நோ கூட்டணி தர்மம்! நோ மன்னிப்பு! ஒன்லி தேர்தல் வெற்றி: இரண்டு கட்சிகளை கழற்றிவிட ஸ்டாலின் போட்ட ஸ்கெட்ச்.

By Vishnu PriyaFirst Published Jan 23, 2020, 7:26 PM IST
Highlights

அதனால் கூடிய விரைவில் தி.மு.க. கூட்டணியில் இருந்து காங்கிரஸ் வெளியேற்றப்படும். ‘எங்கள் தலைவர் மீது அவர்கள் சுமத்திய பழியை நாங்கள் மறக்கவுமில்லை, மன்னிக்கவுமில்லை’ என்று இதே துரைமுருகனின் டயலாக்கோடு, கூட்டணி முறிவு அறிவிக்கப்படும். 

எந்த ஆயுதத்தால் தன்னை தமிழக காங்கிரஸ் தாக்கியதோ, அதே ஆயுதத்தை வைத்தே அவர்களை விரட்டி விரட்டி அடிக்கத் துவங்கியுள்ளார்  தி.மு.க. தலைவர் ஸ்டாலின். கூட்டணி தர்மத்தை எல்லாம் பற்றி சிந்திக்காமல், காங்கிரஸ் உள்ளிட்ட இரண்டு கட்சிகளுக்கு கூடிய விரைவில் கல்தா கொடுக்கும் முடிவை எடுத்துவிட்டார் மு.க.வின் மகன் என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள். என்ன முடிவு அது? என்று அவர்களிடம் கேட்டபோது....”உள்ளாட்சி தேர்தலில் தங்களுக்கு முறையான வாய்ப்புகளும், பதவிகளும் வழங்கப்படவில்லை என்று குற்றம்சாட்டித்தான் ’கூட்டணி தர்மத்தை மதிக்காத தி.மு.க!’ என்று வெளிப்படையாக போட்டுத் தாக்கியது தமிழக காங்கிரஸ். இதன் பின் மிகப்பெரிய பஞ்சாயத்துகள் தி.மு.க. கூட்டணியில் வெடித்ததும், அதன் பின் காங்கிரஸே வலிய சென்று சமாதானக் கொடி பறக்கவிட்டதும் தெரிந்த சேதி. 

அறிவாலயம் தேடி வந்த காங்கிரஸ் தலைவர்களை ஒரு சம்பிரதாயத்துக்கு ஸ்டாலின்  கும்பிட்டு, வரவேற்று உட்கார வைத்துப் பேசிவிட்டார்தான். ஆனால் உள்ளூர அவர்  காங்கிரஸை மன்னிக்கவில்லை. அமைச்சர் ஜெயக்குமார் சொன்னது போல் உடைந்த கண்ணாடி ஒட்டவில்லை ஸ்டாலினை பொறுத்தவரையில். பொங்கலன்று வேலூரில் துரைமுருகன் பேசிய ‘ஓட்டுக்களே இல்லாத காங்கிரஸ் எங்களை விட்டுப் போனாலும் கவலை இல்லை!’ என்பதுதான் ஸ்டாலினின் இப்போதைய எண்ணமும். எப்போதுடா காங்கிரஸை கூட்டணியிலிருந்து வெளியேற்றலாம் என்று காத்திருந்தது தி.மு.க. இப்போது காங்கிரஸ் தானாக வந்து வாயைக் கொடுத்து சிக்கிக் கொண்டுள்ளதை வகையாக பயன்படுத்திக் கொள்கிறார்கள். எப்படி ‘கூட்டணி தர்மத்தை மதிக்கவில்லை’என்று காங்கிரஸ் சொன்னதோ அதே ரூட்டைத்தான் ஸ்டாலின் பிடித்திருக்கிறார். அதை அடிப்படையாக வைத்துதான் ஸ்கெட்ச் போட்டிருக்கிறார் இரண்டு கட்சிகளை கூட்டணியிலிருந்து தூக்கிட. அவை காங்கிரஸ்! மற்றொன்று திருமாவளவனின் விடுதலை சிறுத்தைகள். ஓட்டு வங்கி இல்லாததால் காங்கிரஸை வெளியே அனுப்பிட திட்டமிட்டிருக்கும் ஸ்டாலின், தனது மனதுக்கு எப்போதுமே விருப்பமில்லாத தோழனான விடுதலை சிறுத்தைகளையும் கையோடு கழற்றிவிடும் முடிவெடுத்துள்ளார். ஸ்டாலின், திருமா இடையே ஈகோ யுத்தம் எப்போதுமே உண்டு. இரு தரப்பு நிர்வாகிகளுக்கும்  எந்த நேரமும் முட்டல், மோதல்கள்தான். எனவே தான் இந்த சூழலை பயன்படுத்தி சிறுத்தைகளையும் கட்டம் கட்டிவிட முடிவெடுத்துவிட்டார். 

