புதிதாக வருபவர்களுக்கு மட்டுமே பதவி..! அதிருப்தியில் பழைய நிர்வாகிகள்..! மநீம பொதுக்குழு கலாட்டா..!

By Selva KathirFirst Published Feb 12, 2021, 9:40 AM IST
Highlights

எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் தொடங்கி எந்தவித எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தாமலேயே முடிந்துள்ள மக்கள் நீதி மய்யம் கட்சியின் பொதுக்குழு கூட்டம்.

எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் தொடங்கி எந்தவித எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தாமலேயே முடிந்துள்ள மக்கள் நீதி மய்யம் கட்சியின் பொதுக்குழு கூட்டம்.

மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு தொண்டர்கள் இருக்கிறார்களோ இல்லையோ மக்கள் மத்தியில் நல்ல பெயர் இருக்கிறது. அதிலும் புதிய வாக்காளர்கள், மாநகர வாக்காளர்கள்அதிக அளவில் மக்கள் நீதி மய்யத்தை ஆதரிக்க தயாராக உள்ளனர். இதற்கு காரணம் மக்கள் நீதி மய்யம் கட்சியை சமூக வலைதளங்கள் மற்றும் ஊடகங்கள் மூலம் விளம்பரம் செய்து வரும் பழைய நிர்வாகிகள். திமுக, அதிமுகவிற்கு இணையாக மக்கள் நீதி மய்யத்தில் ஐடி விங் மிகவும் ஸ்ட்ராங்காக செயல்பட்டு வந்தது. இதனால் கமலை மிக எளிதாக அக்கட்சியினர் சமூக வலைதளங்கள் மூலமும் ஊடகங்கள் மூலமும் மக்களிடம் சென்றடைய வைத்தனர்.

இதே போல் மக்கள் நீதி மய்யம் கட்சியில் பொறுப்பில் உள்ள பலரும் முன்னணி ஊடகங்கள் அனைத்துடனும் ஏற்கனவே நல்லதொடர்பில் இருந்தனர். இதனை பயன்படுத்தி கமலின் பேட்டிலைய லைவ் செய்வது, அவரது ட்வீட் பதிவை செய்தியாக்குவது என்று சுறுசுறுப்பாக செயல்பட்டு வந்தனர். ஆனால் அந்த நிர்வாகிகள் அனைவரும் தற்போது சைலன்ட் மோடுக்கு சென்றுவிட்டனர். இதற்கு காரணம் கட்சிக்கு தினம் தினம் வரும் புதுமுகங்கள் தான் என்கிறார்கள். தற்போது புதுமுகங்கள் மக்கள் நீதி மய்யம் கட்சியை திரும்பி பார்க்க காரணமே தாங்கள் தான் என்பதை கமல் மறந்துவிட்டதாக பழைய நிர்வாகிகள் கருதுகின்றனர்.

கடந்த மாதம் மக்கள் நீதி மய்யத்தில் இணைந்த சந்தோஸ் பாபு ஐஏஎஸ், நேற்றைய பொதுக்குழுவில் மேடையில் அமர வைக்கப்பட்டிருந்த பழ.கருப்பையா போன்றோர் எல்லாம் மக்கள் நீதி மய்யம் தொடங்கப்பட்ட போது எங்கு இருந்தார்கள்? என்பது தான் பழைய நிர்வாகிகளின் கேள்வியாக உள்ளது. கட்சிக்கு வந்த மறுநாளே அவர்களுக்கு பதவி கொடுப்பது என்பது இத்தனை நாட்களாக கட்சிக்கு உழைத்து வரும் தங்களை அவமதிப்பது போல் உள்ளதாகவும் அவர்கள் குமுறுகிறார்கள். வழக்கமாக கமல் தொடர்பான நிகழ்ச்சி என்றால் முதல் நாளே அவரது ஐடி விங்க் மற்றும் மூத்த நிர்வாகிகள் பிரபல தொலைக்காட்சிகளின் எடிட்டர்கள் முதல் உரிமையாளர்கள் வரை பலரையும் அழைத்துப் பேசுவார்கள்.

ஆனால் மிக முக்கியமான பொதுக்குழு கூட்டம் நடந்த நிலையில் அது பற்றி எந்த நிர்வாகியும் எந்த ஊடகத்தை சேர்ந்தவர்களிடமும் பேசவில்லை. மேலும் சமூக வலைதளங்களிலும் கூட மக்கள் நீதி மய்யம் கட்சியினர் பொதுக்குழு குறித்து பெரிதாக எதையும் பதிவு செய்யவில்லை. ஆனால் மக்கள் நீதி மய்யம் கட்சியின் பிஆர் டீம் மட்டும் கடமைக்கு என்று நிகழ்வுகளை ஊடகத்தினருக்கான வாட்ஸ்ஆப் குழுவில் பதிவிட்டது. பொதுக்குழு முடிந்து பல மணி நேரம் கழித்து ட்விட்டரில் அது தொடர்பான தகவலை பதிவேற்றினர். இப்படி பழைய நிர்வாகிகள் ஆர்வமின்மையால் மக்கள் நீதி மய்யம் கட்சி தனது அடையாளமான ஊடக வெளிச்சத்தை இழந்து வருவது ஒரு பக்கம் என்றால் பொதுக்குழு வந்த பலரும் கப்சிப் என்று அமைதியாக இருந்தனர்.

அவர்கள் பொதுக்குழுவில் பேச வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்த்த நிலையில் வழக்கம் போல் கட்சியில் புதிதாக இணைந்தவர்களுக்கு மட்டுமே பேச வாய்ப்பு கொடுக்கப்பட்டது. இதனால் பொதுக்குழு முடிந்து வெளியே செல்லும் போது இது புதிதாக வருபவர்களுக்கான கட்சி நம்மைப்போன்ற பழைய நிர்வாகிகளுக்கானது இல்லை என்று முனுமுனுத்தபடியே சென்றனர். இதே நிலை நீடித்தால் அடுத்தத பொதுக்குழுவில் நல்ல ஒரு கலாட்டாவை நாம் எதிர்பார்க்கலாம்.

click me!