திமுகவுடன் கூட்டணிக்கு ஓகே சொன்ன வைகோ... மதிமுக கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் என்ன தெரியுமா.?

By Ajmal Khan  |  First Published Mar 7, 2024, 2:22 PM IST

. தமிழ்நாட்டில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையில் இயங்கி வரும் ‘இந்தியா கூட்டணி’ தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 40 தொகுதிகளிலும் வெற்றிக் கொடி நாட்ட வேண்டும் என்பதில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் உறுதியாக இருக்கிறது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.


மதிமுக தீர்மானம்

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிர்வாகக்குழு அவசரக் கூட்டம் இன்று காலை அவைத்தலைவர் ஆடிட்டர் ஆ. அர்ஜூனராஜ் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பொதுச்செயலாளர் வைகோ, பொருளாளர் மு.செந்திலதிபன், முதன்மைச் செயலாளர் துரை வைகோ, துணைப் பொதுச்செயலாளர்கள் மல்லை சத்யா, செஞ்சி ஏ.கே.மணி உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். அப்போது திமுக கூட்டணியில் தொடர்வது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 

Latest Videos

undefined

முதலாவது தீர்மானத்தில்  2014 ஆம் ஆண்டு இந்தியாவின் ஆட்சிப் பொறுப்புக்கு வந்த பாரதிய ஜனதா கட்சி, கடந்த பத்தாண்டு காலம் நாட்டின் பன்முகத்தன்மைக்கு எதிராகவும், அரசியல் சாசன நெறிமுறைகளை குழிதோண்டிப் புதைத்தும் எதேச்சதிகார ஆட்சியை நரேந்திர மோடி தலைமையில் நடத்திக்கொண்டிருக்கிறது.

இஸ்லாமியர். கிறிஸ்தவர்களுக்கு வாக்குகள் இல்லை

ஒரே நாடு; ஒரே மொழி; ஒரே பண்பாடு; ஒரே கலாச்சாரம் என்கிற இந்துத்துவ சனாதன சக்திகளின் கோட்பாட்டை நிலைநிறுத்தி இந்துராஷ்டிரத்தை உருவாக்குவதற்கு ஆட்சி அதிகாரத்தைப் பயன்படுத்தி வருகிறது. மாநில அரசுகளின் உரிமைகளைப் பறித்து, ஒற்றை அதிகார ஆட்சியை நடத்தி வருகிறது. இந்திய அரசமைப்புச் சட்டத்திற்கு சவால் விடும் வகையில் இந்துத்துவ சக்திகளின் நடவடிக்கைகள் எல்லை மீறிப் போய்க்கொண்டிருக்கின்றன. இந்திய அரசியல் சாசனத்தை மாற்றி அமைத்து, மனுதர்ம கோட்பாட்டை அரசியல் சட்டமாக்க வேண்டும், இந்தியா என்ற பெயரை மாற்ற வேண்டும்,

நாட்டின் தலைநகரமாக வாரணாசியை பிரகடனம் செய்ய வேண்டும். எதிர்கால இந்தியாவில் சிறுபான்மையினரான இசுலாமியர், கிறித்துவர் உள்ளிட்டோருக்கு வாக்குரிமை கிடையாது என்றெல்லாம் ஆர்.எஸ்.எஸ். பின்புலத்தில் இயங்குகிற இந்துத்துவ அமைப்புகள் தீர்மானம் நிறைவேற்றிக் கொண்டிருக்கின்றன. இந்திய நாட்டைச் சூழ்ந்திருக்கின்ற பாசிச இருளைப் போக்கி, ஜனநாயக வெளிச்சத்தை பாய்ச்சுவதற்கு இமயம் முதல் குமரி வரை ஜனநாயக முற்போக்கு சக்திகள் ஒன்றிணைந்து செயலாற்ற வேண்டிய வரலாற்றுக் கடமை இருக்கிறது.

திமுக கூட்டணி 40 இடங்களில் வெற்றி

அரசியல் சாசனத்தைப் பாதுகாக்கவும், நாடாளுமன்ற ஜனநாயகத்தை நிலைநிறுத்தவும் பா.ஜ.க. தலைமையிலான அரசை ஆட்சி பீடத்திலிருந்து அகற்றியே ஆக வேண்டும். இந்த நோக்கத்தோடு தேசிய மற்றும் மாநில கட்சிகளும் இணைந்து அமைத்துள்ள ‘இந்தியா கூட்டணி’ 18 ஆவது மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற வேண்டும். தமிழ்நாட்டில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையில் இயங்கி வரும் ‘இந்தியா கூட்டணி’ தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 40 தொகுதிகளிலும் வெற்றிக் கொடி நாட்ட வேண்டும் என்பதில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் உறுதியாக இருக்கிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இரண்டாவது தீர்மானத்தில் பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் இருந்து அணுஉலைகளுக்கும், அணுக்கழிவு மையங்களுக்கும் எதிர்ப்பு வந்தால் அத்திட்டங்களைக் கைவிடும் ஒன்றிய பா.ஜ.க அரசு, தமிழ்நாட்டில் தொடர்ந்து இத்தகைய நாசகாரத் திட்டங்களைக் கொண்டு வருகிறது. தமிழ்நாட்டிற்கு வெள்ள பாதிப்பிற்கு நிதி கொடுங்கள், எய்ம்ஸ் மருத்துவமனையைக் கட்டித் தாருங்கள் என கோரிக்கை வைத்தால், அவற்றையெல்லாம் கண்டுகொள்ளாத ஒன்றிய பா.ஜ.க. அரசு, நியூட்ரினோ, ஹைட்ரோகார்பன், அணுஉலை, ஈனுலை என தொடர்ந்து சுற்றுச்சூழலுக்கும் மனிதர்களுக்கும் ஆபத்தானத் திட்டங்களையே திணிக்க நினைக்கிறது.

தமிழத்தில் பாதிப்பை ஏற்படுத்தும் திட்டங்கள்

தமிழ்நாட்டின் தலைநகர் சென்னைக்கும், வட தமிழ்நாட்டுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் இத்திட்டத்தை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. எனவே ஒன்றிய பா.ஜ.க. அரசு உடனடியாக இத்திட்டத்தைக் கைவிட வேண்டும் என்றும், தமிழ்நாடு அரசு முனைந்து தடுத்து நிறுத்த வேண்டும் என்றும் மதிமுக நிர்வாகக் குழு வலியுறுத்துகிறது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்

திமுகவில் Vitamin M இருந்தால் மட்டுமே அங்கீகாரம்..! ஸ்டாலினுக்கு எதிராக சீறிய சிம்லா முத்து சோழன்

click me!