கொலையாளி யுவராஜ்க்கு 3 ஆயுள் தண்டனை.. சாதி வெறியர்களுக்கு இது பாடமாக இருக்கட்டும். கோகுல்ராஜ் தாயார் உருக்கம்.

Published : Mar 08, 2022, 04:56 PM IST
கொலையாளி யுவராஜ்க்கு 3 ஆயுள் தண்டனை.. சாதி வெறியர்களுக்கு இது பாடமாக இருக்கட்டும். கோகுல்ராஜ் தாயார் உருக்கம்.

சுருக்கம்

கொடூரமான இந்த கொலைக்கு தூக்கு தண்டனை தான் கேட்டேன், ஆனால் ஆயுள் தண்டனை கிடைத்திருக்கிறது, குற்றவாளிகளுக்கு தண்டனை கிடைத்திருப்பதை வரவேற்கிறேன், சாதி ஆணவத்  திமிர் பிடித்தவர்களுக்கு இது ஒரு பாடமாக இருக்கட்டும். 

கோகுல்ராஜ் கொலை வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட நிலையில் தீரன் சின்னமலை கவுண்டர் பேரவை நிறுவனர் யுவராஜ் மற்றும் அவரது கார் ஓட்டுநர் மூன்று ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 8 பேருக்கு ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது. கோகுல் ராஜ் மரணம் தற்கொலை அல்ல அது கொடூர கொலை என நிரூபிக்கப்பட்ட நிலையில் மதுரை வன்கொடுமை வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றம் இந்த தீர்ப்பை கொடுத்துள்ளது. இந்த தீர்ப்பு சாதியத்துக்கு, சாதி ஆணவத்திற்கு கிடைத்த மரண அடியாகவே கருதப்படுகிறது.

சேலம் மாவட்டம் ஓமலூரை சேர்ந்த பொறியியல் கல்லூரி மாணவர் கோகுல்ராஜ், கடந்த 2015ஆம் ஆண்டு  நாமக்கல் மாவட்டம் தொட்டிபாளையம் ரயில் தண்டவாளத்தில் கழுத்து துண்டிக்கப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். கோகுல்ராஜ் பட்டியலின சமூகத்தை சேர்ந்தவர் ஆவார். அவர் வேறு சமூக பெண்ணை காதலித்ததால் அவர் ஆணவ படுகொலை செய்யப்பட்டதாக விசாரணையில் தெரியவந்தது.

அந்த வழக்கில் தீரன் சின்னமலை கவுண்டர் பேரவையின் நிறுவனர் யுவராஜ் மற்றும் அவரின் கார் ஓட்டுநர் அருண், சிவகுமார், சங்கர், அருள், செந்தில், செல்வகுமார், சதீஷ்குமார், ரஞ்சித், அழகு என்கிற ஸ்ரீதர், செல்வராஜ்  உள்ளிட்ட 15க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கு நாமக்கல்  மாவட்டத்தில் நடந்து வந்தது. ஆனால் கோகுல்ராஜின் தாயார் சித்ரா நாமக்கல் மாவட்டத்தில் வழக்கு நடப்பது தங்களுக்கு பாதுகாப்பு இல்லை, எனவே அதை வேறு மாவட்டத்திற்கு மாற்ற வேண்டும்  என நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். பின்னர் அந்த வழக்கு மதுரை வன்கொடுமை சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது.

கோகுல்ராஜ் வழக்கில் 10 பேர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டு இரண்டு ஆண்டுகளாக வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் மார்ச் 5ஆம் தேதி தீர்ப்பு வெளியானது. அதில் அவரது கார் ஓட்டுநர் அருண், சதீஷ், செல்வராஜ், ரஞ்சித், சந்திரசேகர், பிரபு, ஸ்ரீதர் ஆகிய 10 பேர் குற்றவாளிகள் என்றும் மீதமுள்ள 5 பேர் விடுதலை செய்யப்பட்டனர். இந்த வழக்கில் தண்டனை விவரம் குறித்து இன்று தீர்ப்பு அறிவிக்கப்படும் என ஏற்கனவே  தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று காலை  11 மணிக்கு நீதிமன்றம் கூடியது.  

அப்போது நீதிபதி சம்பத் குமார் தீரன் சின்னமலை கவுண்டர் பேரவை நிறுவனர் யுவராஜ் மற்றும் அவரது கார் ஓட்டுநர் அருண்  ஆகியோர் தலித் சமூகத்தை சேர்ந்த இளைஞரை கொடூரமாக கொலை செய்த காரணத்திற்காக அவர்களுக்கு மூன்று ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். மீதமுள்ள 8 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது அதில் பிரபு கிரிதர் ஆகியோருக்கு கூடுதலாக 5 ஆண்டு கடுங்காவல் தண்டனையும் 5 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கப்பட்டது.

இந்த தீர்ப்பு குறித்து கருத்து தெரிவித்துள்ள கோகுல்ராஜின் தாயார் சித்ரா தன் மகனுக்கு ஏற்பட்ட கொடுமை வேறு எவருக்கும் ஏற்படக்கூடாது, இது சாதி ஆணவத்திற்கு கிடைத்த தண்டனையாக பார்க்கிறேன், இந்த தீர்ப்புக்காக போராடிய வழக்கறிஞர் பாபா மோகன், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன், வழக்கை விசாரித்த சிபிசிஐடி போலீசார், சரியாக பிரேதப் பரிசோதனை செய்து அறிக்கை வழங்கிய மருத்துவர் என அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த வழக்கை முறையாக விசாரிக்க உறுதுணயாக இருந்த இந்த நேர்மையான ஆட்சியும் காரணமாக இருந்துள்ளது. அதனால் முதல்வருக்கு நன்றி எனது மகனை இழந்து ஒவ்வொருநாளும் கண்ணீரில் வாழ்ந்து வருகிறேன். எனது நிலை எந்த தாய்க்கும் ஏற்படக்கூடாது. கொடூரமான இந்த கொலைக்கு தூக்கு தண்டனை தான் கேட்டேன், ஆனால் ஆயுள் தண்டனை கிடைத்திருக்கிறது, குற்றவாளிகளுக்கு தண்டனை கிடைத்திருப்பதை வரவேற்கிறேன், சாதி ஆணவத்  திமிர் பிடித்தவர்களுக்கு இது ஒரு பாடமாக இருக்கட்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார். 
 

PREV
click me!

Recommended Stories

ஸ்டாலின் ரெடியாக இருங்க.. அடுத்த டார்கெட் தமிழ்நாடு தான்.. பிரதமர் மோடி மண்ணில் அமித்ஷா சபதம்!
ரூ.1,020 கோடி ஊழல்? ED-க்கும், பாஜகவுக்கும் அஞ்ச மாட்டோம்.. கே.என்.நேரு விளக்கம்!