’ஆட்சிக்கு வந்ததும் ஜெ’சாவுக்குக் காரணமானவர்களைத் தூக்கி உள்ளே வைப்பதுதான் முதல் வேலை’...மு.க.ஸ்டாலின்...

By Muthurama LingamFirst Published Mar 23, 2019, 9:03 AM IST
Highlights

ஆனால் இன்று தேர்தலுக்காக அதிமுகவுடன் கூட்டணி அமைத்திருக்கின்றனர். இந்தநிலையில் 20 சதவிகித இட ஒதுக்கீட்டை வன்னியர் சமுதாயத்துக்காகத் தந்த திமுகவைப் பார்த்து வன்முறைக் கட்சி என்று கூறுகிறார். வன்முறை கட்சி என்று சொல்வதன் மூலம் நீங்கள் வன்னியர் மக்களுக்கு துரோகம் செய்கிறீர்கள் என்றுதான் அர்த்தம்.


மக்களவைத் தேர்தலை முன்னிட்டு தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள ஸ்டாலின் நேற்று (மார்ச் 22) மாலை தருமபுரி ஒடிசல்பட்டி பொதுக்கூட்டத்தில் பேசினார். தருமபுரி மக்களவை தொகுதி திமுக வேட்பாளர் டாக்டர் செந்தில்குமாரையும், பாப்பிரெட்டிபட்டி சட்டமன்றத் தொகுதி வேட்பாளர் மணிக்கும் ஆதரவாக ஸ்டாலின் வாக்கு சேகரித்தார்.

அதன்பின்னர் அக்கூட்டத்தில் பேசிய  ஸ்டாலின், “பாஜகவோடு கூட்டணி வைத்தால் வெற்றி பெற முடியாது என்பது அவர்களுக்கே தெரியும். ஏனென்றால் தமிழ்நாட்டில் நோட்டாவை விட குறைந்த வாக்குகளை வாங்க வேண்டிய நிலைதான் இன்று பாஜகவுக்கு இருக்கிறது. இருந்தாலும் அதிமுகவை மிரட்டி பாஜக கூட்டணி வைத்துள்ளது. பாஜகவை தவிர பெரியய்யா, சின்னய்யாவும் அதிமுகவில் இணைந்திருக்கின்றனர். அதை நினைத்தால் சிரிப்பு வருகிறது. அவர்கள் எழுதி வெளியிட்ட அதிமுகவின் கதை இப்போது நமக்கு உதவியாக இருக்கிறது. அதிமுக மணல் கொள்ளை பற்றி பாமக விரிவான குற்றச்சாட்டுகளைச் சொல்லி இருக்கிறது.

திமுகவைப் பார்த்து பாமக நிறுவனர் ராமதாஸ் வன்முறை கட்சி என்று சொல்கிறார், ஆனால் இன்றும் நான் அவருக்கு மரியாதை கொடுத்துக் கொண்டிருக்கிறேன். பெட்ரோல் குண்டு வீசுவது, தனியார் மற்றும் பொதுச் சொத்துகளை சேதப்படுத்துவது, மக்களைப் பீதியில் ஆழ்த்துவது போன்ற செயல்களையெல்லாம் செய்வது பாமகதான் என்று சட்டமன்றத்தில் ஜெயலலிதாவே கூறியிருக்கிறார். ஆனால் இன்று தேர்தலுக்காக அதிமுகவுடன் கூட்டணி அமைத்திருக்கின்றனர். இந்தநிலையில் 20 சதவிகித இட ஒதுக்கீட்டை வன்னியர் சமுதாயத்துக்காகத் தந்த திமுகவைப் பார்த்து வன்முறைக் கட்சி என்று கூறுகிறார். வன்முறை கட்சி என்று சொல்வதன் மூலம் நீங்கள் வன்னியர் மக்களுக்கு துரோகம் செய்கிறீர்கள் என்றுதான் அர்த்தம்.

கலர் கலராக தொப்பிகளையும், உடைகளையும் உடுத்திக்கொள்ளும் மோடி, அவரை காவலாளி என்று அவரே கூறிக்கொள்கிறார். அவர் மட்டுமல்ல அமித் ஷா, தமிழிசை என அனைவரும் காவலாளி என்று முகநூலில் அடைமொழியுடன் பெயரைப் போட்டுக் கொள்கின்றனர். நான் ஒப்புக் கொள்கிறேன் மோடி காவலாளிதான். நாட்டுக்கு அல்ல, எடப்பாடிக்கும் இந்த ஆட்சிக்கும்தான்.

திருப்பரங்குன்றம் தேர்தல் தொடர்பாக திமுக தரப்பில் டாக்டர் சரவணன் தொடர்ந்த வழக்கில், அந்த தேர்தலில் வெற்றி பெற்ற போஸின் வேட்பு மனுப் படிவங்களில் ஜெயலலிதாவின் கைரேகை என்று வைக்கப்பட்ட ரேகைகள் போலியானவை. எனவே போஸ் வெற்றிபெற்றது செல்லாது என்று தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. மறைந்த முதல்வர் ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது, டீ குடிச்சாங்க, காபி, இட்லி சாப்டாங்க, காவிரி பிரச்சனைக்காக அழைத்துப் பேசினாங்க என்றெல்லாம் அமைச்சர்கள் சொன்னார்கள். ஆனால் இன்று ஜெ.வின் கைரேகை உண்மையில்லை என்று தீர்ப்பு வந்திருக்கிறது. அப்பல்லோவில் ஜெயலலிதாவின் உயிரற்ற உடலை மட்டும் வைத்துக்கொண்டு ஒரு நாடகத்தை நடத்தியுள்ளனர் என்பது இதிலிருந்தே தெளிவாகத் தெரிகிறது.

மறைந்த முதல்வர் அண்ணா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது காலை மாலை இரு வேளையிலும் அவரது உடல்நிலை குறித்து செய்தி வெளியிடப்படும். எம்ஜிஆர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போதும் செய்தி வெளியிடப்பட்டது. இதுதான் மரபு. ஆனால் ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது என்றாவது செய்திகள் வெளியிட்டார்களா? திமுக ஆட்சிக்கு வந்தால் விசாரணை நடத்தி ஜெ மறைவுக்குக் காரணமானவர்களைச் சிறையில் அடைப்பதுதான் எனது முதல் வேலை” என்றார்.

click me!