
அ.தி.மு.க.வை ஒட்டு மொத்தமாக அலற வைத்திருக்கிறது மதுசூதனனின் தில்லு கடிதம். முதல்வர் பழனிசாமிக்கு எழுதியிருக்கும் கடிதத்தில் ‘எனது கேள்விகள் குறித்து திருப்திகரமான பதில்கள் இல்லையென்றால் எனது முடிவுகள் தன்னிச்சையாக இருக்கும்.’ என்று குறிப்பிட்டுள்ளதுதான் இப்போது பரபரப்பை கிளப்பியுள்ளது.
பன்னீர் அணியும், பழனிசாமி அணியும் பிரிந்து இருந்தபோது ஆர்.கே.நகர் தேர்தல் அறிவிக்கப்படபோது பன்னீர் அணியின் சார்பாக நிறுத்தப்பட்டவர் மதுசூதனன். பழனிசாமி அணியின் சார்பாக தினகரன் நிறுத்தப்பட்டார். அந்த தேர்தல் ரத்தானது. பின் இரு அணிகளும் இணைந்து, தினகரன் விலக்கி வைக்கப்பட்ட கூத்தெல்லாம் நடந்தது தெரியும்.
இந்நிலையில் ஆர்.கே.நகர் தேர்தல் மீண்டும் அறிவிக்கப்பட்டபோது இணைந்த அ.தி.மு.க. அணியில் யாருக்கு சீட் கொடுப்பதென பிரச்னையானது. பன்னீர்செல்வம் தனது ஆதரவாளரான மதுசூதனுக்குதான் சீட் வேண்டும்! என்றார். ஆனால் பழனிசாமி அணியை சேர்ந்த அமைச்சரான ஜெயக்குமார் இதை கடுமையாக எதிர்த்தார். வட சென்னையில் தான் கோலோச்சிக் கொண்டிருக்கும் நிலையில் மதுசூதனன் எம்.எல்.ஏ.வானால் நிச்சயம் பன்னீர் அவருக்கு அமைச்சர் பதவி வாங்கித் தருவார்! தன் அதிகாரத்துக்கு சிக்கல் வரலாம் என்றே முட்டுக்கட்டை போட்டார்.
ஆனால் மதுவுக்கு சீட் கொடுப்பதில் பன்னீர் விடாப்பிடியாய் இருந்ததாலும், பழனிசாமியை அடிக்கடி சந்தித்த மதுசூதனன் ‘எனக்கு வயசாகிடுச்சு. அடுத்த தேர்தல் சமயத்துல ஆக்டீவ் அரசியல்வாதியா இருப்பேனான்னு தெரியலை. அதனால இந்த தடவை சீட் கொடுங்க.’ என கோரிக்கை வைத்தார். விளைவு ஒரு வழியாய் பல சர்ச்சைகள், ஆலோசனைகளுக்கு பிறகு மதுசூதனனுக்கு சீட் தரப்பட்டது. இது ஜெயக்குமாருக்கு பேரதிர்ச்சி, ஆனாலும் பிரச்சாரத்தில் இறங்கினார். ஆனால் ஜெயக்குமாரின் ஆதரவாளர்கள் சமாதானமாகவில்லை, கருவினர். இதை தெரிந்து கொண்ட மதுசூதனன் ‘உள்குத்து வேலை செய்து என்னை தோற்கடித்துவிட ஒரு டீம் துடிக்கிறது.’ என பன்னீர் மற்றும் பழனிசாமியிடம் புலம்பிக் கொட்டினார். கட்சியிலிருந்து கட்டம் கட்டி கல்தா கொடுக்கப்பட்ட தினகரன் சுயேட்சையாக தேர்தலில் நின்றார்.
மதுசூதனனை சமாதானம் செய்துவிட்டு பன்னீரும், பழனிசாமியும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். ஆனால் எதிரில் சுயேட்சையாக நின்ற தினகரன் அமோகமாக வென்றார். இடைத்தேர்தலில் ஆளுங்கட்சி மிக மோசமாக தோற்றதை மீடியாக்களும், பத்திரிக்கைகளும், சமூக வலைதளங்களில் மக்களும் கழுவிக் கழுவி ஊற்றிக் கொண்டிருக்கிறார்கள்.
