தனக்கு இல்லை என்றுகூட ரஜினிகாந்த் கூற மறுப்பது எதனால்? எய்தவர்கள் யார் என்று தமிழ்நாட்டு மக்கள் நினைப்பது இயற்கையே! தொடங்கி வைத்தது ரஜினிகாந்த்; அவரேதான் இதற்கு முற்றுப்புள்ளியும் வைக்க வேண்டும்!'' என்று வைகோ அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

PREV
click me!

Recommended Stories

Premalatha Vijayakanth: அட்ரா சக்க... கூட்டணியில் இருந்தாலும் திமுக ஆட்சியின் தவறை சுட்டிக்காட்டிய பிரேமலதா!
திமுக ஆட்சியில் 1 லட்சம் கோடி ஊழல் நடந்திருக்கு! - ஆதவ் அர்ஜுனா பகீர் குற்றச்சாட்டு