
தேர்தலில் ஜெயிப்பதற்கு இரட்டை இலை சின்னம் இருந்தால் மட்டுமே போதாது என்றும் ஜெயலலிதா உயிருடன் இருந்தபோது இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்ட நத்தம் விஸ்வநாதனும், வைத்திலிங்கமும் தோற்றுப் போனார்கள் என டி.டி.வி.தினகரன் ஆதரவாளர் மாரியப்பன் கென்னடி தெரிவித்துள்ளார்.
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஓர் அணியும், டி.டி.வி.தினகரன் தலைமையில் ஓர் அணியும் என அதிமுக இரண்டாக உடைந்து செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில் அதிமுகவின் சின்னமான இரட்டை இலையை கைப்பற்ற இரு அணிகளும் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. இது தொடர்பாக தேர்தல் ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது.
இதனிடையே இரு அணியினரும் இரட்டை இலை எங்களுக்கே சொந்தம் என உரிமை கொண்டாடி வருகின்றன.
இது தொடர்பாக மானாமதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய டி.டி.வி.தினகரன் ஆதரவாளரும், தகுதி நீக்கம் செய்யப்பட்ட மானாமதுரை தொகுதி எம்எல்ஏவுமான மாரியப்பன் கென்னடி, தேர்தலில் ஜெயிப்பதற்கு சின்னம் மட்டும் போதாது என அதிரடியாக தெரிவித்துள்ளார்.
நியாயமாக பார்த்தால் இரட்டை இலை சின்னம் தங்களுக்கே சொந்தம் என்று தெரிவித்த அவர், ஜெயலலிதா உயிருடன் இருந்தபோது இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்ட நத்தம் விஸ்வநாதனும், வைத்திலிங்கமும் தோற்றுப் போனார்களே என தெரிவித்தார்.
அதனால் வெறும் இரட்டை இலை சின்னத்தை மட்டும் வைத்துக்கொண்டு தேர்தலில் போட்டியிட்டு ஜெயித்துவிட முடியாது என்று மாரியப்பன் கென்னடி தெரிவித்தார்.