எடப்பாடி டீம் இந்த விமர்சனங்களை தூக்கி குப்பையில் கடாசிவிட்டு தங்கள் வேலைய் பார்க்க துவங்கிவிட்டது. ஆனால் எம்.எல்.ஏ. கனவு தகர்ந்ததில் நொந்து கிடந்த மதுசூதனன், இப்போது எடப்பாடி பழனிசாமிக்கு எடக்கு மடக்காக ஒரு லெட்டர் எழுதி பஞ்சாயத்தை பற்ற வைத்திருக்கிறார்..
அதில் ‘தி.மு.க. கூட தனது தோல்வியை ஆராய்ந்து விட்டு நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுத்துள்ளது. ஆனால் நம் கட்சியில் அது ஏன் செய்யப்படவில்லை?’ என்று கேட்டிருப்பவர், ‘என் கேள்விகளுக்கு திருப்திகரமான பதில் இல்லையென்றால் என் முடிவு தன்னிச்சையாக இருக்கும்.’ என்று கெத்தாக பேசியுள்ளார்.
மதுவின் கடிதத்துக்குப் பிறகு முதல்வர் பழனிசாமியுடன் அவரது அணியை சேர்ந்த அமைச்சர்கள் அதிகாரப்பூர்வமற்ற முறையில் விவாதித்துள்ளனர். அப்போது ஜெயக்குமார் ‘அன்றைக்கு சீட் கேட்டு கெஞ்சியவர் இன்று உங்களுக்கே கண்டன கடிதம் எழுதி மிஞ்சுகிறார். யார் கொடுக்கும் தைரியத்தில், ஸ்குரூவில் இந்த ஆட்டம் போடுகிறார் மதுசூதனன்? அவருக்கு இந்த தைரியம் எங்கிருந்து வந்தது? தேர்தல் என்றால் தோல்வியும் சகஜம். தமிழகத்தில் இடைத்தேர்தலில் ஆளுங்கட்சி தோற்றதே இல்லையா? உங்களை எதிர்க்குமளவுக்கு துணிச்சல் வந்துவிட்டதென்றால் ஏதோ ஒரு முடிவுடன் தான் இருக்கிறார்.’ என்று முதல்வரிடம் வரிந்து வரிந்து பேசியிருக்கிறார்.
ஜெயக்குமார் மதுசூதனன் மீது இந்தளவுக்கு பாய காரணம், வழக்கமான பகை. அதுவும் போக தன் தோல்விக்கு இரண்டு அமைச்சர்கள் காரணம் எனும் ரீதியில் மது குற்றம் சாட்டியுள்ளதாகவும், அதில் ஒரு அமைச்சர் ஜெயக்குமார்தான் என கட்சியினர் பேசுவதே அவரது காட்டத்துக்கு காரணம் என்கிறார்கள்.
எடப்பாடி அணியின் இப்போதைய சந்தேகமே! மதுசூதனனை தூண்டிவிடுவது பன்னீர் செல்வமா அல்லது தினகரனா என்பதுதான். ஏற்கனவே செங்கோட்டையனும், செல்லூர் ராஜூம் பி.ஜே.பி.க்கு எதிராக பேசி ஆட்சிக்கு நடுக்கத்தை கொண்டு வந்திருக்கும் நிலையில் மதுசூதனனும் தினகரனின் ரூட்டை பிடித்துவிட்டாரா? என்று அஞ்சுகிறார்கள்.
ஒட்டுமொத்தத்தில் மதுவின் கடிதம் அ.தி.மு.க.வினுள் பெரும் கலகத்தை ஏற்படுத்தியுள்ளது. என்னதான் ‘நான் கட்சிக்கு களங்கம் ஏற்பட ஒருபோதும் விடமாட்டேன். எனது கடிதம் என்பது எங்கள் கட்சியின் உள் விவகாரம்.’ என மதுசூதனன் மன்றாடினாலும் விமர்சனங்கள் அவரை வில்லாகத்தான் வளைத்துக் கொண்டிருக்கின்றன.