
நாட்டின் தற்போதைய பிரதமரான நரேந்திர மோடிதான் தங்கள் மாநிலத்தின் சிறந்த முதலமைச்சர் என்று இப்போதும் பிடிவாதமாக இருக்கிறார்கள் குஜராத் மக்கள். இது ஆங்கிலத் தொலைக்காட்சியுடன் விஎம்ஆர் அமைப்பு இணைந்து நடத்திய ஒரு கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளது.
குஜராத்தில் வரும் டிசம்பர் மாதம் தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்காக சில தனியார் நிறுவனங்களின் சார்பில் கருத்துக் கணிப்புகள் எடுக்கப்பட்டு அதன் முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில், ஆறாவது முறையாக பாஜக.,வே ஆட்சியைத் தக்க வைக்கும் என்று தெரியவந்துள்ளது. கடந்த 2012 தேர்தல் முடிவுகளைக் காட்டிலும் இம்முறை அதிக இடங்களை பாஜக., கைப்பற்றும் என்று கணிப்புகள் தெரிவிக்கின்றன.
இந்த சர்வே முடிவுகளில் ஆச்சரியப் படும் விதமாக, மோடியைத்தான் அங்குள்ள மக்கள் மீண்டும் தங்கள் மாநிலத்தின் முதல்வராக வரவேண்டும் என்று விருப்பம் தெரிவித்துள்ளதுதான்.
இந்த முறை பாஜக.,வுக்கு 118-134 இடங்கள் கிடைக்கலாம் என்றும் காங்கிரஸுக்கு 49-61 இடங்கள் கிடைக்கலாம் என்றும் பாஜக,.வுக்கு 52 சதமும் காங்கிரஸுகு 37 சதமும் வாக்கு சதவீதம் இருக்கும் என்றும் கூறப்படுகிறது.
மக்களிடம் வைத்த கேள்விகளில், சர்தார் வல்லப பாய் படேலுக்கு அமையும் சிலை குஜராத்தின் கௌரவத்தை உயர்த்துமா என்ற கேள்விக்கு, 46 சதவீதம் பேர் ஆமாம் என்று கூற, 32 %பேர் இது தேர்தல் ஸ்டண்ட் என்று கூறியுள்ளனர். பண மதிப்பிழப்பு நடவடிக்கை, ஜிஎஸ்டி ஆகியவற்றின் பின்னர், வாழ்க்கைத் தரம் எப்படி உள்ளது என்று கேட்டதற்கு, 40% பேர் மோசமடைந்துள்ளதாகவும், 28 % பேர் வாழ்க்கைத் தரம் உயர்ந்துள்ளதாகவும், 14% பேர் ஓரளவு உயர்ந்துள்ளதாகவும், 18 % பேர் எந்த மாற்றமும் இல்லை என்றும் கூறியுள்ளனர்.
அரசமைக்க எந்தக் கட்சிக்கு தகுதி உள்ளது என்ற கேள்விக்கு 50% பேர் பாஜக., என்றும், 44% பேர் காங்கிரஸ் என்றும் கூறியுள்ளனர்.
இவை எல்லாவற்றையும் விட முக்கியமான கேள்வி, கடந்த 5 வருடங்களில் மிகச் சிறந்த முதல்வர் யார் என்று கேட்டபோது, 67% பேர் மோடியையும், ஆனந்திபென் படேல் என்று 20% பேரும், 13% பேர் விஜய் ரூபானியையும் கைகாட்டியுள்ளனர். மோடிக்கு இப்போதும் ஆதரவு உள்ளதால், வடக்கு குஜராத்தில் 60ல் இருந்து 81 % வாக்குகளைப் பெற பாஜக., முயற்சி செய்து வருகின்றனர்.