தமிழக அரசுக்கு தோள் கொடுத்த ஸ்டாலின்..!! மகாராஷ்ட்ரா அரசிடம் பேசி தொழிலாளர்களை மீட்க நடவடிக்கை..!!

By Ezhilarasan BabuFirst Published May 4, 2020, 11:35 AM IST
Highlights

தமிழக அரசுத் தரப்பிலிருந்து உரிய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டால், அந்தத் தொழிலாளர்கள் பாதுகாப்பாக வந்து சேர்வார்கள்.தமிழகத் தொழிலாளர்களை மகாராஷ்ட்ராவிலிருந்து திரும்ப அழைத்து வரவேண்டும்

"மகாராஷ்ட்ராவில் உள்ள தமிழகத் தொழிலாளர்களை அழைத்துவர, காலம் தாழ்த்தாது தமிழக அரசு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்" என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார், நாடு முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது ,  இதுவரை தமிழகத்தில் 2705 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது அதில் இங்கு  உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 30 ஆக உயர்ந்துள்ளது , அதே போல் நாட்டிலேயே மகாராஷ்ட்ராவில்தான் கொரோனா வைரஸ் தொற்று மிக அதிகமாக உள்ளது .  அங்கு மட்டும் வைரஸ் பாதித்தவர்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்தை கடந்துள்ளது இந்நிலையில் திமுக தலைவர் முக.ஸ்டாலின் அரசுக்கு கோரிக்கை ஒன்று முன்வைத்துள்ளார் அத்துடன் இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையின் முழு விவரம்:-

 

திராவிட முன்னேற்றக் கழகத்தின் 'ஒன்றிணைவோம் வா' செயல்திட்டத்தில், மகாராஷ்ட்ராவில் வாழும் தமிழகத்தைச் சேர்ந்த தொழிலாளர்களுடன் நடத்திய காணொலிக் காட்சி ஆலோசனை மூலமாக,  அவர்கள் இந்த கொரோனா பேரிடர் காலத்தில் பாதுகாப்பாகத் தமிழ்நாட்டுக்கு வர விரும்புகிறார்கள் என்பது தெரிய வந்துள்ளது,  இதுகுறித்து, மகாராஷ்ட்ரா முதலமைச்சர் திரு. உத்தவ் தாக்கரே அவர்களிடம் தி.மு.க.,வின் தலைவர் என்ற முறையிலும் எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையிலும் தெரிவித்தேன். கழகத்தின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் திரு. டி.ஆர்.பாலு அவர்களும் மகாராஷ்ட்ரா முதலமைச்சரிடம் கலந்தாலோசித்துள்ளார். தமிழகத் தொழிலாளர்களைச் சொந்த மாநிலத்திற்கு அனுப்ப தங்களின் அரசு தயாராக இருக்கிறது என்று திரு. உத்தவ் தாக்கரே அவர்கள் தெரிவித்துள்ளார். இதனையடுத்து, மத்திய ரயில்வே துறை அமைச்சர் திரு. பியூஷ் கோயல் அவர்களிடமும் திரு. டி.ஆர்.பாலு அவர்கள் விவரத்தைத் தெரிவித்துள்ளார். மத்திய அரசும் சிறப்பு ரயில்  மூலம் மகாராஷ்ட்ராவிலிருந்து தமிழகத்திற்குத் தொழிலாளர்களை அனுப்பத் தயாராக உள்ளது. 

தமிழக அரசுத் தரப்பிலிருந்து உரிய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டால், அந்தத் தொழிலாளர்கள் பாதுகாப்பாக வந்து சேர்வார்கள்.தமிழகத் தொழிலாளர்களை மகாராஷ்ட்ராவிலிருந்து திரும்ப அழைத்து வரவேண்டும் என்பது குறித்து பிற மாநிலங்களில் சிக்கியுள்ள தமிழர்களை தமிழகம் அழைத்துவர சிறப்பு அதிகாரியாக நியமனம் செய்யப்பட்டுள்ள வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை கூடுதல் தலைமைச் செயலர் டாக்டர். அதுல்ய மிஸ்ரா இ.ஆ.ப.,  அவர்களுக்கும் கடிதம் எழுதியிருக்கிறேன். தமிழக அரசு காலம் தாழ்த்தாது மத்திய அரசிடமும் மகாராஷ்ட்ரா மாநில அரசிடமும் தொடர்புகொண்டு இது தொடர்பான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். தமிழகத் தொழிலாளர்களுக்கான பயணச் செலவிற்கானப் பொறுப்பினையும், அவர்களுக்கான பரிசோதனைகள் உள்ளிட்ட பாதுகாப்பு ஏற்பாடுகளையும் செய்து விரைந்து மீட்டு, அழைத்து வருமாறு ஆட்சியாளர்களை வலியுறுத்துகிறேன்.
 

click me!