தமிழக காங்கிரஸை வெளியேற்றிட புதிதாய் எதுவும் செய்ய வேண்டியதில்லை. ஏற்கனவே பற்றி எரிந்துவிட்டு இப்போது லேசாக அணைந்திருக்கும் தணலை, ஊதிவிட்டால் மீண்டும் பற்றிக் கொள்ளும். விடுதலை சிறுத்தைகளை தனது இணையதள விங் மூலமாக ஏதாவது விமர்சித்து சீண்டினால், பதிலுக்கு அவர்கள் எரிமலையாய் வெடிப்பார்கள். அந்த பஞ்சாயத்தை வைத்தே அவர்களையும் கட்டங்கட்டி அனுப்பிவிடலாம். இவர்கள் இருவருக்கும் மாற்றாக, இப்போது அ.தி.மு.க. கூட்டணியில் இருந்து கொண்டே அவர்களுக்கு எதிராக வெளிப்படையாக போர் தொடுத்துக் கொண்டிருக்கும் பா.ம.க.வை உள்ளே இழுக்கலாம் என்பதே ஸ்டாலினின் திட்டம். எடப்பாடியை கூட ஏற்றுக் கொள்ளும் ராமதாஸும், அன்புமணியும் ஸ்டாலினை மானசீகமாக விரும்பமாட்டார்கள். ஆனால், ஜெயிக்கும் கட்சி எது? என்பதுதான் தேர்தலில் போட வேண்டிய லாபக்கணக்கே தவிர, மனசுக்கு பிடித்தது பிடிக்கலை என்று சொல்ல இது ஒன்றும் திருமணமில்லை! என்பதுதான் இந்த விஷயத்தில் ஸ்டாலின் வைக்கும் வாதம். 

அதனால் கூடிய விரைவில் தி.மு.க. கூட்டணியில் இருந்து காங்கிரஸ் வெளியேற்றப்படும். ‘எங்கள் தலைவர் மீது அவர்கள் சுமத்திய பழியை நாங்கள் மறக்கவுமில்லை, மன்னிக்கவுமில்லை’ என்று இதே துரைமுருகனின் டயலாக்கோடு, கூட்டணி முறிவு அறிவிக்கப்படும். பெரிய அறிவிப்புகள் இல்லாமல் திருமாவுக்கான கதவும் மூடப்பட்டுவிடும். அதன் பின் சட்டமன்ற தேர்தல் சூடு பிடித்து பெரும் பரபரப்பு உச்சம் தொடுகையில், பா.ம.க.வை உள்ளே இழுத்து மளமளவென பிரசாரத்தில் இறங்கிவிடலாம் என்பதே ஸ்டாலினின் கணக்கு. தர்மமெல்லாம் கிடையாது, வெற்றி ஒன்று மட்டுமே டார்கெட்! எனும் கொள்கையை கையில் எடுத்துவிட்டார் ஸ்டாலின். ” என்கிறார்கள். 
பார்க்கலாம், ஸ்டாலினின் ஸ்கெட்ச் எந்தளவுக்கு ஒர்க் - அவுட் ஆகுது என்று. 

tags
click me!