மீண்டும் ராஜ்யசபா எம்.பி. ஆகிறார் மன்மோகன் சிங் ! ராஜஸ்தானில் இருந்து தேர்வு செய்யப்படுகிறார் !!

By Selvanayagam PFirst Published Aug 1, 2019, 9:53 PM IST
Highlights

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ராஜஸ்தானில் இருந்து  ராஜ்யசபா எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
 

காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரும், முன்னாள்  இந்திய  பிரதமருமான மன்மோகன் சிங் ஐந்து முறை மேல்சபை எம்.பி.யாக இருந்துள்ளார். இந்த ஐந்து முறையும் அசாம் மாநிலத்தில் இருந்தே தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

கடைசியாக இவரது பதவிக்காலம் கடந்த ஜூன் மாதம் 14-ந்தேதியுடன் முடிவடைந்தது. அசாம் மாநிலத்தில் இருந்து தற்போது அவரை தேர்ந்தெடுக்க வாய்ப்பில்லை.


ராஜஸ்தான் மாநிலத்தில் பாஜகவைச்  சேர்ந்த மதன் லால் சைனி கடந்த ஜூன் 24-ந்தேதி காலமானார். இதனால் ஒரு இடம் காலியாக உள்ளது. ராஜஸ்தானில் காங்கிரஸ் ஆளும் கட்சியாக உள்ளது. அவர்களிடம் எம்எல்ஏக்கள் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. அவர்கள் மேல்சபை எம்பி தேர்தலில் வெற்றி பெற அதிக வாய்ப்புள்ளது.

காலியாக உள்ள ஒரு இடத்திற்கு ஆகஸ்ட் 26-ந்தேதி தேர்தல் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மன்மோகன் சிங்கை ராஜஸ்தானில் இருந்து மேல்சபை எம்.பி.யாக தேர்ந்தெடுக்க காங்கிரஸ் தீவிரம் காட்டி வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

click me!