
இலங்கை மக்களுக்கு உதவ முன்வந்த மு.க.ஸ்டாலினுக்கு இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக்சே நன்றி தெரிவித்து கடிதம் எழுதியுள்ளார். இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடியின் காரணமாக, இலட்சக்கணக்கான மக்கள் துன்பத்திற்கும், துயரத்திற்கும் ஆளாகியுள்ளனர். ஒவ்வொரு நாளும் அங்கு நிலைமை மோசமடைந்து வருகிறது. இதை அடுத்து அங்குள்ள மக்களுக்கு உருவாகி வரும் தீவிர நெருக்கடிக்கு உடனடியாகத் தீர்வு காணப்பட வேண்டும் என்றும் இந்த இக்கட்டான சூழ்நிலையில், தமிழ்நாடு அரசின் கோரிக்கையை ஏற்று, அத்தியாவசிப் பொருட்களையும், உயிர் காக்கும் மருந்துகளையும் உடனடியாக இலங்கைக்கு அனுப்பிட தேவையான ஏற்பாடுகளைச் செய்து, உரிய அனுமதிகளை மத்திய அரசு வழங்கிட வேண்டுமென்று தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை கடந்த 29 ஆம் தேதி ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மேலும் தமிழ்நாட்டிலிருந்து இலங்கை மக்களுக்கு உணவு, அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் உயிர்காக்கும் மருந்துகளை விரைவாக எடுத்துச் செல்வதற்கு உரிய அனுமதிகளை வழங்குவதற்குத் தேவையான அறிவுறுத்தல்களை மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகத்திற்கு உடனடியாக வழங்க வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் மத்திய அரசுக்கு கடிதம் எழுதியிருந்தார். இதை அடுத்து தமிழக அரசு வழங்கும் நிவாரண பொருட்கள் இலங்கை அரசிடம் ஒப்படைக்கப்படும் என வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பதில் கடிதம் எழுதினார். மேலும் தமிழக அரசு வழங்கும் நிவாரண பொருட்கள் இலங்கை அரசிடம் ஒப்படைக்கப்படும். தமிழக அரசு அனுப்பி வைக்க உத்தேசித்து உள்ள நிவாரண பொருட்களை இலங்கைக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் இலங்கையின் கௌரவ பிரதமரான மகிந்த ராஜபக்சே தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து கடிதம் எழுதியுள்ளார். இதுக்குறித்த அவரது கடிதத்தில், தமிழ்நாடு சட்டப்பேரவையில் தாங்கள் கொண்டு வந்த தனித் தீர்மானத்தின்படி இலங்கையில் தற்போது நிலவி வரும் கடும் பொருளாதார நெருக்கடி சூழ்நிலையில் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ள மக்களுக்கு தமிழ்நாட்டிலிருந்து உணவு, அத்தியாவசிய பொருட்கள் மற்றும் உயிர்காக்கும் மருந்துகள் அனுப்பி வைக்கப்படும் என்று தாங்கள் அறிவித்துள்ளது தங்களின் நல்லெண்ணத்தை காட்டுகின்றது. இங்கு நிலவும் பொருளாதார நெருக்கடியை அண்டை நாட்டின் பிரச்சினையாக பார்க்காது மனிதாபிமான அடிப்படையில் பார்க்கும் தங்களுக்கும், மாநில அரசிற்கும் இலங்கை மக்கள் சார்பாக நன்றியை தெரிவித்து கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.