
பெண்களை தூக்கி பேசுவதோ, ஆண்களை மட்டம் தட்டிப் பேசுவதோ ஒருபோதும் பாலின சமத்துவம் ஆகாது என சென்னை மேயர் பிரியா ராஜன் பேசியுள்ளார். தனது முதல் மேடையிலேயே அவர் அனல் தெறிக்க பேசியிருப்பது அங்கிருந்த அதிகாரிகளை வாயடைக்க வைத்துள்ளது. அதிலும் பாலின சமத்துவம் குறித்து பேசியுள்ள அவரது பேச்சை அங்கிருந்த பலரும் பாராட்டினர்.
நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி மன்ற தேர்தலில் 21 மாநகராட்சிகளையும் திமுகவே கைப்பற்றியது. உள்ளாட்சி மன்றங்களில் பெண்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீட்டு என முன்னாள் முதல்வர் கருணாநிதி கொண்டு வந்த சட்டத்திருத்தத்தை முதல்வர் ஸ்டாலின் முழுமையாக நடைமுறைப் படுத்தியுள்ளார். இதன் காரணமாக 21 மாநகராட்சிகளில் 11 மாநகராட்சி மேயர்கள் பெண்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். அந்த வகையில் மிகவும் பழமையும், பாரம்பரியமும் மிக்க சென்னை மாநகராட்சி மேயராக முதல்முறையாக தலித் சமூகத்தை சேர்ந்த பெண் மேயர் நியமிக்கப்பட்டுள்ளார்.
பாரம்பரிய திமுக குடும்பத்தைச் சேர்ந்த பிரியா ராஜன் முன்னாள் திமுக சட்டமன்ற உறுப்பினர் செங்கை சிவத்தின் பெயர்த்தி ஆவார். திருவிக நகர் 74 ஆவது வார்டு உறுப்பினராக வெற்றி பெற்ற அவர் சென்னை மாநகராட்சியின் முதல் தலித் மேயராக நியமிக்கப்பட்டுள்ளார். 28 வயதான பிரியா ராஜன் சென்னை பல்கலைக்கழகத்தில் எம் காம் படித்துள்ளார். தனது 18வது வயதில் திமுகவின் தன்னை இணைத்துக் கொண்டவர். சென்னை மாநகராட்சி மேயராக உயர்ந்துள்ளார். இந்நிலையில் சென்னை மாநகராட்சி சார்பில் மகளிர் தின விழா இன்று கொண்டாடப்பட்டது. அதற்கான நிகழ்ச்சி ரிப்பன் கட்டிடத்தில் அம்மா மாளிகையில் நடைபெற்றது.
அதில் மேயர் பிரியா ராஜன் தலைமை தாங்கினார். மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி, மாநகராட்சியில் பணியாற்றும் பெண்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அதில் பாலின சமத்துவம் என்ற தலைப்பில் பிரியா ராஜன் பேசினார். இது அவரின் முதல் மேடைப்பேச்சு ஆகும். அப்போது பேசிய அவர் முதலில் நான் பெண்ணாகப் பிறந்ததில் மகிழ்ச்சியும் பெருமையும் கொள்கிறேன். நாட்டுக்கு பெண்கள் எவ்வளவு முக்கியம் என்பதை உள்ளாட்சித் தேர்தலில் 50 சதவீத இட ஒதுக்கீடு குறித்து முதல்வர் நிரூபித்துள்ளார். ஒருவகையில் பெண்களை தூக்கி பேசுவது, அல்லது ஆண்களை தாழ்த்தி பேசுவது பாலின சமத்துவம் ஆகாது. ஏனெனில் ஒவ்வொரு பெண்களின் முன்னேற்றத்திற்கு பின்னால் கண்டிப்பாக ஒரு ஆண் இருப்பார்.
சென்னை மாநகராட்சியை பொறுத்த வரையில் எல்லா தேவைகளையும் பூர்த்தி செய்ய என்னால் முடிந்த அளவிற்கு சிறப்பாக செயல்படுவேன் என அவர் பேசினார். தனது முதல் மேடையிலேயே பாலின சமத்துவம் குறித்து அவர் பேசியுள்ள இந்த பேச்சு அங்கிருந்த பலரையும் கவர்ந்தது. அங்கிருந்தவர்கள் அவரின் பேச்சை கைத்தட்டி வரவேற்றனர். பிரியா இளம் பெண் மேயர், மிகவும் சைலண்டானவர் என எண்ணி இருந்த நிலையில் பிரியா ராஜன் முதல் மேடையிலேயே தனது ஆற்றல் மிக்க பேச்சை வெளிப்படுத்தியிருப்பது அதிகாரிகளை வாயடைக்க வைத்துள்ளது.