உள்ளாட்சி தேர்தலில் சென்னையைத் தனித் தொகுதியாக்குங்கள்... திருமாவுடன் சேர்ந்து அடம்பிடிக்கும் சீமான்..!

By Thiraviaraj RMFirst Published Nov 18, 2019, 3:31 PM IST
Highlights


உள்ளாட்சித்தேர்தலில் சென்னையைத் தனித்தொகுதியாக அறிவிக்க வேண்டும். துணைத்தலைவர் பதவிகளுக்கும் இடஒதுக்கீட்டு முறையை அமல்படுத்த வேண்டும்  என சீமான் வலியுறுத்தி இருக்கிறார். 

நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், ’’உள்ளாட்சித்தேர்தலில் சென்னையைத் தனித்தொகுதியாக அறிவிக்க வேண்டும். துணைத்தலைவர் பதவிகளுக்கும் இடஒதுக்கீட்டு முறையை அமல்படுத்த வேண்டும். உள்ளாட்சித் தேர்தல் நடக்கவிருக்கிற சூழலில் அதற்கு முன்பாக ஆதித்தமிழர்கள் அதிகம் வசிக்கக்கூடிய சென்னை மாநகராட்சியைத் தனித்தொகுதியாக அறிவித்து ஆதித்தொல்குடி மக்களுக்குரிய பிரதிநிதித்துவத்தை வழங்க வேண்டும் என்கிற கருத்தாக்கம் வலுப்பெற்று வருகிறது. அது மிக நியாயமானது; தார்மீகமானது. நாம் தமிழர் கட்சி அதனை முழுமையாக ஏற்று, வழிமொழிகிறது.

சென்னையின் பூர்வக்குடிகளே ஆதித்தமிழர்கள்தான். சென்னை எனும் மாநகரமே ஆதித்தமிழ் மக்களுக்குச் சொந்தமானதுதான். அவர்கள் இன்றைக்கு மெல்ல மெல்ல நகரத்தின் தலைப்பகுதியிலிருந்து வெளியேற்றப்பட்டு அடிப்படை வசதிகளும், எவ்வித வாழ்வாதாரமுமற்ற கண்ணகி நகருக்கும், கல்லுக்குட்டைக்கும், செம்மஞ்சேரிக்கும் துரத்தியடிக்கப்பட்டு வலுகட்டாயமாகக் குடியமர்த்தப்படுகிறார்கள். வந்தாரை வாழ வைக்கும் இந்நிலத்தில் வந்தவர், போனவரெல்லாம் வசதியாக செம்மார்ந்த வாழ்க்கை வாழ்கிறபோது ஆதிக்குடிகள் சென்னையைவிட்டே அதிகாரத்தின் மூலம் விரட்டி அடிக்கப்படுவது எதன்பொருட்டும் சகிக்க முடியாதப் பெருங்கொடுமையாகும்.

ஆகவே, அத்தகையப் பூர்வக்குடிகளுக்கானப் பிரதிநிதித்துவத்தை நிலைநாட்டும் பொருட்டு சென்னையைத் தனித்தொகுதியாக அறிவிக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன். மேலும், உள்ளாட்சித் தேர்தலில் நேரடியாகத் தேர்வுசெய்யப்படாது மறைமுகத்தேர்தல் மூலம் தெரிவு செய்யப்படும் ஏறக்குறைய 14,000 துணைத்தலைவர் பதவிகளுக்கும் இட ஒதுக்கீட்டு முறையை அமல்படுத்த வேண்டும்’’என அவர் தமிழக அரசிற்குக் கோரிக்கை விடுத்துள்ளார். 

முன்னதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்த விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் உள்ளட்சித் தேர்தலில் சென்னையை தனித் தொகுதியாக அறிவிக்க வேண்டும் என மனுக்கொடுத்திருந்தார். இந்நிலையில், அதே கோரிக்கையை சீமானும் முன் வைத்துள்ளார்.

click me!