மாவட்டச் செயலாளர்களிடம் பேசச் சொல்லுங்க..! திருமாவிற்கு பிடிகொடுக்காத மு.க.ஸ்டாலின்..!

By Selva KathirFirst Published Aug 7, 2021, 11:43 AM IST
Highlights

திமுகவில் உள்ள கூட்டணிக்கட்சிகளும் உள்ளாட்சித் தேர்தல் கணக்குகளை போட்டு வருகிறது. வழக்கமாக தேர்தல் அறிவித்தத பிறகு தான் கூட்டணி விஷயங்களை திமுக தொடங்கும்.ஆனால் இந்த முறை திருமாவளவன் முன்கூட்டியே கூட்டணி பேச்சுவார்த்தையை தொடங்கி வைத்துள்ளார். 

உள்ளாட்சித் தேர்தல் இடப்பங்கீடு தொடர்பாக பேசச் சென்ற திருமாவளவனுக்கு சென்னை அண்ணா அறிவாலயத்தில் எதிர்பார்த்த பதில் கிடைக்கவில்லை என்கிறார்கள்.

கொரோனா 2ம் அலை கட்டுக்குள் வந்த சூழலில் பள்ளிகளை திறக்க தமிழக அரசு முடிவெடுத்துள்ளது. இதனால் ஏற்கனவே அறிவித்தபடி ஒன்பது மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுவது ஏறக்குறைய உறுதியாகியுள்ளது. திமுகவும் இந்த ஒன்பது மாவட்டங்களில் செயல்வீரர்கள் கூட்டத்தை கூட்டி தேர்தலுக்கு தயாராகி வருகிறது. இந்த நிலையில் திமுகவில் உள்ள கூட்டணிக்கட்சிகளும் உள்ளாட்சித் தேர்தல் கணக்குகளை போட்டு வருகிறது. வழக்கமாக தேர்தல் அறிவித்தத பிறகு தான் கூட்டணி விஷயங்களை திமுக தொடங்கும்.

ஆனால் இந்த முறை திருமாவளவன் முன்கூட்டியே கூட்டணி பேச்சுவார்த்தையை தொடங்கி வைத்துள்ளார். இது தொடர்பாக பேச முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்திக்க திருமாவளவன் நேரம் கேட்டிருந்தார். உடனடியாக அவருக்கு நேரம் கொடுக்கப்பட்டது. இதனை அடுத்து நேற்று மாலை அண்ணா அறிவாலயம் சென்ற திருமாவளவன் சுமார் அரை மணி நேரம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் பேசிக் கொண்டிருந்தார். அப்போது முழுக்க முழுக்க உள்ளாட்சித் தேர்தல் கூட்டணி, இடப்பங்கீடு தொடர்பாக மட்டுமே பேசப்பட்டுள்ளது.

அதிலும் குறிப்பாக மேயர், நகராட்சி தலைவர், பேரூராட்சி தலைவர், ஒன்றியத் தலைவர் போன்ற பதவிகளுக்கு மறைமுக தேர்தலை தவிர்க்க வேண்டும் என்று திருமா வலியுறுத்தியதாக கூறுகிறார்கள். மக்களே இவர்களை நேரடியாக தேர்வு செய்ய வழிவகுக்க வேண்டும் என்றும் திருமா கேட்டுக் கொண்டதாக சொல்கிறார்கள். மேலும் கடலூர், விழுப்புரம் நகராட்சி தலைவர் பதவிகளை விசிகவிற்கு வழங்க வேண்டும் என்று திருமா ஸ்டாலினிடம் வெளிப்படையாகவே கேட்டதாகவும் கூறுகிறார்கள். இது தவிர விழுப்புரம் மாவட்டத்திற்கு உட்பட்ட சில முக்கிய ஒன்றியத் தலைவர் பதவிகளையும் திருமா வலியுறுத்தியதாக சொல்கிறார்கள்.

அனைத்தையும் பொறுமையாக கேட்டுக் கொண்ட ஸ்டாலின் ஒரே வார்த்தையில் உள்ளாட்சித் தேர்தல் இடப்பங்கீடு குறித்து மாவட்டச் செயலாளர்களிடம் தான் பேச வேண்டும் என்று கூறிவிட்டதாக சொல்கிறார்கள். மேலும் தேர்தல் அறிவித்த பிறகு தங்கள் கட்சி மாவட்டச் செயலாளர்களை தொடர்பு கொள்ளுமாறும் திருமாவை ஸ்டாலின் அறிவுறுத்தியதாக கூறுகிறார்கள். மேலும் தேர்தலுக்கு குறுகிய காலமே இருப்பதால் இப்போதைக்கு மறைமுகமாகவே தலைவர் பதவிகளுக்கு தேர்தல் நடத்த முடியும் என்றும், நகர்புற உள்ளாட்சித் தேர்தல் நடத்துவதற்கு முன்னதாக நேரடி தேர்தல் குறித்து பேசலாம் என்று திருமாவை ஸ்டாலின்  அ னுப்பி வைத்ததாக அறிவாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதனிடையே கவுன்சிலர்கள் தலைவர்களை தேர்வு செய்யும் வகையில் தேர்தல் நடைபெற்றால் தங்கள் கட்சி கவுன்சிலர்கள் விலை போய்விடுகிறார்கள் என்பதால் தான் நேரடித் தேர்தலை திருமா வலியுறுத்தியதாக பேசிக் கொள்கிறார்கள்.

click me!