அதிமுகவில் மாநிலங்களவை உறுப்பினராக இருந்த மைத்ரேயன் கடந்த ஜூன் மாதம் பாஜகவில் இணைந்த நிலையில், தற்போது அவருக்கு தேசிய செயற்குழு உறுப்பினர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
அதிமுகவில் அதிகார மோதல்
ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுகவில் பல்வேறு குழப்பங்களும் சிக்கலும் தொடர்ந்து நீடித்து வருகிறது. முக்கியமாக அதிகார போட்டியின் காரணமாக பல பிரிவுகளாக அதிமுக பிரிந்துள்ளது. இதனால் அதிமுகவில் இருந்த மூத்த நிர்வாகிகள் யார் பக்கம் செல்வது யாரை ஆதரிப்பது என்று தெரியாமல் கடும் குழப்பத்தில் இருந்து வந்தனர். இதனால் தனித்தனி அணியாக அதிமுகவானது செயல்பட்டு வருகிறது. இந்த காலகட்டத்தில் தான் பொதுக்குழு கூட்டம் நடத்தி அதிமுகவில் இருந்த இரட்டை தலைமை அகற்றப்பட்டு ஒற்றை தலைமையாக எடப்பாடி பழனிச்சாமியை தேர்வு செய்யப்பட்டார். இருந்த போதும் அதிமுகவில் இருந்த நிர்வாகிகள் வேறு கட்சிக்கு மாறி வந்தனர்.
கட்சி தாவிய மைத்ரேயன்
இந்தநிலையில் பிரபல மருத்துவரான வா.மைத்ரேயன் கடந்த 1991-ல் பாஜகவில் மாநில அறிஞர் அணி தலைவர், பொதுச் செயலாளர், மாநில துணை தலைவர் என பல்வேறு பதவிகளை வகித்தார். இதனையடுத்து ஜெயலலிதா முன்னிலையில் தன்னை அதிமுகவில் இணைந்துக்கொண்டார். இதனையடுத்து மைத்ரேயன் மாநிலங்களவை எம்பியாக தேர்வு செய்யப்பட்டார். மாநிலங்களவையில் அதிமுக சார்பாக பல்வேறு கருத்துகளையும் தொடர்ந்து பதிவு செய்து வந்தார். இந்த நிலையில் ஜெயலலிதா மறைவால் என்ன செய்வது என்று தெரியாத அவர் டிடிவி தினகரன், ஓ பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிச்சாமி என ஒவ்வொரு அணிக்கும் மாறி மாறி சென்றார்.
மைத்ரேயனுக்கு பாஜகவில் பொறுப்பு
இதனால் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுகவிலிருந்து மைத்ரேயன் விலக்கப்பட்ட நிலையில் ஓ பன்னீர்செல்வத்தோடு இணைந்து செயல்பட்டு வந்தார்.இந்த நிலையில் கடந்த ஜூன் மாதம் மீண்டும் பாஜகவில் தன்னை மைத்தேரேயன் இணைத்துக்கொண்டார். அப்போது பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு எதிராக எஸ்.வி.சேகர் கருத்து தெரிவித்த நிலையில், அதற்கு மைத்ரேயன் பதிலடி கொடுத்தார். இந்தநிலையில் பாஜக தேசிய செயற்குழு உறுப்பினராக மைத்ரேயன் தற்போது நியமிக்கப்பட்டுள்ளார்.
இதையும் படியுங்கள்