கோவில்பட்டி தொகுதி கள நிலவரம்..! கடம்பூர் ராஜூவை வீழ்த்துவாரா டிடிவி?

Published : Mar 18, 2021, 11:37 AM IST
கோவில்பட்டி தொகுதி கள நிலவரம்..! கடம்பூர் ராஜூவை வீழ்த்துவாரா டிடிவி?

சுருக்கம்

தேவர் சமுதாயம் அதிகம் வசிக்கும் பகுதிகளில் டிடிவி தான் முன்னணியில் உள்ளார். இதே போல் நாடார் சமுதாயத்தை பொறுத்தவரை அவர்கள் டிடிவியை ஆதரிக்க தயாராக இல்லை. உறவின்முறையினர் கூடி அமைச்சரை ஆதரிக்க வேண்டும் என்று முடிவெடுத்துள்ளதாக கூறுகிறார்கள். இது டிடிவிக்கு மிகப்பெரிய பின்னடைவு.

சென்னை ஆர்.கே.நகர் மற்றும் தேனி மாவட்டத்தில் ஒரு தொகுதி என இரண்டு தொகுதிகளில் டிடிவி தினகரன் போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் யாரும் எதிர்பாராத வகையில் கோவில்பட்டியில் களம் இறங்கி அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

அதிமுக உருவாகி அதன் பிறகு நடைபெற்ற முதல் ஏழு தேர்தல்களில் ஒரே ஒரு தேர்தலில் மட்டுமே கோவில்பட்டி தொகுதியில் அதிமுக வென்றது. அதன் பிறகு 2006ம் ஆண்டு முதல் கோவில்பட்டி தொகுதி அதிமுக வசமே உள்ளது. இந்த தொகுதியில் கடந்த 2011 மற்றும் 2016 தேர்தல்களில் வென்று தற்போது அமைச்சராக உள்ள கடம்பூர் ராஜூ மூன்றாவது முறையாக போட்டியிடுகிறார். கோவில்பட்டி தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் மார்க்சிஸ்ட் கட்சியின் சீனிவாசன் போட்டியிடுகிறார். இதே போல் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரனும் இங்கு களம் இறங்கியுள்ளார்.

கோவில்பட்டி தொகுதியில் ஏழு முறை கம்யூனிஸ்ட் கட்சி வென்றுள்ளது. அதனால் இந்த தொகுதியை திமுகவிடம் இருந்து வலியுறுத்தி பெற்றுள்ளது அந்த கட்சி. ஆனால் இந்த முறை போட்டி என்னவோ? அமைச்சர் கடம்பூர் ராஜூவுக்கும் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரனுக்கும் தான். களத்தில் கம்யூனிஸ்ட் கட்சி போட்டியில் இருப்பது போலவே தெரியவில்லை. கோவில்பட்டி நகர் பகுதிகளில் மட்டுமே கம்யூனிஸ்ட் கட்சிகள் மற்றும் திமுக கூட்டணி கட்சியினர் தேர்தல் பணியாற்றி வருவது தெரிகிறது. மற்றபடி கோவில்பட்டியை சுற்றி உள்ள பட்டி தொட்டி எங்கும் கடம்பூர் ராஜூ மற்றும் டிடிவி தினகரன் தரப்பினர் தான் தேர்தல் வேலையில் தீவிரம் காட்டி வருகின்றனர்.

கோவில்பட்டி தொகுதியில் நாடார், தேவர், நாயக்கர் சமுதாயனத்தினர் அதிகம் வசிக்கின்றனர். தலித்துகள் வெற்றி தோல்வியை தீர்மானிக்கும் எண்ணிக்கையில் இங்கு உள்ளனர். கோவில்பட்டி ஒரு தொழில் நகரமாக உள்ளது. எனவே இங்கு எம்எல்ஏவை தீர்மானிப்பதில் தொழில் அதிபர்கள் முக்கியத்துவம் பெறுகின்றனர். அந்த வகையில் தொழில் அதிபர்கள் ஆதரவு இந்த முறையும் அமைச்சர் கடம்பூர் ராஜூவுக்கு தான் என்கிறார்கள். எந்த காரணத்தை கொண்டு கம்யூனிஸ்ட்  கட்சியின் எம்எல்ஏ இங்கு மறுபடியும் வந்துவிடக்கூடாது என்று தொழில் அதிபர்கள் உறுதியுடன் உள்ளனர்.

டிடிவியை எளிதில் அணுக முடியாது என்பதோடு அவர் மீது தொழில் அதிபர்களுக்கு பெரிய அளவில் நன்மதிப்பு இல்லை. எனவே தொழில் அதிபர்கள் ஆதரவால் அமைச்சர் கடம்பூர் ராஜூ கோவில்பட்டி நகர் பகுதியில் முன்னிலையில் உள்ளார். ஆனால் தேவர் சமுதாயம் அதிகம் வசிக்கும் பகுதிகளில் டிடிவி தான் முன்னணியில் உள்ளார். இதே போல் நாடார் சமுதாயத்தை பொறுத்தவரை அவர்கள் டிடிவியை ஆதரிக்க தயாராக இல்லை. உறவின்முறையினர் கூடி அமைச்சரை ஆதரிக்க வேண்டும் என்று முடிவெடுத்துள்ளதாக கூறுகிறார்கள். இது டிடிவிக்கு மிகப்பெரிய பின்னடைவு.

இதே போல் நாயக்கர்கள் ஓட்டை பொறுத்தவரை அது சிந்தாமல் சிதறாமல் கடம்பூர் ராஜூவுக்கு விழுந்துவிடும். இதே போல் தலித்துகளின் வாக்குகளையும் அமைச்சர் கவர்வதற்கான வாய்ப்புகளே அதிகம் என்கிறார்கள். இது தவிர தேர்தல் நேரத்தில் ஆளும்தரப்புக்கே உரிய கவனிப்புகள் இருக்கும் என்பதால் தற்போது வரை அமைச்சர் கடம்பூர் ராஜூ தான முன்னிலையில் உள்ளார். அதே சமயம் டிடிவி தினகரனின் வலதுகரமான மாணிக்கராஜாகோவில்பட்டி தொகுதியை சேர்ந்தவர். அவரை நம்பித்தான் டிடிவி கோவில்பட்டிக்கே சென்றுள்ளார்.

கயத்தாறு ஒன்றியத்தை வென்று டிடிவிடியிடம் சமர்பித்தது போல் கோவில்பட்டி தொகுதியிலும் வெற்றி பெற்று டிடிவியை சட்டப்பேரவைக்கு அனுப்ப உள்ளதாக சபதம் எடுத்து செயல்பட்டு வருகிறார் மாணிக்கராஜா. இவர் கடம்பூர் ஜமீன் குடும்பத்தை சேர்ந்தவர். அவருக்கு என்று கோவில்பட்டியில் பரவலாக செல்வாக்கு உள்ளது. இதனை பயன்படுத்தி டிடிவியை எப்படியும் கரை சேர்த்துவிடலாம் என இரவு பகலாக பணியாற்றி வருகிறார்.

PREV
click me!

Recommended Stories

அறிவாலய வாசலில் சாதி தீண்டாமை பார்த்து தடுக்கிறார்கள்..! முன்னாள் எம்.எல்.ஏ ஆவேசம்
அமைச்சர்களின் சொத்து வழக்குக்கு தடையாக உள்ளார்கள்.. ஜி.ஆர் சாமிநாதன், ஆனந்த் வெங்கடேஷ்க்கு எதிராக திமுக இருக்க இதுவே காரணம்..! அண்ணாமலை அதிரடி