
மக்கள் நீதி மய்யத்தின் பொருளாளராக இருக்கும் சந்திரசேகர் தொடர்புடைய இடங்களில் நடைபெற்ற வருமான வரித்துறை சோதனையில் கணக்கில் வராத சுமார் 8 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
திருப்பூரை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் அனிதா ஹெல்த்கேர் மற்றும் அனிதா டெஸ்காட் நிறுவனங்களின் உரிமையாளராக இருப்பவர் சந்திரசேகர். இவர் கமலின் மக்கள் நீதி மய்யம் கட்சியின் பொருளாளராகவும் உள்ளார். இவரது அனிதா டெஸ்காட் நிறுவனம் தமிழக அரசின் நலவாழ்த்துறை சார்ந்த பல்வேறு திட்டங்களில் ஒப்பந்ததராக உள்ளது. அரசு மருத்துவமனைகளில் குழந்தை பிரசவிக்கும் பெண்களுக்கு மகப்பேறு பை வழங்கும் ஒப்பந்தத்தை சந்திரசேகரனின் அனிதா டெஸ்காட் நிறுவனம் தான் வைத்துள்ளது.
இந்த நிலையில் நேற்று திடீரென திருப்பூரில் உள்ள அனிதா ஹெல்த்கேர் மற்றும் அனிதா டெஸ்காட் நிறுவனங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்தியது. சோதனை தொடங்கிய சில மணிநேரங்களிலேயே சந்திரசேகரன் தொடர்புடைய இடங்களில் இருந்து பெட்டி பெட்டியாக ரொக்கப்பணம் சிக்கியது. ஒட்டு மொத்தமாக சிக்கிய பணத்தின் மதிப்பு எட்டு கோடி ரூபாய் இருக்கும் என்கிறார்கள். இந்த பணம் எதற்கும் சந்திரசேகர் நிறுவனத்தால் உடனடியாக கணக்கு காட்ட முடியவில்லை. இதனை அடுத்து 8 கோடி ரூபாயை பறிமுதல் செய்து வருமான வரித்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
அத்துடன் சந்திரசேகரிடம் விரைவில் விசாரணை நடத்தவும் வருமான வரித்துறை திட்டமிட்டுள்ளது. தமிழகத்தில் அதிமுக, திமுகவிற்கு எதிராக புதிய அணி அமைத்து கமலின் மக்கள் நீதி மய்யம் தேர்தலில் களம் கண்டுள்ளது. கோவை தெற்கு தொகுதியில் கமல் நேரடியாக போட்டியிடுகிறார். இதே போல் தமிழகம் முழுவதும் சுமார் 159 தொகுதிகளில் மக்கள் நீதி மய்யம் வேட்பாளர்கள் களம் இறங்கியுள்ளனர். இந்த நிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் மிக முக்கிய நிர்வாகியான சந்திசேகர் தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்தியுள்ளதுடன் எட்டு கோடி ரூபாய் அளவிற்கு ரொக்கத்தையும் பறிமுதல் செய்துள்ளது.
அதிலும் குறிப்பாக பாஜக மாநில தலைவர் எல்.முருகன் போட்டியிடும் தாராபுரம் தொகுதி திருப்பூர் மாவட்டத்தில் தான் உள்ளது. அவர் கடந்த இரண்டு நாட்களாக அங்கு பிரச்சாரம் செய்து வருகிறார். இந்த நிலையில் அந்த மாவட்டத்தை சேர்ந்த மக்கள் நீதி மய்யம் நிர்வாகி வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்றுள்ளது. இதே போன்று தாராபுரம் திமுக நகரச் செயலாளர் வீட்டிலும் வருமான வரித்துறை ரெய்டு நடத்தியுள்ளது. மேலும் அப்பகுதியை சேர்ந்த மதிமுக நிர்வாகி ஒருவர் வீட்டிலும் வருமான வரித்துறை முகாமிட்டுள்ளது. இப்படி ஒரே நேரத்தில் மநீம, திமுக மற்றும் மதிமுகவை வருமான வரித்துறை குறி வைத்திருப்பதன் பின்னணி தெரியவந்துள்ளது.
மக்கள் நீதி மய்யம் கட்சியின் பொருளாளர் சந்திரசேகரை பொறுத்தவரை அவர் தொழில் நிறுவனங்கள் நடத்தினாலும் தமிழக அரசின் ஒப்பந்ததாராக உள்ளார். அவரிடம் பிரபல அரசியல் கட்சிகளை சேர்ந்தவர்கள் தேர்தல் சமயத்தில் டொனேசன் கேட்பது வழக்கம். கொடுத்து கொடுத்து வெறுத்துப்போன சந்திரசேகர் அரசியல்வாதிகளிடம் இருந்து தப்பிக்கவே மக்கள் நீதி மய்யம் கட்சியில் இணைந்துள்ளார். ஆனாலும் இந்த தேர்தல் சமயத்தில் ஆளும் தரப்பை சேர்ந்தவர்கள் டொனேசனுக்காக சந்திரசேகர் வீட்டு கதவை தட்டியுள்ளனர். ஆனால் அவர் கமல் தனக்கு பின்புலத்தில் உள்ள தைரியத்தில் அவர்களை கவனிக்கவில்லை என்கிறார்கள்.
இதன் வெளிப்பாடாகவே சந்திரசேகர் வீட்டிற்கு வருமானவரித்துறை அதிகாரிகள் சென்றதாக சொல்கிறார்கள். இதே போல் தாராபுரம் திமுக மற்றும் மதிமுக நிர்வாகிகள் வீட்டில் நடந்த ரெய்டின் பின்னணியில் பணப்புழக்கம் இருப்பதாக சொல்கிறார்கள். தாராபுரம் தொகுதி முழுவதும் அங்கிருந்தே பணம் சப்ளை ஆவது தெரிந்தே அங்கு அதிகாரிகள் சென்றுள்ளதாக சொல்லப்படுகிறது.