நல்லவர்களுடன் தான் மக்கள் நீதி மய்யம் கூட்டணி.. தமிழக அரசியலை அதகளப்படுத்தும் கமல்ஹாசன்..!

By vinoth kumarFirst Published Nov 5, 2020, 2:54 PM IST
Highlights

 அரசியல் குறித்து ரஜினியிடம் தொடர்ந்து பேசி வருகிறேன். ரஜினியின் நிலைப்பாடு என்ன என்பது எனக்கு முன்கூட்டியே தெரியும். ரஜினி அறிக்கையில் குறிப்பிட்டுள்ள தகவல்கள் எனக்கு ஏற்கனவே தெரியும். ரஜினியின் உடல்நலமும் முக்கியம்.

வேல் யாத்திரைக்கு அனுமதி மறுத்தது வரவேற்கத்தக்கது என மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் கூறியுள்ளார்.

சென்னையில் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில்;- அரசியல் குறித்து ரஜினியிடம் தொடர்ந்து பேசி வருகிறேன். ரஜினியின் நிலைப்பாடு என்ன என்பது எனக்கு முன்கூட்டியே தெரியும். ரஜினி அறிக்கையில் குறிப்பிட்டுள்ள தகவல்கள் எனக்கு ஏற்கனவே தெரியும். ரஜினியின் உடல்நலமும் முக்கியம்; அரசியல் கட்சி பற்றி அவர்தான் முடிவெடுக்க வேண்டும். வேலையின்மை மிகப்பெரிய சவால். அதை சீரமைக்கும் என்ற நோக்குடன் களத்தில் வருகிறோம். 

கட்டமைப்பை பார்க்கும் போது மக்கள் நீதி மய்யம் தான் தமிழகத்தில் 3வது பெரிய கட்சி. மக்கள் நீதி மய்யம் கூட்டணி அமைக்குமா என்ற கேள்விக்கு பதிலளிக்கும் நேரம் இதுவல்ல. 3வது அணி அமைந்துவிட்டது. நல்லவர்கள் 3வது அணிக்கு வர வேண்டும். நல்லவர்கள் பல்வேறு கட்சிகளில் இருக்கிறார்கள்; அவர்களை அழைக்கிறேன்.நேர்மை ஒன்றே மக்கள் நீதி மய்யத்தின் அரசியல் வியூகம். நல்லவர்களுடன்தான் மக்கள் நீதி மய்யம் கூட்டணி அமைக்கும். நல்லவர்கள் எங்கள் கூட்டணிக்கு வர வேண்டும். நல்லவர்கள் வரும்போது 3வது அணியாக இருக்காது; முதல் அணியாக அது இருக்கும்.

மக்கள் நீதி மய்யம் கட்சியின் வேட்பாளர்கள் தேர்வு நடந்து கொண்டிருக்கிறது. சட்டப்பேரவையில் மக்கள் நீதி மய்யத்தின் குரல் ஒலிக்கும். எந்த தொகுதியில் போட்டியிடுவேன் என்பது வேட்புமனு தாக்கலின்போது தெரியும். மக்கள் நீதி மய்யத்தின் முதல்வர் வேட்பாளராக என்னை அறிவித்துள்ளனர். புழக்கத்தில் இல்லாத மனுஸ்மிருதி புத்தகத்தை பற்றி இப்போது பேச தேவையில்லை. பாஜக வேல் யாத்திரையை ரத்து செய்தது வரவேற்கத்தக்கது. நான் பி டீமாக இருந்தது இல்லை எனவும் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் கூறியுள்ளார்.

click me!