உள்ளாட்சித் தேர்தலுக்கு திரும்பவும் காலஅவகாசம்... அதிமுக அரசை ரவுண்டு கட்டிய ஸ்டாலின்!

By Asianet TamilFirst Published Apr 23, 2019, 8:30 AM IST
Highlights

“திமுக வழக்குப் போட்டதால் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவில்லை” என்ற ஒரு பொய்ப் பிரச்சாரத்தை மேற்கொள்ளும் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிதான் இப்போது உயர்நீதிமன்றத்திலும் உச்சநீதிமன்றத்திலும்  ‘கால அவகாசம்’ பெற்று வருகிறார். 

தோல்வி பயத்தில் உள்ளாட்சித் தேர்தலை நடத்தாமல், திட்டமிட்டு, உள்நோக்கத்துடன் காலதாமதம் செய்து கொண்டிருக்கிறது அதிமுக ஆட்சி என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலை நடத்த மேலும் மூன்று மாதங்கள் கால அவகாசம் வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் தமிழக மாநில தேர்தல் ஆணையம் மனுத்தாக்கல் செய்திருப்பதற்கு திமுக சார்பில் கடும் கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறேன்.


“மே மாதத்திற்குள் தேர்தலை நடத்த வேண்டும்” என்று உச்ச நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டிருந்த நிலையில், அந்தக் கெடு முடியும்வரை அமைதியாக இருந்து விட்டு, கடைசி நேரத்தில் அதிமுக அரசின் ஊதுகுழலாக மாறியுள்ள மாநில தேர்தல் ஆணையம்  ‘கால அவகாசம்’ கேட்டிருப்பது உள்ளாட்சி ஜனநாயகத்தை ஈவு இரக்கமின்றி படுகொலை செய்யும் சட்டவிரோத செயல்.
2016-ம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் நடந்து முடிந்திருக்க வேண்டிய உள்ளாட்சித் தேர்தல் இதுவரை நடைபெறவில்லை. இதனால் மக்களின் அடிப்படைப் பிரச்சினைகள் எல்லாம் மாநிலம் முழுவதும் ஆங்காங்கே குப்பை மேடுகள் போல் குவிந்து நிற்கின்றன. “உள்ளாட்சித் தேர்தலை 31.12.2016-ம் தேதிக்குள் நடத்தி முடிக்க வேண்டும்” என்று சென்னை உயர் நீதிமன்றம் முதன் முதலில் அளித்த தீர்ப்பின் மீது எண்ணற்ற முறை கால அவகாசம் பெற்றது இந்த அதிமுக ஆட்சி.

 
மாநில தலைமை தேர்தல் ஆணையரே நீதிமன்ற அவமதிப்புக்குள்ளாகி நீதிமன்றத்திடம் இந்த அரசும் ஆணையமும் சேர்ந்து பலமான குட்டுக்களை பலமுறை வாங்கிக் கொண்ட பிறகும், “நாங்கள் திருந்தவே மாட்டோம்” என்று திரைமறைவில் அல்ல- வெளிப்படையாகவே கூட்டணி அமைத்து ஜனநாயகத்தை கேலிக்கூத்தாக்கி வருகின்றன.
“திமுக வழக்குப் போட்டதால் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவில்லை” என்ற ஒரு பொய்ப் பிரச்சாரத்தை மேற்கொள்ளும் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிதான் இப்போது உயர்நீதிமன்றத்திலும் உச்சநீதிமன்றத்திலும்  ‘கால அவகாசம்’ பெற்று வருகிறார். உள்ளாட்சித் தேர்தலை ஒத்தி வைக்க சட்டத்தின் சந்துபொந்துகளில் நுழைந்து காரணம் தேடுவதை அவரும், அவரது உள்ளாட்சித் துறை அமைச்சரும் இன்றுவரை நிறுத்திக் கொள்ளவில்லை.

 
மக்கள் “தங்களுக்கு எப்போது வாய்ப்புக் கிடைக்கும். அதிமுக அரசுக்கு படுதோல்வியைப் பரிசாகக் கொடுப்போம்” என்று காத்திருக்கிறார்கள். தோல்வி பயத்தில் உள்ளாட்சித் தேர்தலை நடத்தாமல், திட்டமிட்டு, உள்நோக்கத்துடன் காலதாமதம் செய்து கொண்டிருக்கிறது அதிமுக ஆட்சி. நிச்சயமாக மக்கள் நலனில் அக்கறை இல்லாத உதவாக்கரை ஆட்சி என்று நான் பிரச்சாரம் செய்தது சரிதானே என்று மக்கள் உணர்ந்து கொண்டுள்ளனர்.
ஜனநாயகத்தைப் படுகுழியில் தள்ளும் முயற்சிகளை அதிமுக ஆட்சியும், தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையமும் உடனடியாகக் கைவிட்டு, மக்களின் குறைகள் தீர்க்கும் நிர்வாகக் கட்டமைப்பை உருவாக்குவதற்குத் தேவையான உள்ளாட்சித் தேர்தல்களை இனியும் காலதாமதம் இன்றி நடத்திட வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு மு.க.ஸ்டாலின் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

click me!