
ஜெயலலிதா மரணம் குறித்த 14 கேள்விகளை முன்வைத்து ஒ.பி.எஸ். அணியினர் தமிழகம் முழுவதும் நாளை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர்.
முன்னாள் முதல் அமைச்சர் ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்து அப்போலோ நிர்வாகம் வெளியிட்ட அறிக்கைக்கும், எய்ம்ஸ் மருத்துவமனை வெளியிட்ட அறிக்கைக்கும் இடையே பல்வேறு முரண்பாடுகள் உள்ளன.
இதனை சுட்டிக் காட்டி பல அரசியல் கட்சித் தலைவர்களும் கண்டன அறிக்கைகளை வெளியிட்டுள்ளனர். இதற்கிடையே அப்போலோ மருத்துவமனையில் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டிருந்த போது உயிர் காக்கும் கருவிகளை அகற்றச் சொன்னது யார்? எஸ்.பி.ஜி.பாதுகாப்பை விலக்கச் சொன்னது யார்? என்பது உள்ளிட்ட 14 கேள்விகளை முன்னிறுத்தி தமிழகத்தில் உள்ள 38 இடங்களில் ஓ.பி.எஸ். அணியினர் நாளை உண்ணாவிரத அறப்போராட்டத்தில் ஈடுபடுகின்றனர்.
இப்போராட்டம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஓ.பி.எஸ். ஆதரவு சட்டமன்ற உறுப்பினர் மாஃபா பாண்டியராஜன், பெருந்திரளான மக்கள் பங்குபெறும் வகையில் நாளை போராட்டம் நடைபெறும் என்று தெரிவித்துள்ளார்.
போயஸ் இல்லத்தில் ஜெயல்லிதா கீழே விழுந்தாரா என்பதை அறிய அப்போலோ அறிக்கை அளிக்க வேண்டும் என்றும் மாஃபா பாண்டியராஜன் வலியுறுத்தி உள்ளார்.