
ஆர்.கே நகரில் போட்டியிடக்கூடாது என தினகரனின் ஆட்கன் தன்னை மிரட்டுவதாகவும், தனக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றும் ஓபிஎஸ் அணி வேட்பாளர் மதுசூதனன் சென்னை டிஜிபி அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.
ஜெயலலிதா மறைவையடுத்து காலியாக உள்ள சென்னை ஆர்.கே. நகர் தொகுதிக்கு ஏப்ரல் 12-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது.
இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 15ஆம் தேதி தொடங்கியது. இந்த தேர்தலில் அதிமுக சார்பில் அக்கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் டிடிவி. தினகரனும், திமுக சார்பில் ஆர்.கே. நகர் கிழக்குப் பகுதி செயலாளர் என். மருது கணேஷும் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
எம்.ஜி.ஆர்-அம்மா-தீபா பேரவை சார்பாக ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவும், தேமுதிக சார்பில் வடசென்னை மாவட்ட செயலாளர் ப.மதிவாணனும் போட்டியிடுகின்றனர்.
ஓபிஎஸ் அணி சார்பில் அக்கட்சியின் அவைத் தலைவரும், முன்னாள் அமைச்சருமான இ. மதுசூதனன் களத்தில் இறங்கியுள்ளார்.
இந்நிலையில் ஆர்.கே நகரில் போட்டியிடும் தன்னை தினகரனின் ஆட்கள் தொடர்ந்து மிரட்டி வருவதாக மதுசூதனன் தெரிவித்துள்ளார். போட்டியிலிருந்து விலகி கெள்ள வேண்டும் என்று அவர்கள் தனக்கு கொலை மிரட்டல் விடுவதாகவும் அவர் தெரிவித்தார்.
இது குறித்து சென்னை டிஜிபி அலுவலகத்தில் மதுசூதனன் புகார் அளித்துள்ளார்.
தேர்தல் முடியும் வரை துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் அந்த புகார் மனுவில் மதுசூதனன் கேட்டுக் கொண்டுள்ளார்.