
அரசியலில் பெரிய தலைவராக வளர்ந்த பலரிடம் இல்லாத ஒரு நற்குணம் வைகோவிடம் உள்ளது! அது, தான் பிறந்த மண்ணை மதிக்கும் குணம். எத்தனையோ நாடுகளை சுற்றியிருந்தாலும் கூட வைகோவுக்கு தனது சொந்த ஊரான திருநெல்வேலி மாவட்டம் கலிங்கப்பட்டியில் கால் வைக்கும்போது அவர் உணரும் சந்தோஷமே தனிதான்.
எப்போது சொந்த ஊருக்கு போகிறாரோ இல்லையோ, பொங்கல் விழாவை கொண்டாட வருடா வருடம் நிச்சயம் தனது சொந்த ஊருக்கு சென்றுவிடுவார் வைகோ. ஊர்மக்களோடு சேர்ந்து, பொங்கல் வைத்து, நெஞ்சம் இனிக்க பேசி மகிழ்ந்து ஒரு வருட சந்தோஷத்தை அந்த ஒரு நாளில் வாழ்ந்து மகிழ்வார் வைகோ.
அந்த வகையில் இந்த வருடமும் கலிங்கப்பட்டியில் பொங்கல் விழாவில் கலந்து கொண்டார். வழக்கமான பொங்கல் விடும் வைபவத்தை முடித்துவிட்டு தலித் இளைஞர்கள் கொண்டாடும் விழாவிலும் கலந்து கொண்டு கலகலத்தார்.
மறுநாள் கலிங்கப்பட்டியில் பொதுமக்கள் சார்பில் நடைபெற்ற விழாவில் கலந்து கொண்டவர், ஏனோ தெரியவில்லை மிக உருக்கமாகவும், கலக்கமாகவும் பேசினார். “என் அம்மா மாரியம்மாள் இல்லாததால் என் வீடு வெறுமையாய் காட்சியளிக்கிறது.” என்று தாயின் நினைவுகள் வாட்டியதால் கண்களில் நீர் கோர்த்தவர், பின்...
“இங்கு சாதி பேதமின்றி வந்திருக்கும் மக்களைப் பார்த்து பூரிப்படைகிறேன். எனது காலத்திற்குப் பிறகும் கூட இளைஞர்கள் இந்த ஊர் ஒற்றுமையை பாதுகாக்க வேண்டும்.” என்று நிறுத்தியபோது ஊரே கலங்கியிருந்தது.
பொதுவாக இதுவரை எங்குமே ‘எனது காலத்துக்குப் பின்னால்’ எனும் வார்த்தைகளை உச்சரித்ததில்லை வைகோ. இந்த முறை தன் சொந்த மண்ணிலேயே அதை பேசியிருக்கிறார் என்றால், வைகோ தனது அரசியல் பாதை குறித்து ஏதாவது முடிவெடுத்துவிட்டாரோ? என பதறுகின்றனர் ம.தி.மு.க.வினர்.
தேர்தல் அரசியலில் தொடர் தோல்விகளை கண்டு கொண்டிருப்பதாலும், அதீதமான எதிர்மறை விமர்சனங்கள் தன்னை காயப்படுத்திக் கொண்டிருப்பதாலும், அரசியல் தொடர்பான ஏதாவது முடிவை வைகோ உருவாக்கி வைத்துவிட்டுத்தான் இப்படி பேசுகிறாரோ? என மனம் வெம்புகிறார்கள்.