இன்று ஆளுநரை சந்திக்கிறார் ஸ்டாலின் - எம்எல்ஏ குதிரை பேர வீடியோ ஆதாரத்தை கொடுக்க திட்டம்!!

First Published Jun 17, 2017, 1:21 PM IST
Highlights
stalin meets governor to submit mla for sale video


தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவை, திமுக செயல் தலைவரும் எதிர்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் இன்று சந்திக்க உள்ளார். இந்த சந்திப்பின்போது பணபேர விவகாரம் குறித்து ஆளுநரிடம் சி.டி. ஆதாரத்தை கொடுக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

கடந்த பிப்ரவரி மாதம் சட்டப்பேரவையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்ற அதிமுக எம்.எல்.ஏ.க்களுக்க பணம் கொடுக்கப்பட்டதாகக் கூறி ஆங்கில தொலைக்காட்சி ஒன்று வீடியோ வெளியிட்டது. இந்த வீடியோவில், மதுரை மேற்கு தொகுதி எம்.எல்.ஏ. சரவணன் பேட்டியளித்ததாக செய்தி வெளியிட்டது. ஆனால் தான் அவ்வாறு கூறவில்லை என்று சரவணன் மறுப்பு தெரிவித்தார். 

இந்த நிலையில் இந்த பிரச்சனையை சட்டசபையில் விவாதிக்க எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் தினமும் வற்புறுத்தி வருகிறார். இதற்கு சபாநாயகர் அதற்கு அனுமதி அளிக்கவில்லை. ஆதாரம் இல்லாமல் எதைப் பற்றியும் சபையில் விவாதிக்க முடியாது என்று சபாநாயகர் அறிவித்து விட்டார். இதனால் நேற்று ஆதாரத்தை தர தயாராக இருப்பதாக மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். ஆனால் சபையில் அது அனுமதிக்கப்படவில்லை.

இதனால் வெளிநடப்பு செய்த மு.க.ஸ்டாலின் பணம் கொடுக்கப்பட்டபோது நடைபெற்ற உரையாடல் அடங்கிய சி.டி.யை செய்தியாளர்களிடம் காண்பித்து பேட்டி அளித்தார். தேவைப்பட்டால் தமிழக ஆளுநரையும் சந்திப்பதாக மு.க. ஸ்டாலின் கூறினார்.

இந்த நிலையில், தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர்ராவ் இன்று மாலை சென்னை வருகிறார். சென்னை, கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் ஆளுநர் வித்யாசாகர் ராவை மு.க.ஸ்டாலின் சந்தித்து பேச உள்ளார். அப்போது, எம்.எல்.ஏ.க்கள் பண பேரம் விவகாரம் தொடர்பான வீடியோ ஆதாரத்தை புகாராக கொடுக்க உள்ளதாக கூறப்படுகிறது.

click me!