
ஆகஸ்ட் 10 ஆம் தேதி ஓ.பன்னீர் செல்வம் அறிவித்துள்ள கண்டன ஆர்ப்பாட்டத்துக்கு அனுமதி அளிக்காவிட்டாலும், தடையை மீறி போராட்டம் நடத்துவோம் என்று ஓபிஎஸ் அணியைச் சேர்ந்த மதுசூதனன் கூறியுள்ளார்.
அதிமுக புரட்சி தலைவி அணி நிர்வாகிகள் கூட்டம் முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் தலைமையில், சென்னை, கிரீன்வேஸ் இல்லத்தில் நடைபெற்றது.
தமிழகத்தில் குடிநீர் பிரச்சனை, நீட் தேர்வு குளறுபடி உள்ளிட்டவைகள் குறித்து, இம்மாதம் 10 ஆம் தேதி கண்டன ஆர்ப்பாட்டத்தை ஓ.பி.எஸ். அணி அறிவித்தது.
ஓ.பன்னீர்செல்வம், தன் அணியை பலப்படுத்தும் முயற்சியில் தற்போது இறங்கியுள்ளார். மாவட்ட வாரியாக நிர்வாகிகளை நியமிக்கும் முயற்சியில் ஓ.பி.எஸ். ஈடுபட்டுள்ளார். மேலும், தனது ஆதரவு நிர்வாகிகள் அனைவரும் சென்னைக்கு வருமாறு பன்னீர்செல்வம் அழைப்பும் விடுத்தார்.
இந்த நிலையில், இன்று சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள அவரது வீட்டில் மாவட்ட நிர்வாகிகளுடன் ஓ.பன்னீர்செல்வம் ஆலோசனை நடைபெற்றது.
டிடிவி தினகரன், கட்சி நிர்வாகிகள் பட்டியல் வெளியிட்டுள்ள நிலையில் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து ஆலோசனை நடத்தப்பட்டதாக தெரிகிறது.
இந்த கூட்டத்தில் மதுசூதனன், கே.பி. முனுசாமி, செம்மலை, நத்தம் விஸ்வநாதன், பி.எச். பாண்டியன், மனோஜ் பாண்டியன், பொன்னையன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய மதுசூதனன், ஆகஸ்ட் 10 ஆம் தேதி ஓ.பி.எஸ். அறிவித்துள்ள கண்டன ஆர்ப்பாட்டத்துக்கு அனுமதி அளிக்காவிட்டாலும், தடையை மீறி போராட்டம் நடத்துவோம் என்று கூறியுள்ளார்.