நாடாளுமன்ற தேர்தலில் தங்கள் கட்சிக்கு ஒரு இடம் ஒதுக்க வேண்டும் என மனித நேய மக்கள் கட்சி கோரிக்கை விடுத்து வரும் நிலையில், அக்கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் அப்துல் சமதுக்கு தமிழ்நாடு ஹஜ் கமிட்டி பதவி கொடுத்து திமுக சமாதானம் செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
கூட்டணி கட்சிகளுக்கு தொகுதி பங்கீடு
நாடாளுமன்ற தேர்தல் தேதி ஒரு சில வாரங்களில் அறிவிக்கப்படவுள்ளது. இதற்காக தேர்தல் ஆணையம் ஒவ்வொரு மாநிலத்திலும் ஆய்வு நடத்தி வருகிறது. இதனையடுத்து அரசியல் கட்சிகள் கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தையை தீவிரப்படுத்தியுள்ளது. அந்த வகையில் தமிழகத்தில் ஆளுங்கட்சியான திமுக தனது கூட்டணி கட்சியான காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்ட், மதிமுக, முஸ்லிம் லீக் கட்சிகளோடு முதல் கட்ட பேச்சுவார்த்தையை முடித்துள்ளது. இந்த நிலையில் தங்களுக்கும் நாடாளுமன்ற தேர்தலில் ஒரு தொகுதி ஒதுக்க வேண்டும் என மனித நேய மக்கள் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. இதற்காக மனித நேய மக்கள் கட்சி செயற்குழு கூட்டத்திலும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
சீட்டுக்கு பதில் அரசு பதவி
ஆனால் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைக்கு இன்னும் மனித நேய மக்களை கட்சியை திமுக அழைக்கவில்லை. இதனால் அந்த கட்சி அதிருப்தி அடைந்ததாக தகவல் வெளியானது. இந்தநிலையில் அந்த கட்சியை சமாதானம் படுத்தவும், இஸ்லாமியர்களின் வாக்குகளை தக்க வைக்கவும் மனித நேய மக்கள் கட்சி எம்எல்ஏ அப்துல் சமதுக்கு தமிழ்நாடு ஹஜ் கமிட்டி தலைவர் பொறுப்பை தமிழக அரசு வழங்கியுள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு மாநில ஹஜ் குழுவின் முதல் கூட்டம் சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது.
அரசாணை வெளியிட்ட தமிழக அரசு
இதில், பிற்படுத்தப்பட்டோர். மிகப்பிற்படுத்தப்பட்டோர் (ம) சிறுபான்மையினர் நலத் துறையின் செயலாளர் தலைமையில் நடைபெற்றது. அக்கூட்டத்தில், தமிழ்நாடு மாநில ஹஜ் குழுவின் தலைவராக திரு.P.அப்துல் சமத், எம்.எல்.ஏ., அவர்கள் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவு அரசிதழிலும் வெளியிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படியுங்கள்