ட்விட்டரில் மாரிதாஸ் பெயரை நாறடிக்கும் பாஜக எதிர்ப்பாளர்கள்... ட்ரெண்டிங்கில் #ப்ராடுமாரிதாஸ் ஹாஷ்டேக்!

By Asianet TamilFirst Published Sep 25, 2019, 10:17 PM IST
Highlights

பாகிஸ்தானுடன் திமுகவுக்கு தொடர்பு இருப்பதாக மாரிதாஸ் கூறியதற்கு விளக்கம் கேட்டு சம்மன் வந்திருப்பதாகக் கூறி ட்விட்டரில் இந்த ஹாஷ்டேக்கை திமுகவினரும் பாஜக எதிர்ப்பாளர்களும் அதிகமாகப் பகிர்ந்துவருகிறார்கள். மேலும் மாரிதாஸை கடுமையாக அர்ச்சனையும் செய்துவருகிறார்கள்.
 

பாஜகவின் அதி தீவிர ஆதரவாளரான மாரிதாஸ் பெயர் ட்விட்டரில் ப்ராடுமாரிதாஸ் என்ற பெயரில் இந்திய அளவில் டிரெண்டிங் அடித்திருக்கிறது.
பாஜக மற்றும் பிரதமர் மோடியின் அதிதீவிர ஆதரவாளராக இருந்துவருகிறார் மாரிதாஸ். திமுகவையும், அக்கட்சியின் தலைவர் மு.க. ஸ்டாலினையும் மிகக் கடுமையாக விமர்சித்து சமூக ஊடகங்களில் காணொலி காட்சிகள் வெளியிடுவது வழக்கம். இவரை பாஜகவினர் ஆயிரக்கணக்கில் பிந்தொடர்ந்துவருகிறார்கள். இவர் வெளியிடும் ஒவ்வொரு காணொலியையும் பாஜகவினர் இணையத்தில் பகிர்வதும் அதிகமாக நடக்கும்.


காஷ்மீருக்கு அளிக்கப்பட்டுவந்த 370-வது சிறப்பு சட்டத்தை மோடி அரசு விலக்கியபிறகு, அதை திமுக கடுமையாக எதிர்த்தது. இந்தியாவில் உள்ள கட்சிகளில் காஷ்மீர் விவகாரத்துக்காக திமுக போராட்டம் நடத்திகாட்டியது. இதனால், காணொலி காட்சிகளில் திமுகவை மிகக் கடுமையாகவும் பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத இயக்கங்களுடன் திமுகவுக்கு தொடர்பு இருப்பதாகவும் மாரிதாஸ் காணொலி காட்சியில் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.


இதனையடுத்து அவர் மீது நடவடிக்கைக் கோரி சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் திமுக புகார் கூறியது. அதன்பிறகும் திமுக மற்றும் ஸ்டாலின் மீதான மாரிதாஸின் காணொலி காட்சிகள் குறையவில்லை. இந்நிலையில் இன்று ப்ராடுமாரிதாஸ் என்ற ஹாஷ்டேக் ட்விட்டரில் தொடர்ந்து முன்னிலையில் இருந்துவருகிறது. பாகிஸ்தானுடன் திமுகவுக்கு தொடர்பு இருப்பதாக மாரிதாஸ் கூறியதற்கு விளக்கம் கேட்டு சம்மன் வந்திருப்பதாகக் கூறி ட்விட்டரில் இந்த ஹாஷ்டேக்கை திமுகவினரும் பாஜக எதிர்ப்பாளர்களும் அதிகமாகப் பகிர்ந்துவருகிறார்கள். மேலும் மாரிதாஸை கடுமையாக அர்ச்சனையும் செய்துவருகிறார்கள்.


விதவிதமான மீம்ஸ்களையும் வெளியிட்டு மாரிதாஸை கலாய்த்துவருகிறார்கள். இதனால், #ப்ராடுமாரிதாஸ் என்ற ஹாஷ்டேக் இந்திய அளவில் இரண்டாமிடத்தில் இருந்துவருகிறது. 

click me!