
’அநியாயமான ஆட்சி அதிகாரத்தின் மீது ஆதங்கப்படும் ஓவ்வொருவருமே மாவோயிஸ்டுதான்!’ என்று நக்சல்தனம் நியாயப்படுத்தப்படும் தேசம் இது. அதிகார மையங்களுக்கு எதிரான போராளி மக்கள் குழுக்கள் சரியானவையா? தவறானவையா? என்று பொதுஜனங்கள் மத்தியில் பல காலமாக நடந்து கொண்டிருக்கும் விவாதங்கள் இன்னமும் முடிவுக்கு வரவில்லை.
இந்தியாவை பொறுத்தவரையில் கணிசமான ஆண்டுகள் வரை வடகிழக்கு மாநிலங்கள் மட்டும்தான் மாவோயிஸ நடமாட்டத்துக்கான களங்களாக இருந்தன. ஆனால் கடந்த ஆறேழு ஆண்டுகளாக தென் இந்தியாவிலும் மாவோயிஸ்டுகள் தலை தூக்க துவங்கினர். ’வெஸ்டர்ன் கார்ட்ஸ் பட்டர்ஃபிளைஸ்’ (மேற்கு தொடர்ச்சி மலை வண்ணத்துப்பூச்சிகள்) எனும் பெயரில் கேரள, கர்நாடக மற்றும் தமிழக மாநிலங்களை இணைத்து அதன் மலைத்தொடர்களில் பதுங்கிக் கொண்டு செயல்பட்டு வருகின்றனர்.
தென் இந்தியாவில் கேரளத்தில் மாவோக்களின் நடமாட்டம் வெகு அதிகமாகவே இருந்தது 2014 முதல் 2017 வரை. காங்கிரஸ் ஆட்சி கேரளத்தில் இருந்தபோது பழங்குடி மக்களுக்கு சொந்தமான நிலங்களை கார்ப்பரேட் கம்பெனிகள் அத்துமீறலை நிகழ்த்தி ஆக்கிரமித்ததாகவும், பழங்குடிகளின் மண்ணிலேயே அவர்களை அடிமையாக்கி வைத்திருப்பதாகவும், அவற்றை மீட்டெடுக்கவே தாங்கள் போராளிகளாக மாறியிருப்பதாகவும் சொல்லி கிளம்பின மாவோயிஸ குழுக்கள்.
கேரளம் மற்றும் தமிழக பார்டர்களில் சிலபல துப்பாக்கி சூடுகள், பாலக்காட்டில் கார்ப்பரேட் கடைகள் உடைப்பு என்று நிகழ்ந்தன. மாவோயிஸ்டுகளை ஒடுக்கும் நோக்கில் கேரள அரசு ‘தண்டர் போல்ட்’ எனும் சிறப்பு போலீஸ் படையையும், தமிழக மற்றும் கர்நாடக அரசுகள் ஏற்கனவே வீரப்பன் தேடுதல் வேட்டைக்கு பயன்படுத்திய ‘ஸ்பெஷல் டார்கெட் ஃபோர்ஸ்’ போலீஸையும் பயன்படுத்த துவங்கின.
கேரளத்தில் சைலண்ட் வேலி வனப்பகுதி அருகே வனத்துறையின் ஜீப் எரிக்கப்பட்டு, வன அலுவலகம் மாவோயிஸ்டுகளால் தாக்கப்பட்ட பிறகு, ஸ்கெட்ச் போட்டு எதிர்தாக்குதலை நடத்தியது கேரள அரசு. இதன் விளைவாக மலப்புரம் அருகே பெண் மாவோ உட்பட சிலர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
இந்நிலையில், கேரளத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆட்சி அமைந்தபிறகு மெது மெதுவாக மாவோயிஸ்ட் செயல்பாடுகள் குறைந்தனர்.
இதற்கு ‘மாவோயிஸம் என்பது மார்க்சிஸத்தின் மிக நுண்ணிய கட்டமைப்புதான்.கம்யூனிஸ்ட் ஆளும் மாநிலத்தில் நாமே சட்ட ஒழுங்கை குழப்பிட கூடாது. நாம் அமைதியாக இருப்போம். அதற்கு கைமாறாக பழங்குடிகளின் உரிமைகளை பாதுகாக்கும் பொறுப்பை கேரள அரசு ஏற்று நடத்த வேண்டும்.’ என்று அறிவித்துவிட்டு அமைதியாக இருக்கின்றனர்.இதனால்தான் கேரளத்தில் கடந்த 2 ஆண்டுகளாக மாவோயிஸ்ட் நடமாட்டங்கள் குறைந்துள்ளன.
இந்நிலையில் கர்நாடக அரசும், மத்திய அரசும் காவிரி நீர் விவகாரத்தில் தமிழக விவசாயிகளை வஞ்சித்து வருவதால், கேரளாவில் திரிந்து கொண்டிருந்த மாவோயிஸ்டுகளின் முழு போராட்ட கவனமும் கர்நாடகா நோக்கி திரும்பியுள்ளது என்கிறார்கள். விரைவில் கர்நாடகாவை சேர்ந்த ஏதாவது ஒரு அணை மாவோயிஸ்டுகளின் தாக்குதலுக்கு ஆளாகலாம்! என்று மத்திய உளவுத்துறைக்கு ஒரு குறிப்பு கிடைத்துள்ளது.இதனால் ஏற்கனவே தேர்தல் பரபரப்பிலிருக்கும் கர்நாடகா மேலும் பெரிய அதிர்வுக்கு ஆளாகியிருக்கிறது.