
அதிமுக நிர்வாகிகள் பெரும்பாலோனோர் எங்களுக்கே ஆதரவு அளிக்கின்றனர். எனவே எங்களுக்கே இரட்டை இலை சின்னத்தை ஒதுக்க வேண்டும் என சசிகலா தரப்பு தேர்தல் ஆணையத்தில் பதில் மனு தாக்கல் செய்துள்ளனர்.
ஜெயலலிதா மரணத்திற்கு பிறகு அதிமுக பொதுச்செயலாளராக சசிகலாவும் முதலமைச்சராக பன்னீர்செல்வமும் பொறுப்பேற்றனர். இதையடுத்து சசிகலா முதலமைச்சராக பொறுப்பேற்க முயற்சி மேற்கொண்டதால் அவருக்கு எதிராக ஒ.பி.எஸ் போர்க்கொடி தூக்கினார்.
இந்நிலையில் சில முன்னாள் அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள், அமைச்சர்கள், அதிமுக அடிமட்ட தொண்டர்கள், இளைஞர்கள், என பல்வேறு தரப்பினரும் ஒ.பி.எஸ்க்கு ஆதரவு தெரிவித்தனர்.
பின்னர், ஒ.பி.எஸ் தரப்பினருக்கும், சசிகலா தரப்பினருக்கும் இடையே எம்.எல்.ஏக்களை இழுப்பதில் போட்டி நிலவியது. அதில் பெரும்பான்மையை நிரூபித்து எடப்பாடி தலைமையில் ஆட்சியை கைப்பற்றியது சசிகலா தரப்பு.
இதனிடையே, சசிகலா பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டது செல்லாது என ஒ.பி.எஸ் தரப்பினர் தேர்தல் ஆணையத்தில் புகார் மனு அளித்தனர். இதற்கு சசிகலா பதில் மனு தாக்கல் செய்தார்.
இந்நிலையில், மார்ச் 14 ஆம் தேதி ஒ.பி.எஸ் தரப்பை பதில் அளிக்குமாறு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டிருந்தது. இதைதொடர்ந்து இன்று ஒ.பி.எஸ் அணியினர் மைத்ரேயன் எம்.பி. தலைமையில் 61 பக்கம் கொண்ட பதில் மனுவை தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்தனர்.
இதையடுத்து உணமையான அதிமுகவினர் நாங்களே, எனவே இரட்டை இலை சின்னத்தை எங்களுக்கே ஒதுக்க வேண்டும் என முன்னாள் முதலமைச்சர் பன்னீர்செல்வம் தலைமை தேர்தல் அதிர்காரி நஜீம் ஜைதியை சந்தித்து வலியுறுத்தினார்.
இதுகுறித்து சசிகலா தரப்பு வரும் 21 ஆம் தேதிக்குள் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டிருந்தது.
அதன்படி இன்று சசிகலா தரப்பில் தேர்தல் ஆணையத்தில் பதில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அதில், அதிமுக உறுப்பினர்கள் பெரும்பாலானோர் எங்களுக்கே ஆதரவு அளிக்கின்றனர். எனவே எங்களுக்கே இரட்டை இலை சின்னத்தை ஒதுக்க வேண்டும் என தெரிவிக்கபட்டுள்ளது.
வரும் ஏப்ரல் 12 ஆம் தேதி ஆர்.கே.நகர் இடைதேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், சசிகலா தரப்பும் ஒ.பி.எஸ் தரப்பும் நாளை நேரில் ஆஜராகுமாறு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.