சலசலப்புகளுக்கு பால் உற்பத்தியாளர்கள் அஞ்ச வேண்டாம்..! கோரிக்கையை நிறைவேற்றும் பணி தொடங்கியாச்சு- மனோ தங்கராஜ்

By Ajmal Khan  |  First Published May 29, 2023, 9:03 AM IST

வேறு நிறுவனங்கள் எதையும் கண்டு யாரும் அச்சப்படவில்லையென தெரிவித்துள்ள பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ்,  பொதுவாக ஒரு மாநிலத்தின் பால் உற்பத்தி பகுதியில் இன்னொரு மாநிலத்தின் பால் உற்பத்தி நிறுவனம் தலையியிடுவதில்லை கூறியுள்ளார். 
 


குறைந்த விலையில் பால் விற்பனை

தமிழகத்தில் ஆவின் நிறுவனத்திற்கு போட்டியாக குஜராத்தின் அமுல் நிறுவனம் பால் கொள்முதலை தொடங்க இருப்பது குறித்தும், பால் உற்பத்தியாளர்களின் கோரிக்கையை நிறைவேற்றுவது தொடர்பாகவும் பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், ஆவின் 9763 பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்களையும், பல லட்சம் பால் உற்பத்தி செய்யும் உறுப்பினர்களையும், சுமார் 35,000 பணியாளர்களையும் கொண்ட, மிக பெரிய நிறுவனம் ஆகும். பால் உற்பத்தியாளர்களுக்கு நிலையான, சீரான மற்றும் நியாயமான விலை வழங்குவதையும், மக்களுக்கு குறைந்த விலையில் தரமான பால் மற்றும் பால் பொருட்களை வழங்குவதையும், இலக்காக கொண்டுள்ள நிறுவனமாகும்.  ஒன்றிய அரசின் பல்வேறு நடவடிக்கைகளாலும் வரி விதிப்புகளாலும், உணவு பொருட்களின் விலை அதிகரித்து, 

Tap to resize

Latest Videos

பால் உற்பத்தியாளர்களுக்கு உதவி

பால் உற்பத்தி செலவு உயர்ந்திருக்கிறது என்பதில் இருவேறு கருத்துக்களுக்கு இடமில்லை. பால் உற்பத்தியாளர்கள் விலையை உயர்த்தி தர வேண்டும் என தொடர்ந்து அரசுக்கு கோரிக்கை வைத்து வருகின்றனர். கழக அரசு பொறுப்பேற்றதின் தொடர்ச்சியாக, லிட்டருக்கு 3 ருபாய் உயர்த்தி வழங்கபட்டுள்ளது. ஆவின் நிர்வாகத்தை பொறுத்த அளவில் பால் உற்பத்தியாளர்களுக்கு ஒரே சீரான விலையை அனைத்து காலங்களிலும் வழங்கி வருகிறது.

இதை, வேறு எந்த நிறுவனங்களும் கடைபிடிப்பதில்லை. மேலும், கால்நடைகள் வாங்க கடன் உதவி, கால்நடைகளுக்கு காப்பீடு, மருத்துவ உதவிகள், மற்றும் இனசேர்க்கை போன்ற திட்டங்களும் பால் உற்பத்தியாளர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. அதுமட்டுமின்றி, பால் கூட்டுறவு சங்கங்களின் உறுப்பினர்களுக்கு ஊக்கத்தொகை, பங்கு ஈவுத்தொகை போன்றவற்றையும் வழங்கி வருகிறோம்.

விரைவில் கோரிக்கை நிறைவேற்றப்படும்

கடந்த காலங்களில் ஏற்பட்ட ஒரு சில பிரச்சனைகளை சரி செய்ய வேண்டுமென, மாண்புமிகு தமிழக முதல்வரின் உத்தரவின் படி பல்வேறு தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளபட்டு வருகின்றது.  விவசாயிகளின் அனைத்து கோரிக்கைகளும் பரிசீலித்து உரிய நேரத்தில் அவர்களின் கோரிக்கைகள் ஏற்று கொள்ளும் விதமாக உரிய நடவடிக்கைகள் ஏற்கனவே தொடங்க பட்டு விட்டது, வெகுவிரைவில், சீரான பால்கொள்முதல், பால் பதப்படுத்துதல்,பால் பொருட்கள் தயாரித்தல் விற்பனையை முறைப்படுத்துதல்,போன்ற நடவடிக்கைகளின் மூலம், முன்னேற்றம் ஏற்படும்.

வேறு நிறுவனங்கள் எதையும் கண்டு யாரும் அச்சப்படவில்லை. ஆனால், பொதுவாக ஒரு மாநிலத்தின் பால் உற்பத்தி பகுதியில் இன்னொரு மாநிலத்தின் பால் உற்பத்தி நிறுவனம் தலையியிடுவதில்லை. எனவேதான் மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் ஒன்றிய அரசுக்கு தமிழகத்தின் பால் உற்பத்தி பகுதியில் வேறு மாநிலங்களை சேர்ந்த நிறுவனங்களை அனுமதிக்க வேண்டாம் என கடிதம் எழுதினார். 

யாரும் எந்த சலசலப்புக்கும் அஞ்சவேண்டாம்

அதே நேரத்தில் தமிழகத்தில் பால் உற்பத்தியை பெருக்கவும், பால் உற்பத்தியாளர்கள் மற்றும் கால்நடைகளின் நலனை பேணவும், பால் கையாளும் திறனை அதிகரிக்கவும் உரிய அறிவுரைகளை தந்துள்ளார்கள். அவற்றை தீவிரமாக நடைமுறைப் படுத்தும் பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது. எனவே எந்த விதத்திலும் பால் உற்பத்தியாளர்கள் நலன் மற்றும் ஆவின் வாடிக்கையாளர்களான பொதுமக்களின் நலன் என இரண்டிலும் எந்த பிரச்சனையும் ஏற்படாமல் பார்த்துக்கொள்ளும் பொறுப்பை இந்த அரசு ஏற்றுக்கொண்டுள்ளது.

இந்த சூழ்நிலையில் யாரும் எந்த சலசலப்புக்கும் அஞ்சவேண்டாம். ஆவின் நிறுவனம் தொடர்ந்து பால் உற்பத்தியாளர்களுக்கு நியாயமான விலையை உற்பத்தி செலவை கணக்கில் கொண்டு வழங்குவதற்கும் அவர்கள் நலனை பாதுகாப்பதற்கும் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார். 

இதையும் படியுங்கள்

திமுகவிற்கு எதிராக அடுத்தடுத்து களம் இறங்கும் அதிமுக.! இபிஎஸ் உத்தரவையடுத்து போராட்டத்தில் குதித்த நிர்வாகிகள்

click me!