மே 2 வாக்கு எண்ணிக்கை..! கப்சிப் அமமுக..! தொடர்பு எல்லைக்கு வெளியில் தேமுதிக!

By Selva KathirFirst Published Apr 26, 2021, 10:51 AM IST
Highlights

மே 2ந் தேதி வாக்கு எண்ணிக்கைக்கு திமுக, அதிமுக ஆகிய கட்சிகள் சுறுசுறுப்பாக தயாராகி வரும் நிலையில் அமமுக மற்றும் தேமுதிக தரப்பில் எவ்வித சலனமும் இல்லாமல் அமைதியாக இருக்கிறார்கள்.

பொதுவாக வாக்கு எண்ணிக்கையின் போது ஒரு தொகுதிக்கு ஒரு வேட்பாளருக்கு ஒரு பிரதான ஏஜென்ட் மற்றும் வாக்குப்பதிவு எந்திரங்களுக்கு தகுந்தவாறு உதவி ஏஜென்டுகள் அனுமதிக்கப்படுவர். எண்ணப்படும் வாக்குகள் சரியானவை என்பதை உறுதிப்படுத்துவது இந்த ஏஜென்டுகளின் பணியாகும். வாக்கு எண்ணிக்கை காலை 8மணிக்கு துவங்கினாலும் முதல் நாள் இரவில் இருந்தே ஏஜென்டுகள் தங்கள் பணிகளை துவங்கவேண்டும். மேலும் காலை 6மணிக்கு எல்லாம் வாக்கு எண்ணும் மையத்திற்குள் சென்று வாக்கு எந்திரங்களின் உள்ள அறையின் சீல் அப்போது தான் அகற்றப்படுகிறது என்பதை உறுதிப்படுத்துவது முதல் வாக்கு எண்ணிக்கை நிறைவு பெற்ற பிறகு தங்கள் வேட்பாளர்கள் பெற்ற வாக்குகளை உறுதிப்படுத்துவது வரை ஏஜென்டுகள் முக்கியமானவர்கள்.

இந்த ஏஜென்டுகள் சரியான நபர்களாக இல்லாத பட்சத்தில் கடும் போட்டி நிலவும் தொகுதிகளில் வேட்பாளர்கள் பெறும் வாக்குகளில் வித்தியாசம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே திமுக மற்றும் அதிமுக கட்சிகள் வாக்கு எண்ணும் மையத்திற்குள் செல்லும் ஏஜென்டுகளை மிகவும் கவனமாக தேர்வு செய்து அனுப்பும். வாக்குப்பதிவன்று பூத் ஏஜென்டுகளுக்கு என்று கணிசமான தொகையை வேட்பாளர்கள் செலவிட வேண்டும். அதே போல் வாக்கு எண்ணும் நாளிலும் ஏஜென்டுகளுக்கு என்று ஒரு கணிசமான தொகையை வேட்பாளர்கள் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். திமுக அதிமுகவை பொறுத்தவரை அது ஒரு பிரச்சனையே இல்லை.

வாக்கு எண்ணும் மையத்திற்குள் ஏஜென்டுகளாக செல்பவர்களுக்கு தேவையான அனைத்தும் கச்சிதமாக ஏற்கனமே செய்துமுடிக்கப்பட்டுவிட்டது. ஆனால் தமிழகத்தின் 3வது அணி என்கிற முழக்கத்தோடு களம் இறங்கிய அமமுக வேட்பாளர்கள் தற்போது வரை முழுமையாக வாக்கு எண்ணும் மையங்களுக்கான ஏஜென்டுகளை போடவில்லை என்கிறார்கள். குறிப்பிட்ட சில தொகுதிகளின் வேட்பாளர்கள் மட்டுமே முழு அளவில் ஏஜென்டுகளை போட்டு வாக்கு எண்ணிக்கைக்கு தயாராகியுள்ளதாகவும் எஞ்சிய அமமுக வேட்பாளர்கள் வாக்கு எண்ணிக்கைக்கு பெரிய அளவில் ஆர்வம் காட்டவில்லை என்கிறார்கள்.

இதே போல் தேமுதிகவை பொறுத்தவரை பிரேமலதா போட்டியிடும் விருதாச்சலம் தொகுதியில் மட்டுமே கவுண்டிங் ஏஜென்டுகள் முழு அளவில் போடப்பட்டுள்ளதாகவும் எஞ்சிய 59 தொகுதிகளில் ஏஜென்டுகள் பெயரளவிற்கு போடப்பட்டுள்ளதாகவும் தற்போது வரை அவர்களுக்கு தேவையான விஷயங்கள் செய்து கொடுக்கப்படவில்லை என்கிறார்கள். தேர்தல் செலவுகளை கட்சியே பார்த்துக் கொள்ளும் என்று கூறியே தேமுதிக வேட்பாளர்களை அறிவித்ததாக சொல்கிறர்கள். அந்த வகையில் தேர்தல் முடிந்த பிறகு தேர்தல் செலவுகளை தேமுதிக பக்காவாக செட்டில் செய்து வருகிறது.

இந்த நிலையில் வாக்கு எண்ணிக்கைக்கு செலவுக்கு பணம் தேவை என்று வேட்பாளர்கள், மாவட்டச் செயலாளர்கள் தேமுதிக தலைமையை கடந்த வாரத்தில் தொடர்பு கொண்டதாக சொல்கிறார்கள். இந்த நிலையில் வாக்கு எண்ணிக்கை நாள் நெருங்கி வரும் நிலையில் கவுண்டிங் ஏஜென்டுகளுக்கான செலவுக்கு பணம் கேட்க கட்சித் தலைமையை வேட்பாளர்கள் தொடர்பு கொண்டால் தொடர்பு எல்லைக்கு வெளியில் இருப்பதாக பதில் வருவதாக கூறுகிறார்கள்.

click me!