
நான் புரட்சி தலைவி ஜெயலலிதாவின் ஒரே மகன் என்று எம்.ஜி.ஆர். ஜெ.ஜெ. திமுக பொது செயலாளரும், அதிமுக ஜெ.தீபா அணியின் பொது செயலாளர் தீபாவின் கணவருமான மாதவன் கூறியுள்ளார்.
வார இதழ் ஒன்றுக்கு மாதவன் பேட்டி அளித்திருந்தார். அந்த பேட்டியில்தான் மாதவன் இவ்வாறு கூறியுள்ளார். மேலும் பேசிய அவர், தான் புரட்சி தலைவி ஜெயலலிதாவின் ஒரே மகன் என்றும் ஒரே போடாய் போட்டார்.
அரசியல்வாதியாக மாறும் எண்ணம் குறித்த கேள்விக்கு பதிலளித்த மாதவன், புரட்சி தலைவி அம்மா இருந்தவரை, எனக்கு அப்படிஓர் எண்ணமே எழுந்ததில்லை என்று கூறியுள்ளார். புரட்சி தலைவி அம்மா இறந்த பிறகு, லட்சக்கணக்கான தொண்டர்கள் என் வீடு தேடி வந்தார்கள்.
அவர்கள் அனைவரும் கட்சியை நீங்கள்தான் வழிநடத்த வேண்டும்என்று சொன்ன காரணத்துக்காக கட்சியை ஆரம்பித்ததாகவும் மாதவன் தெரிவித்தார். காலத்தின் கட்டாயத்தால் அரசியலுக்கு வந்துள்ளதாகவும் அவர் கூறினார்.
எங்கள் வீட்டுக்கு வந்த கூட்டம் தீபாவுக்காகத்தான் வந்தார்கள். ஆனாலும், அவரை சந்தித்த தொண்டர்களை எல்லாம் நான்தான் சந்தித்துப் பேசினேன் என்றார். ஆனால், தீபா தொடர்ந்து தவறான முடிவுகளை எடுத்து வந்தார்.
சசிகலா ஆட்களை எல்லாம் அருகில் வைத்துக் கொண்டார். நான் சொல்லியும் அவர் கேட்கவில்லை. அதனால் வெளியே வந்து கட்சி ஆரம்பித்துவிட்டேன் என்று புதிய கட்சி துவங்கியதற்கு காரணம் கூறினார். உண்மையான அதிமுக தொண்டர்களுக்குப் பொறுப்புகளை வழங்கத்தான் தனிக்கட்சி தொடங்கியதாகவும் மாதவன் கூறினார்.
அதிமுக தொண்டர்கள் எல்லாரும் உங்கள் பக்கம் இருந்தால், நீங்கள் ஏன் இரட்டை இலை சின்னத்தை கேட்கவில்லை என்ற கேள்விக்கு சின்னத்துக்காக போட்டி போடுபவர்கள் அனைவரும் பய முதலைகள்.
என்னிடம் அவ்வளவு பணம் கிடையாது. ஆனால் நல்ல மனம் இருக்கிறது என்றார். அதுமட்டுமல்லாது உண்மையான விசுவாசிகள் என்னிடம் உள்ளனர். அவர்களை வைத்து கட்சியை நல்ல முறையில் நடத்துவேன் என்றும் மாதவன் கூறியுள்ளார்.