
பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்ததாக யூடியூபர் மாரிதாஸ் மீது தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டது. மாரிதாஸ் மீது தேசத்துரோக வழக்கு பதிவு செய்தது செல்லாது என நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது. இந்த உத்தரவு பாஜக மற்றும் அவரது ஆதரவாளர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை சூர்யா நகர் பகுதியை சேர்ந்தவர் மாரிதாஸ். (43) இவர் சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து பிரதமர் மோடி மற்றும் பாஜகவுக்கு ஆதரவாக கருத்துக்களை பதிவிட்டு வருகிறார். தமிழக சட்டசபை தேர்தலின் போது பாகிஸ்தானை ஆதரிக்கும் திமுகவைத் தடைசெய்ய வேண்டுமென பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. திமுக எதிர்க்கட்சியாக இருந்த போதிலிருந்தே யூடியூபர் மாரிதாஸ் திமுகவையும், அக்கட்சித் தலைவர் ஸ்டாலின் மற்றும் அவரது குடும்பத்தினரையும் கடுமையாக விமர்சித்து வருகிறார். திமுகவுக்கு பல சமூக விரோத கும்பல்களுடன் தொடர்பு உள்ளது என்பது போன்ற சர்ச்சைக்குரிய கருத்துகளையும் அவர் கூறிவருகிறார். இந்நிலையில் கடந்த 8ஆம் தேதி குன்னூரில் நடந்த ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் பாதுகாப்பு படை தலைவர் பிபின் ராவத் பயணித்த ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது. அதில் 13 பேர் உயிரிழந்தனர். இந்த கோர சம்பவம் ஒட்டுமொத்த நாட்டையும் உலுக்கியுள்ளது. இந்த சம்பவத்தை மேற்கோள்காட்டி சர்ச்சைக்குரிய கருத்து ஒன்றை மாரிதாஸ் பதிவிட்டிருந்தார். அந்தக் கருத்தின் அடிப்படையில் போலீசார் அவரை கைது செய்தனர்.
அதாவது தனது டுவிட்டர் பக்கத்தில் " திமுக ஆட்சியின் கீழ் தமிழகம் இன்னொரு காஷ்மீராக மாறுகிறதா? தேசத்திற்கு எந்த பெரிய துரோகத்தையும் செய்யக்கூடிய ஒரு கூட்டத்தை உருவாக்கி வைத்துக் கொள்ள இங்கே சுதந்திரம் இருக்கும் என்றால், இங்கே எந்தப் பெரிய சதிவேலை நடப்பதற்கும் சாத்தியமுண்டு. பிரிவினைவாத சக்திகள் ஒடுக்கப்பட வேண்டும் என்ன பதிவிட்டிருந்தார். அவரின் இந்த பதிவு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அதாவது காஷ்மீரைப்போல தமிழகம் தீவிரவாத கூடாரமாக மாறி வருகிறதா என்ற தொனியில் அவரது இந்த பதிவு இருப்பதாக கூறி, போலீசார் அவரை கைது செய்துள்ளனர். இதேபோல முப்படைத் தளபதி இறப்பின் பின்னணியில் தீவிரவாத இயக்கங்களின் தலையீடு இருப்பதாக சமூக வலைதளத்தில் வதந்திகளை பரப்பிய இன்னும் சிலரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்நிலையில் மாரிதாசின் கைது நடவடிக்கை பாஜக மற்றும் அவரது ஆதரவாளர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. மாரிதாசின் கைது நடவடிக்கையை தமிழக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை மிக வன்மையாக கண்டித்து வருகிறார்.
இதுதொடர்பாக கடந்த சிலதினங்களுக்கு முன்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மாரிதாஸ் கைது செய்யப்பட்ட செய்தியை கேட்டறிந்து அவரிடம் தொலைபேசி மூலம் உரையாடினேன், ஜனநாயகம் அளித்துள்ள கருத்துரிமை பொருட்படுத்தாமல் பாரபட்சமான இந்த நடவடிக்கையை வன்மையாக கண்டிக்கிறேன். திமுகவை விமர்சித்தால் மட்டும் கைதா? இதுதான் தற்போதைய தமிழ்நாட்டின் அவலநிலை என கூறியதுடன், தமிழகத்தில் டிஜிபி கட்டுப்பாட்டில் காவல்துறை இல்லை, தமிழக டிஜிபியை பொருத்தவரையில் சைக்கிளில் போவத, செல்பி எடுப்பது, போட்டோ எடுப்பது போன்றவற்றில் மகிழ்ச்சியாக இருந்து வருகிறார். ஆகவே ஆட்சியை நடத்துவது வேறு யாரோ, திமுகவுக்கு நான் ஒன்று சொல்லிக் கொள்கிறேன், அனைத்திற்கும் ஒரு எல்லை உண்டு, தமிழகத்தில் வன்முறையாக கருத்து பதிவு செய்தால் அது குறித்து வேறு எந்த மாநிலத்திலும் புகார் கொடுக்கலாம் என எச்சரித்திருந்தார். அவரின் இந்த கருத்து பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்த பரபரப்புகளுக்கு மத்தியில், மாரிதாஸ் நீதிமன்றத்தில் தனது கைதை எதிர்த்து நீதி மன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்தார்.
