
தமிழகம் முழுவதும் உள்ள மணல் குவாரிகளை மூடுவதற்கு உத்தரவிட்ட மதுரை உயர்நீதிமன்ற மதுரை கிளையின் உத்தரவை எதிர்த்து தமிழக அரசு சார்பில் தொடரப்பட்ட வழக்கை நீதிபதிகள் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார்கோவிலைச் சேர்ந்த எம்.ஆர்.எம். எண்டர் பிரைசஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் எம்.ஆர். எம். ராமையா மதுரை ஐகோர்ட்டில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.
அதில் மலேசியாவில் இருந்து இறக்குமதி செய்த மணலை விற்பனைக்கு கொண்டு செல்ல அனுமதி அளிக்க உத்தரவிடவேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி மகாதேவன் , இறக்குமதி செய்யப்பட்ட மணலை விற்பனைக்கு அனுமதிக்க உத்தரவிட்டதோடு தமிழகத்தில் உள்ள அனைத்து மணல் குவாரிகளையும் 6 மாதத்திற்குள் மூட வேண்டும் என கண்டிப்புடன் தெரிவித்தார்..
சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் ஜல்லியைத் தவிர கிரானைட் குவாரி உள்ளிட்ட பிற கனிம குவாரிகளையும் மூட வேண்டும், வெளிநாட்டில் இருந்து மணலை இறக்குமதி செய்ய ஏதுவாக தமிழக அரசு தேவையான வழிமுறைகளை பின்பற்ற வேண்டும். தேவைப்பட்டால் அரசே வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்து மணல் விற்பனை செய்யலாம் என்றும் நீதிபதி தனது உத்தரவில் குறிப்பிட்டிருந்தார்.
இந்த நிலையில் மணல் குவாரிகளை மூட வேண்டும் என்ற நீதிபதி மகாதேவனின் உத்தரவை ரத்து செய்யக்கோரி நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர்கள் சார்பில் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் மேல் முறையீடு செய்யப்பட்டது.
இந்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை இன்று நீதிபதிகள் கல்யாணசுந்தரம், கிருஷ்ணவள்ளி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று நடைபெற்றது.
இதைத் தொடர்ந்து தமிழக அரசு சார்பில் தொடரப்பட்ட மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்ததோடு, மணல் குவாரியை 6 மாதங்களுக்கும் மூட வேண்டும் என்ற உத்தரவுக்கு தடை விதிக்க நீதிபதிகள்மறுத்துவிட்டனர்.