இந்திய விமானப்படை எப்போதும் தயாராக உள்ளது..!! நெஞ்சை நிமிர்த்தும் ராஜ்நாத் சிங்..!!

By Ezhilarasan BabuFirst Published Jul 22, 2020, 7:26 PM IST
Highlights

இதற்காக பல ஆயிரம் கோடி ரூபாய்களை நிதியாக ஒதுக்கி இந்திய பாதுகாப்பு படைக்கு வேண்டிய போர் விமானங்கள், பீரங்கிகள், உள்ளிட்ட போர் தளவாடங்களை இந்தியா வெளிநாடுகளில் இருந்து கொள்முதல் செய்து வருகிறது

எந்த நேரத்திலும் நாட்டை பாதுகாக்க இந்திய ராணுவம் தயாராக இருக்கிறது, மக்களும் ராணுவத்தை நம்புகின்றனர் என பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். டெல்லியில் நடைபெற்று வரும் மூன்று நாள் விமானப்படை மாநாட்டின் முதல் நாளான இன்று உரையாற்றி அவர் இவ்வாறு கூறியுள்ளார். இந்திய எல்லையில் கடந்த சில மாதங்களாக பதற்றம் நீடித்து வருகிறது. ஒருபுறம் சீனா எல்லையில் ராணுவத்தை குவித்த இந்தியாவை நெருக்கடிக்குள்ளாகி வந்த நிலையில், மறுபுறம் பாகிஸ்தான்  எல்லையில் அத்துமீறி துப்பாக்கி சூடு நடத்துவது, தீவிரவாதக் குழுக்களை இந்திய எல்லைக்குள் ஊடுருவ செய்வது போன்ற சதி வேலைகளில் ஈடுபட்டு வருகிறது. அதேநேரத்தில் நேபாளமும், சீனா, பாகிஸ்தானுடன் கைகோர்த்துக்கொண்டு இந்தியாவுக்கு எதிராக வெறுப்புப் பிரச்சாரம் செய்து வருகிறது. இந்நிலையில், எல்லையில் அண்டை நாடுகளால் ஏற்பட்டுள்ள பதற்றத்தை சமாளிக்கவும், ஒருவேளை அந்நாடுகளுடன் போர் ஏற்படும் பட்சத்தில் அதை முழுவதுமாக எதிர்கொள்ளவும், கடந்த சில ஆண்டுகளாக இந்தியா தயாராகி வருகிறது. 

இதற்காக பல ஆயிரம் கோடி ரூபாய்களை நிதியாக ஒதுக்கி இந்திய பாதுகாப்பு படைக்கு வேண்டிய போர் விமானங்கள், பீரங்கிகள், உள்ளிட்ட போர் தளவாடங்களை இந்தியா வெளிநாடுகளில் இருந்து கொள்முதல் செய்து வருகிறது. அந்த வகையில் சுமார் 58,000 கோடி ரூபாய் மதிப்பில் பிரான்ஸ் நாட்டுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தின்படி, சுமார் 30 ரஃபேல் போர்  விமானங்களை பெற இந்தியா பிரான்சிடமிருந்து பெற உள்ளது. இம்மாத இறுதிக்குள் முதல் தொகுதி போர் விமானங்களை பிரான்ஸ் இந்தியாவுக்கு வழங்குமென எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த சில ஆண்டுகளாக, இந்திய விமானப்படை சர்வதேச அளவில் மிக சக்திவாய்ந்த படையாக மாறி வருகிறது. அதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் இந்திய பாதுகாப்பு துறை அமைச்சகம் மேற்கொண்டு வரும் நிலையில், மூன்று நாள் விமானப்படை மாநாடு டெல்லியில் தொடங்கியுள்ளது. அதன் முதல் நாள் கூட்டத்தில்  பாதுகாப்புத்துறை அமைச்சர்  ராஜ்நாத் சிங் கலந்து கொண்டார். அப்போது விமானப்படை தளபதி மற்றும் அதிகாரிகளுடன் எல்லை தகராறு குறித்து விவாதித்தார். ஒவ்வொரு சூழ்நிலையையும் சமாளிக்க விமானப்படை தயாராக இருப்பதாக அவர் கூறினார். 

கிழக்கு லடாக்கில் விமானப்படை நிறுத்தப்படுவது, எதிரிகளுக்கு ஒரு வலுவான செய்தியை அளித்துள்ளது. கடந்த ஆண்டு பால்கோட்டில் நடந்த வான்வெளி தாக்குதலின் போதுகூட இந்திய விமானப்படையின் துணிச்சலை உலகம் கண்டு வியந்தது. கடந்த சில மாதங்களாக விமானப்படை தனது திறன்களை மேம்படுத்தி உள்ளது, நாட்டை பாதுகாக்க முழுமையாக படைகள் தயாராக இருக்கிறது. நாட்டு மக்களுக்கு இராணுவத்தின் மீது முழு  நம்பிக்கை உள்ளது எனக் கூறினார். மேலும் கூட்டத்தில் உரையாற்றிய விமானப் படைத் தலைவர் ஆர்.கே.எஸ் பதாரியா, எந்த நேரத்திலும் அச்சுறுத்தல்களை சமாளிக்க, இந்திய விமானப்படை தயாராக உள்ளது என்றும், விமானப்படையின் வலிமை தொடர்ந்து அதிகரிக்கப்படும் எனவும் கூறினார். கிழக்கு லடாக்கின் நிலைமையை மறு ஆய்வு செய்வதற்கும்,அருணாச்சல பிரதேசம், சிக்கிம், உத்தரகாண்ட் உள்ளிட்ட சீனாவின் எல்லையை ஒட்டிய  அனைத்து முக்கிய பகுதிகளிலும், விமானப்படையின் திறனை அதிகரிப்பது குறித்தும் கவனம்  செலுத்துவது குறித்தும் அடுத்த இரண்டு நாள் கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்றார். மேலும், ரஃபேல் விமானத்தை பயன்படுத்துவது குறித்து விவாதிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

 

click me!