அதில், நான் சமூக சிந்தனையுடன் பொதுவான கருத்துக்களை முகநூலில், டுவிட்டர், யூடியூப் போன்ற சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகிறேன், இந்நிலையில் நவம்பர் 9ஆம் தேதி நாட்டின் முப்படை தளபதி விபத்தில் உயிரிழந்தது குறித்து யாரும் தேவையற்ற கருத்துக்களை பதிவிட வேண்டாம் என ட்வீட்டரில் தெரிவித்தேன். இது தொடர்பான புகாரில் போலீசார் வழக்கு பதிந்து கைது செய்துள்ளனர். என் மீது வழக்கு பதிவு செய்வதிலும் கைது நடவடிக்கையும் சட்டவிதிகள் பின்பற்றப்படவில்லை, எனவே என் மீதான வழக்கில் மேல் நடவடிக்கை எடுக்க தடை விதிக்கவும் வழக்கை ரத்து செய்ய உத்தரவிட வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன் என கோரியிருந்தார். இந்த மனு நீதிபதி ஜி.ஆர் சுவாமிநாதன் முன் திங்கட்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் மனுதாரரின் ட்விட்டர் கணக்கை இரண்டு லட்சம் பேர் பின் தொடர்கின்றனர். அவர்களின் தலைமை தளபதி குறித்த கருத்துக்களின் போது திமுக ஆட்சி தமிழகம் இன்னொரு காஷ்மீர் ஆக மாறுகிறதா என்ற வாக்கியம் இடம் பெற்றுள்ளது.
மனுதாரர் ஒரு கட்சியை சேர்ந்தவர் ஆவார். தமிழக அரசுக்கு எதிராக அரசியல் சூழ்ச்சியாக இருந்த வாசகத்தை பதிவிட்டுள்ளார். இவர் பதிவிட்டுள்ள கருத்துக்கள் மதரீதியாக தமிழக அரசுக்கு கலங்கத்தை ஏற்படுத்தும் வகையில் இடம்பெற்றுள்ளது. எனவே மனுதாரரின் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என அரசு தரப்பில் வாதிடப்பட்டது. அப்போது அரசுக்கு கேள்வி எழுப்பிய நீதிபதி, தலைமைத் தளபதி மரணம் குறித்து சந்தேகம் எழுப்பிய சுப்ரமணியசாமி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டதா.? மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் கொலையாக இருக்கலாம் என சந்தேகம் எழுப்பப்பட்டதே என கேள்வி எழுப்பினார். அப்போது உள்நோக்கத்துடன் பதிவு செய்யப்பட்டுள்ள இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும், எந்த உள்நோக்கத்துடனும் கருத்துக்களை ட்விட்டரில் பதிவிடவில்லை எனவும் அவர் மீதான வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என மனுதாரர் தரப்பில் எதிர் வாதம் வைக்கப்பட்டது.
இந்நிலையில் மீண்டும் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மரிதஸ் மீது வழக்கு பதிந்தது செல்லாது என நீதிபதி உத்தரவிட்டார். யூடியூபர் மாரிதாஸ் மீதான வழக்கை ரத்து செய்வதாகவும் அவர் கூறினார். இதேநேரத்தில் போலி இ-மெயில் மூலம் யூடியூப்பில் அவதூறு கருத்துக்களை பரப்பியதாக 2020 இல் பதியப்பட்ட வழக்கில் மாரிதாஸ் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த வழக்கு எழும்பூர் குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது. மாரிதாசுக்கு எதிராக தேச துரோக வழக்கு செல்லாது என நீதிமன்றம் அதை தள்ளுபடி செய்து உத்தரவிட்டிருப்பது மாரிதாஸ் ஆதரவாளர்கள் மத்தியில் உற்சாகத்தையும் மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.