பாஜகவிலிருந்து விலகி திமுகவில் இணைந்த தலைவருக்கு மாஸ் வரவேற்பு கொடுத்த மு.க. ஸ்டாலின்..!

By Asianet TamilFirst Published Jul 22, 2020, 8:37 PM IST
Highlights

இது பெரியார் மண், அண்ணா மண், கலைஞர் மண் என்பதை நாம் நிரூபித்து சமூகநீதியைக் காப்பாற்றி, மத்திய பாஜக அரசுக்கு தகுந்த பாடம் கற்பிக்க வேண்டும் என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்தார்.

பாஜகவில் துணைத் தலைவர், தேசிய நிர்வாகக் குழு உறுப்பினர் என பல பதவிகளை வகித்த முன்னாள் எம்.எல்.ஏ. வேதாரண்யம் எஸ்.கே.வேதரத்தினம் திமுகவில் மீண்டும் இணைந்தார். காணொலி காட்சியில் நடந்த இந்த நிகழ்வில் திமுகவில் இணைந்தவர்களை வரவேற்று தலைவர் மு.க.ஸ்டாலின் பேசினார். “வேதாரண்யம் வேதரத்தினம் உள்ளிட்ட நண்பர்கள் திமுகவுக்கு வருகை தரக்கூடிய இந்த நிகழ்வில் பங்கேற்பதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். இது மட்டும் கொரோனா காலமாக இல்லாமல் இருந்திருந்தால் நான் வேதாரண்யமே வந்திருப்பேன். நீங்கள் சென்னைக்கு வந்திருந்தால், அண்ணா அறிவாலயத்தில் பெரிய வரவேற்பை கொடுத்திருப்பேன்.
அந்த இரு சூழலும் இப்போது இல்லை. காணொலி காட்சி மூலம் கல்யாணங்களே நடக்கும்போது, இணைப்பு நிகழ்ச்சியை தாமதிக்காமல் காணொலி மூலம் நடத்தலாம் என்று சொன்னேன்.  உங்களையெல்லாம் வருக வருக என வரவேற்கிறேன். வேதரத்தினம் திமுகவில் ஏற்கனவே பல்லாண்டுகள் பணியாற்றியவர். சட்டப்பேரவை உறுப்பினராக துடிப்புடன் செயல்பட்டவர். அவர் வேறொரு கட்சிக்கு போனார் என்று நான் சொல்லமாட்டேன். ஒருவர் வெளிநாடு போனால், பார்க்க முடியாது அல்லவா? அதுபோல வேதாரண்யம் வேதரத்தினம் வெளிநாடு போய்விட்டு மீண்டும் திமுகவுக்கு வந்துள்ளதாகவே நினைக்கிறேன்.
வேதரத்தினம் திரும்பி வந்ததன் மூலம் அவர் உண்மையான பாசம், அன்பு உள்ளவர் என்பதை நிரூபித்துவிட்டார். வேதாரண்யம் என்றால் வேதரத்தினம் என்று சொல்லக்கூடிய அளவுக்கு முத்திரை பதித்தவர் அவர்.” என்று வரவேற்று பேசிய ஸ்டாலின் மேலும் பேசுகையில், “இப்போது நடைபெறும் விஷயங்கள் எல்லாம் உங்களுக்கு தெரிந்திருக்கும். நூறு ஆண்டுகளாக நாம் காப்பாற்றி வைத்திருக்கும் இடஒதுக்கீட்டை, சமூகநீதியைச் சிதைக்கும் காரியம் நடைபெற்று வருகிறது. இந்தச் சமூகநீதியை நாம் எல்லோரும் காப்பாற்ற வேண்டும். இது பெரியார் மண், அண்ணா மண், கலைஞர் மண் என்பதை நாம் நிரூபித்து சமூகநீதியைக் காக்க வேண்டும். நாட்டின் மக்கள்தொகையில் பெரும்பான்மை மக்களைப் படிக்க விடாமல், முன்னேற விடாமல், தட்டிப் பறிக்கும் மத்திய பாஜக அரசுக்கு தகுந்த பாடம் கற்பிக்க வேண்டும்.” என்று ஸ்டாலின் பேசினார். 

வேதாராண்யம் வேதரத்தினம் 1996, 2001, 2006 என மூன்று முறை திமுக எம்.எல்.ஏ.வாக இருந்தவர். இடையில் திமுகவில் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் பாஜகவுக்கு சென்றார். கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் வேதாரண்யம் தொகுதியில் வேதரத்தினத்தால் பாஜக 30 ஆயிரத்துக்கும் அதிகமான வாக்குகளை பெற்றது குறிப்பிடத்தக்கது.
 

click me!