சட்டப்பேரவை தேர்தல்..! ஆதரவாளர்களுக்கு சீட்..! கனிமொழி போடும் புதுக்கணக்கு..!

By Selva KathirFirst Published Feb 12, 2021, 9:28 AM IST
Highlights

சட்டப்பேரவை தேர்தலில் தனது ஆதரவாளர்கள் சிலருக்கு சீட் வாங்கிவிடவேண்டும் என்று தற்போது முதலே கனிமொழி காய் நகர்த்தி வருகிறார்.

சட்டப்பேரவை தேர்தலில் தனது ஆதரவாளர்கள் சிலருக்கு சீட் வாங்கிவிடவேண்டும் என்று தற்போது முதலே கனிமொழி காய் நகர்த்தி வருகிறார்.

திமுக தலைவராக கலைஞர் இருந்த போது இளைஞர் அணிச் செயலாளர், துணைப் பொதுச் செயலாளர், பொருளாளர் உள்ளிட்ட பதவிகளில் மு.க.ஸ்டாலின் இருந்தார். அப்போது வேட்பாளர் தேர்வு உள்ளிட்ட விவகாரங்களை கலைஞர் தான் முடிவு செய்வார். ஆனால் மு.க.ஸ்டாலின் தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் தனது ஆதரவாளர்கள் குறிப்பாக இளைஞர் அணியினர் கணிசமான அளவில் வேட்பாளர்களாக இருக்கும்படி பார்த்துக் கொள்வார். இதே போல் தென் மாவட்டங்களில் முழுக்க முழுக்க தனது ஆதரவாளர்களுக்கு மட்டுமே சீட் கிடைக்கும் படி மு.க.அழகிரி கலைஞருக்கு நெருக்கடி கொடுப்பார்.

ஆனால் அப்போது முதலே கனிமொழி தனது ஆதரவாளர்களுக்கு சீட் பெற்றுக் கொடுப்பது குதிரைக் கொம்பாக இருக்கும். கனிமொழி ஆதரவாளர் என்று தெரிந்தால் அவருக்கு எப்படியாவது சீட் கொடுக்காமல் தடுக்க மு.க.ஸ்டாலின் தரப்பு களம் இறங்கி செயல்படும். இதனால் கனிமொழி தனது ஆதரவாளர்களு,க்கு எம்எல்ஏ சீட் என்ன மாவட்டச் செயலாளர்கள், ஒன்றியச் செயலாளர், நகரச் செயலாளர் உள்ளிட்ட பதவிகளை கூட பெற்றுக் கொடுப்பதில் சிரமம் இருந்தது. இதனால் பெரும்பாலும் டெல்லியில் இருந்து கட்சியின் டெல்லி தொடர்பாக கனிமொழி செயல்பட்டு வந்தார்.

ஆனால் நாடாளுமன்ற தேர்தலில் போட்டி, தற்போது விடியலை நோக்கி ஸ்டாலின் குரல் தேர்தல் பிரச்சாரம் என்று தமிழக அரசியலுக்குள் கனிமொழி காலடி எடுத்து வைக்கிறார். கனிமொழி பிரச்சாரத்திற்கு செல்லும் இடங்களில் எல்லாம் மாவட்டச் செயலாளர்கள் அவரை சந்திக்கின்றனர். இதே போல் அவரது பிரச்சாரம் நடைபெறும் இடத்தில் உள்ள கட்சியின் நிர்வாகிகள் கனிமொழிக்கு உற்சாக வரவேற்பை கொடுக்கின்றனர். இது கலைஞர் காலத்தில் கூட நடைபெறாதது என்கிறார்கள். சட்டப்பேரவை தேர்தல் வரை கட்சிக்குள் சிறிய கலகம் கூட வந்துவிடக்கூடாது என்பதில் ஸ்டாலின் உறுதியாக இருக்கிறார்.

எனவே தான் கனிமொழி பிரச்சாரத்திற்கு செல்லும் இடங்களிலும் முழு அளவில் ஏற்பாடுகள் செய்யுமாறு கட்சி பிரமுகர்களுக்கு திமுக மேலிடம் உத்தரவிட்டுள்ளது. இப்படி பிரச்சாரத்திற்காக கனிமொழி செல்லும் இடங்களில் அவருக்கு திமுக முக்கியஸ்தர்கள் பலர் பழக்கமாகின்றனர். அவர்கள் கட்சிக்காக உழைத்தது, தற்போது வரை எந்த பதவியிலும் இல்லாதது, மாவட்டத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் எம்எல்ஏக்கள், எம்பிக்கள், அமைச்சர்களாக இருப்பது என பலவற்றையும் கனிமொழியிடம் எடுத்துக்கூறுகின்றனர். இதனை கனிமொழி பொறுமையாக கேட்டுக் கொள்கிறார்.

அத்தோடு கனிமொழி தன்னுடைய பிரச்சாரத்திற்கு ஏற்பாடு செய்த கட்சிக்காரர்களை அழைத்து பாராட்டவும் செய்கிறார். மேலும் சிறப்பான செயல்வீரர்களை குறித்துக் கொண்டு அவர்களோடு அவ்வப்போது பேசவும் கனிமொழி தயங்குவதில்லை. இதனால் கனிமொழிக்கு என்று ஒரு ஆதரவாளர் கூட்டம் திமுகவில் தற்போது உருவாகி வருகிறது. மேலும் முன்பெல்லாம் எம்எல்ஏ, எம்பி சீட் கேட்டு கனிமொழியை அணுகுபவர்கள் ஒருவர் அல்லது இருவராகத்தான் இருக்கும். ஏனென்றால் கனிமொழி தன்னுடைய எம்பி சீட்டை உறுதிப்படுத்திக் கொள்ளவே போராட்டம் நடத்த வேண்டியிருக்கும்.

ஆனால் தற்போது எம்எல்ஏ சீட்கேட்டு கனிமொழி தரப்பை ஏராளமானோர் அணுக ஆரம்பித்துள்ளனர். மகளிர் அணியினர் தவிர ஒரு சில மாவட்டச் செயலாளர்களும் கூட எம்எல்ஏ சீட்டுக்கு ஸ்டாலினிடம் ரெகமெண்ட் செய்யுமாறு கனிமொழியை அணுகியுள்ளதாக சொல்கிறார்கள். இதற்கு காரணம் கனிமொழிக்கு மு.க.ஸ்டாலின் கொடுக்கும் முக்கியத்துவம் தான் என்கிறார்கள். கனிமொழி பிரச்சார ஏற்பாடுகள் தொடர்பாக ஸ்டாலினே அவ்வப்போது மாவட்டச் செயலாளர்களை தொடர்பு கொண்டு பேசுவதாக கூறுகிறார்கள். இதனால் கனிமொழியை அணுகினால் எம்எல்ஏ சீட் கிடைக்கும் என்று கட்சிக்காரர்கள் அவரை அணுக ஆரம்பித்துள்ளனர்.

கனிமொழியும் கடந்த காலங்களை போல் இல்லாமல் இந்த முறை தனது ஆதரவாளர்களுக்கு கணிசமான சீட்டுகளை வாங்கிக் கொடுத்துவிட தற்போதே ஆயத்தமாகி வருகிறார். தனது ஆதரவாளர்களில் சீட்கோரியுள்ளவர்கள், வெற்றி வாய்ப்பு உள்ளவர்களின் பட்டியலை தயார் செய்துவரும் கனிமொழி விரைவில் ஸ்டாலினை சந்தித்து பேசுவார் என்கிறார்கள்.

click me!