ஆட்சியில் இருக்கும் போது ஒரு பேச்சு.. இல்லாத போது ஒரு பேச்சு... திமுகவை நாறடிக்கும் மநீம..!

By vinoth kumarFirst Published Oct 19, 2021, 8:57 PM IST
Highlights

தமிழக பள்ளிக் கல்வித்துறையில் அரசுப் பள்ளி ஆசிரியர் மற்றும் பணியாளர் நியமன உச்ச வயது வரம்பு 57ஆக இருந்தது. கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில், கொரோனா தொற்றைத் தொடர்ந்து ஓய்வு பெறும் வயது 58-லிருந்து 60 ஆக உயர்த்தப்பட்டது.

தமிழக அரசுப் பள்ளிகளில் முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்கள் நியமனத்தில் உச்ச வயது வரம்பு குறைக்கப்பட்டது ஏற்புடையதல்ல என மக்கள் நீதி மய்யம் கட்சியின் மாநிலச் செயலாளர் செந்தில் ஆறுமுகம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மக்கள் நீதி மய்யம் கட்சியின் மாநிலச் செயலாளர் செந்தில் ஆறுமுகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்;- தமிழக அரசுப் பள்ளிகளில் முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்கள் நியமனத்தில் உச்ச வயது வரம்பு குறைக்கப்பட்டது ஏற்புடையதல்ல. இவ்விவகாரத்தில் முந்தைய நிலையே தொடர வேண்டும் என்பதை மக்கள் நீதி மய்யம் வலியுறுத்துகிறது. தமிழக பள்ளிக் கல்வித்துறையில் அரசுப் பள்ளி ஆசிரியர் மற்றும் பணியாளர் நியமன உச்ச வயது வரம்பு 57ஆக இருந்தது. கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில், கொரோனா தொற்றைத் தொடர்ந்து ஓய்வு பெறும் வயது 58-லிருந்து 60 ஆக உயர்த்தப்பட்டது.

அப்போது, நியமன வயது வரம்பை 59ஆக உயர்த்தியிருக்க வேண்டும். மாறாக, பொதுப் பிரிவினருக்கு 40 வயது என்றும், இட ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு 45 என்றும் குறைத்துவிட்டனர். இதை எதிர்த்துப் பட்டதாரிகள் போராடிய நிலையில், அப்போது எதிர்க்கட்சித் தலைவராக இருந்த மு.க.ஸ்டாலின், 'ஆசிரியர்களுக்கான வயது வரம்பைக் குறைத்து, கேடுகெட்ட மனநிலையை வெளிப்படுத்தியுள்ளது எடப்பாடி பழனிசாமி அரசு' என்று கடுமையாக விமர்சித்தார்.

அது தொடர்பான அரசாணையை ரத்து செய்ய வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். இப்போது திமுக ஆட்சிக்கு வந்துவிட்டது. இந்த ஆட்சியிலாவது வயது வரம்பு உயர்த்தப்படும் என்று பட்டதாரிகள் எதிர்பார்த்திருந்தனர். ஆனால், மாபெரும் மௌனமே பதிலாக இருந்தது. போராட்டம் மட்டும் தொடர்ந்தது! இந்த நிலையில், வேண்டா வெறுப்பாகச் செய்வதைப்போல திமுக அரசு, அரசாணை ஒன்றைப் பிறப்பித்துள்ளது. அதில் ஆசிரியர் நியமன வயது வரம்பு பொதுப் பிரிவினருக்கு 40-லிருந்து 45 ஆகவும், இட ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு 45-லிருந்து 50 ஆகவும் ஐந்து ஆண்டுகள் உயர்த்தப்பட்டுள்ளன.

அதுவும் இந்த அறிவிப்பானது 31-12-2021 வரையே செல்லுபடியாகும், பிறகு மீண்டும் வயது வரம்பு 45-லிருந்து 42 ஆகவும் 50-லிருந்து 47 ஆகவும் மூன்றாண்டுகள் குறையும். கொடுப்பதுபோல் கொடுத்துவிட்டு நைச்சியமாகத் திரும்ப பெறும் வழிமுறை இது. வயது வரம்பு குறைப்புப் பிரச்சினையால், தமிழகத்தில் 3 முதல் 5 லட்சம் பட்டதாரிகள் பாதிக்கப்படுவார்கள் என்கிறார்கள் கல்வித்துறையில் இருப்பவர்கள். அரசு வேலை என்பது பலருக்கும் கனவாக இருந்துவரும் நிலையில், அவர்களின் கனவுகள் கருகிப்போவதை அனுமதிக்கக் கூடாது. இவ்விவகாரத்தில் திமுக அரசானது, எதிர்க்கட்சியாக இருந்தபோது வலியுறுத்தியதைப்போலவே உச்ச வயது வரம்பை 57 அல்லது 59 ஆக்குவதற்கான ஆணை பிறப்பிக்க வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் கேட்டுக்கொள்கிறது என தெரிவித்துள்ளார்.

click me!