இலங்கையின் பிரதமர் பதவியை மகிந்த ராஜபக்சே ராஜினாமா செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இலங்கையின் பிரதமர் பதவியை மகிந்த ராஜபக்சே ராஜினாமா செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில், அத்தியாவசிய பொருட்களின் விலை கடுமையான அளவுக்கு உயர்ந்துள்ளது. பெட்ரோல், டீசல், உணவு பொருட்கள் தட்டுப்பாட்டு ஏற்பட்டுள்ளது. பொதுமக்கள் அத்தியாவசிய பொருட்களுக்காக வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளனர். அதிபர் கோத்தபய ராஜபக்சே மற்றும் பிரதமர் மகிந்தா ராஜபக்சே பதவி விலக வலியுறுத்தி நாடு தழுவிய அளவில் தொடர் போராட்டங்களை மக்கள் நடத்தி வருகின்றன. எனினும், தான் பதவியை ராஜினாமா செய்ய போவதில்லை என்று பிரதமர் மகிந்தா ராஜபக்சே கூறிவந்தார். இதற்கிடையே மக்களின் போராட்டத்தின் தீவிரத்தை குறைப்பதற்காக, இலங்கையில் மீண்டும் 2வது முறையாக அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. எனினும் ஆளும் அரசுக்கு எதிரான மக்களின் கோபம் குறைந்தபாடில்லை. இதற்கிடையே அவசர நிலை பிரகடனத்துக்கு சர்வதேச நாடுகள் கடும் அதிருப்தியை வெளியிட்டுள்ளன.
இலங்கை மக்களின் உண்மையான பிரச்னைகளை எதிர்கொள்வதற்கு நீண்ட கால தீர்வுகளே அவசியமாகும் என்றும், மாறாக அவசரகால நிலைமை சட்டத்தினால் அதனை செய்ய முடியாது என்றும் அவை சுட்டிக்காட்டியுள்ளன. மேலும் அடிப்படை உரிமைகள் மற்றும் சுதந்திரம் என்பவை உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்பதோடு, அதற்காக போராடும் மக்களின் குரலுக்கு செவிசாய்க்க வேண்டும் என்றும் சர்வதேச நாடுகள் வலியுறுத்தியுள்ளன. அந்த வகையில், ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான பிரதிநிதி ஹனா சிங்கர் ஹம்டி, இலங்கைக்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதிகள் குழுவின் அதிகாரபூர்வ அறிக்கை, இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி ஷங், இலங்கைக்கான இங்கிலாந்து தூதர் சாரா ஹூல்டன், இலங்கைக்கான நியூசிலாந்து தூதர் மைக்கல் அப்பல்டன், இலங்கைக்கான கனடா தூதர் டேவிட் மெக்கின்னன், நார்வே, சுவிட்சர்லாந்து போன்ற நாடுகளும் கண்டனம் தெரிவித்துள்ளன.
இந்நிலையில், பிரதமர் மகிந்தா ராஜபக்சேவுக்கு சர்வதேச நாடுகளின் தலைவர்கள் நெருக்கடி கொடுத்து வருவதாக கூறப்படுவதால், அவர் தனது பதவியை நாளை ராஜினாமா செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. புதியதாக பிரதமர் பதவியை ஏற்கும்படி, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசாவுக்கு அதிபர் கோத்தபய ராஜபக்சே அழைப்பு விடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக, சமாகி ஜன பலவேகயா கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாசாவை, அதிபர் கோத்தபய தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசியதாகவும், இடைக்கால அரசை நடத்துமாறும் அழைப்பு விடுத்ததாக கூறப்படுகிறது. அப்போது அவர், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் ஒன்று கூடி இதுதொடர்பான முக்கிய ஆலோசனை நடத்தி முடிவு எடுப்பதாக கூறியதாக கூறப்படுகிறது.