
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலின்போது பணப்பட்டுவாடா செய்யப்பட்டது தொடர்பாக டெங்கு பாஸ்கர்(அமைச்சர் விஜயபாஸ்கர்) மீது போடப்பட்ட வழக்குகளில் இதுவரை நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.
ஸ்டாலினின் சொந்த தொகுதியான சென்னை கொளத்தூர் தொகுதியில் ரயில்வே மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்துவிட்டு பல்வேறு நலத்திட்டங்களையும் தொடங்கிவைத்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின், உள்ளாட்சி அமைப்புகளுக்கான பிரதிநிதிகள் இல்லாததால் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாத நிலை இருப்பதாக குற்றம்சாட்டினார். வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு அரசிடம் வலியுறுத்தியிருப்பதாகவும் எனினும் அரசை நம்பி பயனில்லை என்பதால் திமுகவினர் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஈடுபட அறிவுறுத்தியிருப்பதாகவும் தெரிவித்தார்.
இரட்டை இலை சின்னம் ஒதுக்கப்பட்ட பிறகுதான் ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் நடத்தப்படும் என பரவும் கருத்து தொடர்பாக ஸ்டாலினிடம் கேள்வி கேட்கப்பட்டது.
அதற்கு, ஒருவேளை அப்படி நடந்தால் அதைவிட பெரிய ஜனநாயகப் படுகொலை இருக்கவே முடியாது. முன்னர் 89 கோடி ரூபாய் பணப்பட்டுவாடாவில் ஈடுபட்டதால்தான் தேர்தல் நிறுத்திவைக்கப்பட்டது. அப்போது அ.தி.மு.க-வினர் பலர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அதுகுறித்து இன்றுவரை எந்த முடிவும் தெரியவில்லை. குட்கா பாஸ்கர்... மன்னிக்கணும் டெங்கு பாஸ்கர் உட்பட பலர் மீது வழக்குகள் நிலுவையில் உள்ளனவே என்று ஸ்டாலின் தெரிவித்தார்.