
எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவை திருச்சியில் வைக்கப்பட்டிருக்கும் பேனர்கள் தொடர்பாக மாலை 4 மணிக்குள் பதிலறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
உயிருடன் இருப்பவர்களுக்கு கட் அவுட்களோ பேனர்களோ வைக்கக்கூடாது எனவும் பொதுமக்களுக்கும் போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படுத்தும் வகையில் கட் அவுட்கள், பேனர்கள் வைக்கக்கூடாது எனவும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சுற்றுச்சூழல் பாதுகாப்பை உறுதிசெய்யும் வகையில் பேனர்கள் வைக்கப்படுவது தொடர்பாக உள்ளாட்சி நிர்வாகங்கள் கண்காணிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டிருந்தது.
ஆனால், எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு திருச்சி முழுவதும் பேனர் மயமாக உள்ளது. இதனால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படுகிறது. பேனர் கலாச்சாரத்துக்கு எதிராக தொடர்ந்து போராடிவரும் சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி, திருச்சியில் பேனர்கள் வைக்கப்பட்டிருப்பதற்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இன்று, எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட உள்ள நிலையில், ராமசாமியின் வழக்கை விசாரித்த நீதிமன்றம், திருச்சியில் அனுமதி பெற்று மற்றும் அனுமதி பெறாமல் வைக்கப்பட்ட பேனர்கள் எத்தனை என்பது தொடர்பாக மாலை 4 மணிக்குள் தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டது.