
குஜராத் தேர்தலில் ஏற்படப்போகும் தோல்வியை நினைத்து பிரதமர் மோடி ஏராளமான பொய்களை அவிழ்த்து விடுகிறார் என்றும், தொடர்ந்து பொய் சொல்லி வரும் அவர் நாட்டு மக்களிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும் என முன்னாள் பிரதமர்மன்மோகன் சிங் வலியுறுத்தியுள்ளார்.
காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான மணிசங்கர் அய்யர் கடந்த 6–ந் தேதி டெல்லியில் உள்ள தனது வீட்டில் பாகிஸ்தான் தூதரக அதிகாரி, பாகிஸ்தான் முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சர் , , முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் பல தலைவர்களை அழைத்து விருந்தளித்தார்.
இதை குஜராத் தேர்தல் பிரசாரத்தின்போது குறிப்பிட்ட பிரதமர் நரேந்திர மோடி, குஜராத் மாநில தேர்தலில் பாஜகவை தோற்கடிக்க சதி நடக்கிறது என்று குற்றம்சாட்டினார்.
இதற்கு பதில் அளித்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், மோடி பொய் சொல்கிறார். எனவே அவர் நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பதிலடி கொடுத்திருந்தார்.
இந்த நிலையில் மன்மோகன் சிங், பிரதமர் மோடியை கடுமையாக தாக்கி வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ஏற்கனவே அவர் வெளியிட்ட அறிக்கையில் பெரும்பகுதி அப்படியே உள்ளது. மேலும் மோடி, அரசியல் லாபம் பெறுவதற்காக பொய்யான தகவல்களையும், கட்டுக்கதையும் கூறி வருகிறார் என்றும் , குஜராத் தேர்தல் தோல்வி பயத்தின் விரக்தி காரணமாக இதுபோல் அவதூறு பரப்புகிறார் என்றும் குற்றம்சாட்டியுள்ளார்..
பிரதமர் பதவி வகிப்பவர்களுக்கு இது அழகல்ல என்றும் எனவே மோடி நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று அந்த பதிவில் கூறப்பட்டுள்ளது.