இந்தியாவின் பொருளாதாரத்தை மீட்க இப்போது மன்மோகன் சிங் மட்டுமே ஒரே சாய்ஸ். ஈகோவை விடுத்து அழைக்குமா பாஜக அரசு.?

By Thiraviaraj RMFirst Published May 4, 2020, 12:03 PM IST
Highlights

அரசியல் வேறுபாடுகளை மறந்து, நாட்டு நலனை முன் நிறுத்தி செயல்பட வேண்டும். பொருளாதார முன்னெடுப்புகளை சரியான திசையில் சரியான முன்னெச்சரிக்கைகளுடன் வழி நடத்துவதற்கு கைதேர்ந்த பொருளாதார நிபுணர் மன்மோகன் சிங்கை அழைக்க வேண்டும்

அரசியல் வேறுபாடுகளை மறந்து, நாட்டு நலனை முன் நிறுத்தி செயல்பட வேண்டும். பொருளாதார முன்னெடுப்புகளை சரியான திசையில் சரியான முன்னெச்சரிக்கைகளுடன் வழி நடத்துவதற்கு கைதேர்ந்த பொருளாதார நிபுணர் மன்மோகன் சிங்கை அழைக்க வேண்டும் என வருமான வரிதுறை ஓய்வு பெற்ற அதிகாரியும், எழுத்தாளருமான பாஸ்கரன் கிருஷ்ண மூர்த்தி வேண்டுகோள் விடுத்துள்ளார். 

இதுகுறித்து அவர், இந்தியப் பொருளாதாரம் சுவாரஸ்யமான கட்டத்தில் நிற்கிறது. கடுமையான சவால் ஒரு புறம்; அருமையான சந்தர்ப்பம் மறு புறம். நோய்த் தொற்று காரணமாக அமல்படுத்தப் பட்ட ஊரடங்கு, சிறு குறுந்தொழில்களை சீர்குலைத்து விட்டது. பல்லாயிரக் கணக்கானோர் வேலை வாய்ப்பை இழந்து நிற்கின்றனர். 

பல லட்சம் பேர், வறுமைக் கோட்டுக்குக் கீழே தள்ளப் பட்டுள்ளனர். உடனடியாக இவர்களை கைதூக்கி விட வேண்டும். இவர்களின் வாழ்வாதாரத்தை மீட்டு எடுக்க வேண்டும். ஜி.எஸ்.டி அமலாக்கம், பண மதிப்பு இழப்பு, தற்போது முழு ஊரடங்கு என்று அடுத்தடுத்து பல தாக்குதல்கள். சிறு குறுந்தொழில் செய்வோர் எல்லாம் நொடிந்து போய் இருக்கிறார்கள். இவர்களின் வாழ்க்கை மீண்டும் இயல்பு நிலைக்குத் திரும்ப சில மாதங்கள் பிடிக்கலாம்.  

மைய அரசும் மாநில அரசும் தீவிரமாகக் களத்தில் இறங்கிக் கைதூக்கி விட்டால்தான் பொருளாதாரம் சீரடையும். நிதி உதவி தொடங்கி விதிகளில் தளர்வு வரை அத்தனையும் தேவைப் படுகிறது. இனியும் இந்த நிலை தொடரக் கூடாது. போர்க்கால அடிப்படையில் மாற்று ஏற்பாடுகள், செய்யப்பட வேண்டும். இழந்தது அனைத்தையும் ஈடுகட்டுவதற்கான வழிகள் ஆராயப்பட வேண்டும். 130 கோடி மக்கள் கொண்ட, உலகின் 4ஆவது பெரிய பொருளாதாரமான நமக்கு, இது மிக உறுதியாக சாத்தியப் படும். சந்தேகம் இல்லை.   

அரசுக்கும் நிதி நெருக்கடி இருக்கிறது. கடுமையான சவால்தான். சந்தேகம் இல்லை. ஆனால் நிதி ஆதாரங்களைப் பெருக்கிக் கொள்வதற்கான வழிகளும் இருக்கின்றன. நிறுவனங்களுக்கான கார்ப்பரேட் வரி, கடந்த ஆண்டு, 30%ஈல் இருந்து 20%ஆகக் குறைக்கப்பட்டது; இந்தக் குறைப்பை திரும்பப் பெறலாம். அறக் கட்டளைகளுக்கான வரி விலக்கை ரத்து செய்யலாம். பல்லாயிரம் கோடி வரியாக வந்து குவியும். இதைக் கொண்டு, சிறு குறும் தொழில்களுக்கு, அவர்கள் வேண்டும் அளவுக்கு உதவி செய்யலாம்.

இதை எல்லாம் எந்தக் கட்சியும் முன் வைக்காது. என்ன செய்ய...?   சரி போகட்டும். இன்னொரு நல்வாய்ப்பும் வந்து கொண்டு இருக்கிறது. கொரோனா பரவலுக்குக் காரணமான சீனா மீது உலக நாடுகள் கடும் கோபத்தில் இருக்கின்றன. குறிப்பாக அமெரிக்காவும் ஐரோப்பிய நாடுகளும் சீனாவை விட்டு வெளியேறத் துடிக்கின்றன. சீனாவை விட்டு வெளியேற நினைக்கும் எந்தவொரு நாட்டுக்கும் புகலிடமாக இந்தியா இருக்கிறது. இதற்கான வலுவான அறிகுறிகள் ஏற்கனவே தெரியத் தொடங்கி விட்டன.  
 
