ஜொலிக்கும் மாமல்லபுரம் கடற்கரைக் கோயில் !! பாராம்பரிய கலை நிகழ்ச்சிகளை கண்டு ரசித்த ஷி ஜின்பிங் – மோடி !!

By Selvanayagam PFirst Published Oct 11, 2019, 8:46 PM IST
Highlights

இரண்டு நாள் பயணமாக இந்தியா வந்துள்ள சீன அதிபர் ஷி ஜின்பிங் மற்றும் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் சென்னையை அடுத்த மாமல்லபுரம் கடற்கரைக் கோவிலில் நடைபெற்ற பாரம்பரியம் மிக்க கல் நிகழ்ச்சிகளை கண்டு ரசித்தனர்.

இன்று பிற்பகலில் சீனாவில் இருந்து தனி விமானத்தில் சென்னை வந்த சீன அதிபர் ஷி ஜின்பிங்கிற்கு விமானநிலையத்தில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இதையடுத்து மாலை 5 மணி அளவில், மாமல்லபுரத்தை சென்றடைந்த சீன அதிபர் ஷி ஜின்பிங்கை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி வரவேற்றார். தமிழர்களின் பாரம்பரிய உடையான வேஷ்டி சட்டையை அணிந்திருந்தார் பிரதமர் மோடி.

இந்தியப் பிரதமருடன் இணைந்து அங்குள்ள வரலாற்றுச் சின்னங்களைப் பார்வையிட்டார் அர்ச்சுனன் தபசு, ஐந்து ரதங்கள், கடற்கரைக் கோயில் ஆகிய வரலாற்றுச் சின்னங்களின் முக்கியத்துவத்தை பிரதமரே சீன அதிபருக்கு விளக்கிச் சொன்னார். அதனைத் தொடர்ந்து இருவரும் அமர்ந்து இளநீர் பருகினார்கள்.

இதைனத் தொடர்ந்து கடற்கரை கோவிலில் இந்தியப் பிரதமரும் சீன அதிபரும் கலை நிகழ்ச்சி ஒன்றைக் கண்டு ரசித்தனர். இந்த நிகழ்ச்சியை சென்னையில் உள்ள கலாஷேத்ராவைச் சேர்ந்த குழுவினர் நடத்தினர்.

இதற்கடுத்து இரவு உணவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. இரு நாட்டுத் தலைவர்கள், உடனிருக்கும் அதிகாரிகள் மட்டுமே இந்த இரவு உணவில் பங்கேற்பார்கள். வெளியிலிருந்து வேறு யாருக்கும் இந்த விருந்திற்கு அழைப்புவிடுக்கப்படவில்லை என வெளியுறவுத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

விருந்தின்போது, பிரதமரும் சீன அதிபரும் மொழிபெயர்ப்பாளர்களுடன் தனியே அமர்ந்து உணவருந்துவார்கள்.இந்த இரவு விருந்தில் தமிழக உணவுகளும் சீன உணவுகளும் கிடைக்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதற்குப் பிறகு மீண்டும் சாலை வழியே சென்னை திரும்புகிறார் சீன அதிபர்.

இதையடுத்து நாளை காலை மீண்டும் மாமல்லபுரம் வரும் சீன அதிபர், பிரதமர் தங்கியுள்ள ஃபிஷர்மேன் கோவ் ஹோட்டலில் அவரைச் சந்தித்துப் பேசுகிறார். இந்தச் சந்திப்பில் இரு தலைவர்கள், மொழிபெயர்ப்பாளர்கள் மட்டுமே பங்கேற்பார்கள். இதற்குப் பிறகு, அதிகாரிகளுடன் இரு தலைவர்களும் பங்கேற்கும் பேச்சு வார்த்தை நடைபெறும்.

இந்தப் பேச்சுவார்த்தையானது இரு நாடுகளுக்கிடையிலான பல்வேறு விவகாரங்கள் குறித்து இரு தலைவர்கள் மட்டத்திலும் புரிதல் ஏற்படுத்துவதை அடிப்படையாகக் கொண்டிருக்கும். பேச்சு வார்த்தைகளுக்குப் பிறகு, இரு நாடுகளும் இணைந்து, அறிக்கை எதையும் வெளியிட மாட்டார்கள். 

மாறாக, இரு நாடுகளின் சார்பில் தனித் தனியே அறிக்கைகள் வெளியிடப்படும்.இந்தப் பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு, சென்னையிலிருந்து சீன அதிபர் இந்திய பயணத்தை முடித்துக்கொண்டு புறப்படுகிறார்.

click me!