3வது இடத்திற்கு முட்டி மோதும் மநீம - நாம் தமிழர்... சீனிலேயே இல்லாமல் போன டிடிவி தினகரன்...!

By Kanimozhi PannerselvamFirst Published May 2, 2021, 11:19 AM IST
Highlights

தற்போது, நிலவரப்படி திமுக கூட்டணி 131 இடங்களிலும், அதிமுக கூட்டணி 101 இடங்களிலும் முன்னிலை வகிக்கின்றன. 

தமிழகத்தில் 234 தொகுதிகளுக்கான சட்டப்பேரவை தொகுதிகளுக்கான ஓட்டு எண்ணிக்கை இன்று நடைபெற்று வருகிறது. அதில் திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, அமமுக கூட்டணி, மக்கள் நீதி மய்யம் கூட்டணி, நாம் தமிழர் கட்சி என 5 முனை போட்டி நிலவியது. இந்நிலையில், இன்று காலை 8 மணிக்கு தபால் வாக்குகள் எண்ணிக்கை தொடங்கியதில் இருந்தே திமுக கூட்டணி கட்சியினர் பல்வேறு தொகுதியில் முன்னிலை பெற்று வந்தனர். தற்போது, நிலவரப்படி திமுக கூட்டணி 131 இடங்களிலும், அதிமுக கூட்டணி 101 இடங்களிலும் முன்னிலை வகிக்கின்றன. 

திமுக 108 இடங்களிலும், காங்கிரஸ் 11 இடங்களிலும், மதிமுக 4, சிபிஎம்-2, சிபிஐ -2, விசிக - 2, பிற கட்சிகள் - 2 என மொத்தம் 131 தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது. அதேபோல் அதிமுக 85 இடங்களிலும், பாமக 10, பாஜக 5, பிற கட்சிகள் - 1 என மொத்தம் 101 தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது. இந்த பட்டியலில் மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் கட்சி, அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் ஆகிய கட்சிகளின் வாக்கு நிலவரம் மிகவும் பின்னடைவை சந்தித்து வருகிறது. 

திமுக - அதிமுக இடையே கடும் போட்டி நிலவி வரும் நிலையில் வாக்கு சதவீதத்தில் 3வது இடத்தையாவது பிடிக்க மநீமவும், நாம் தமிழர் கட்சியும் போட்டா போட்டியிட்டு வருகின்றன. திமுக, அதிமுகவிற்கு அடுத்ததாக நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் மூன்றாவது இடத்தை பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. திருவொற்றியூர் தொகுதியில் போட்டியிட்ட நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் 1,639 வாக்குகளை பெற்று அந்த தொகுதியில் மூன்றாவது இடத்தில் உள்ளார். 

மக்கள் நீதி மய்யத்தைப் பொறுத்தவரை அண்ணா நகரில் பொன்ராஜ் 1,843 வாக்குகளையும், விருகம் பாக்கத்தில் கவிஞர் சினேகன் 1,410 வாக்குகளையும், மயிலாப்பூரில் ஸ்ரீப்ரியா 1,287 வாக்குகளையும்  பெற்று 3வது இடத்தில் உள்ளனர். கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட்ட மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரான கமல் ஹாசன் 7,074 வாக்குகளைப் பொற்று தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறார். கோவில்பட்டி தொகுதியில் அமைச்சர் கடம்பூர் ராஜு 16,624 வாக்குகள் வித்தியாசத்தில் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறார். அவரை எதிர்த்து போட்டியிட்ட அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் 12,799 வாக்குகளைப் பெற்று பின்னடைவை சந்தித்து வருகிறார். இருவருக்கும் இடையே 3 ஆயிரத்து 825 வாக்குகள் வித்தியாசத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது. 
 

click me!