சீனாவில் தொடங்க இருந்த நிறுவனங்களை இந்தியா நோக்கித் திருப்ப உலக நாடுகள் விரும்புகின்றன. இந்த வாய்ப்பை, முறையாகப் பயன்படுத்திக் கொண்டால், நம் நாட்டில் அபரிமிதமான பொருளாதார வளர்ச்சி நிச்சயம் சாத்தியம் ஆகும். இங்குதான் மத்திய அரசு, அரசியல் வேறுபாடுகளை மறந்து, நாட்டு நலனை முன் நிறுத்தி செயல்பட வேண்டும். பொருளாதார முன்னெடுப்புகளை சரியான திசையில் சரியான முன்னெச்சரிக்கைகளுடன் வழி நடத்துவதற்கு கைதேர்ந்த பொருளாதார நிபுணர் நம்மிடையே இருக்கிறார்.  ரிசர்வ் வங்கியின் கவர்னர், திட்டக்குழுவின் துணைத் தலைவர், நரசிம்மராவ் ஆட்சியில் மத்திய நிதி அமைச்சர், பத்து ஆண்டுகள் இந்தியப் பிரதமர்.... டாக்டர் மன்மோகன் சிங்!

அரசியல் மனமாச்சர்யங்கள் ஆயிரம் இருந்தாலும், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், நம்புதற்குரிய திறமை வாய்ந்த பொருளாதார மேதை என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. அறிவு, ஆற்றல், அனுபவம் நிறைந்த இத்தகைய ஒருவர் வழி நடத்தினால் தற்போதைய நெருக்கடிக்கு மிக விரைந்த நல்ல தீர்வு கிடைக்கும். 

பொருளாதார நடவடிக்கைகளை வடிவமைக்கிற, வழி நடத்துகிற சிறப்பு அலுவல் குழு ஒன்று அமைக்கப்பட வேண்டும். அது சுயமாக இயங்குகிற தன்னாட்சி அமைப்பாக இருத்தல் வேண்டும். டாக்டர் மன்மோகன்சிங் அந்த அமைப்பின் தலைமைப் பொறுப்புக்கு நியமிக்கப்பட வேண்டும். மத்திய நிதி அமைச்சர், வெளியுறவு அமைச்சர், தொழில் - வர்த்தக அமைச்சர், சுற்றுச்சூழல் அமைச்சர் ஆகியோர் உறுப்பினர்களாக இருக்கலாம். நிதி ஆயோக் துணைத் தலைவர், ரிசர்வ் வங்கியின் கவர்னர் ஆகியோரும் சேர்க்கப்படலாம். கூடவே, அரசியல் சார்பற்ற பொருளாதார அறிஞர்களுக்கும் இடம் தரலாம்.  

இது வெறுமனே ஆலோசனைக்குழுவாக இல்லாமல் பொருளாதாரக் கொள்கைகளை தீர்மானிக்கிற, அயல் நாட்டு நிறுவனங்களுடன் ஒப்பந்தங்களை முடிவு செய்கிற அதிகாரம் கொண்ட அமைப்பாக இருத்தல் வேண்டும். எவ்வெந்தத் தொழில்களை எங்கெங்கே அனுமதிக்கலாம். அந்நிய முதலீட்டுக்கு என்னென்ன கட்டுப்பாடுகள் விதிக்கலாம்..? யார்யாருக்கு எவ்வளவு விலக்குகள் தரலாம்..?புதிய வேலை வாய்ப்புகளை எங்கெல்லாம் பெருக்கலாம்...?  இளைஞர்களின் திறன் மேம்பட, அவர்களின் வருமானம் பெருக என்னவெல்லாம் செய்யலாம்..? இந்தியாவின் பாரம்பரியத் தொழில்களான விவசாயம், நெசவு மற்றும் மீன் பிடித்தலைப் பாதுகாக்க, வலுப்படுத்த எவ்வகைகளில் உதவலாம்...? 

இவை எல்லாம் நன்கு பரிசீலித்து, தகுந்த நடவடிக்கையை விரைந்து செயல்படுத்த, பொருளாதாரச் சிறப்பபு அலுவல் குழு உடனடியாகத் தேவை. அவசியம் ஏற்பட்டால், கிளைக் குழுக்களும் அமைத்துக் கொள்ளலாம். இன்றைய சூழலில் இதுபோன்ற அமைப்பு மிகவும் பயன் உள்ளதாக அமையும். அதற்குத் தலைமை தாங்குகிற முழுத் தகுதியும் கொண்ட ஒரே நபர் - டாக்டர் மன்மோகன் சிங்! நம்பிப் பொறுப்பை ஒப்படைக்கலாம். ஏன் கூடாது..?

மத்திய அரசு முறைப்படி அழைப்பு விடுக்கட்டும். காங்கிரஸ் பேரியக்கமும் முழு ஒத்துழைப்பு நல்கட்டும். மத்திய அரசு, குறிப்பாகப் பிரதமர் நரேந்திர மோடி, இப்படியொரு ஆரோக்கியமான நடவடிக்கையில் இறங்கினால், விரைவிலேயே இந்தியப் பொருளாதாரம் மீண்டும் வலுவான நிலைக்குத் திரும்பும். மனது வைப்பாரா நமது பிரதமர்..? எனக் கேள்வி எழுப்பியுள்ளார். 

click me!