இடைத்தேர்தலில் ஜெயிக்க அதிரடி திட்டம்..! திமுகவை அலற வைக்கும் அதிமுகவின் ஸ்கெட்ச்!

By Asianet TamilFirst Published Apr 23, 2019, 8:12 AM IST
Highlights

மே 23-க்கு பிறகு சிக்கல் இல்லாமல் ஆட்சியைத் தக்க வைத்துக்கொள்ள குறைந்தபட்சம் 9 தொகுதிகளில் அதிமுக வெல்ல வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. எனவே இந்தத் தேர்தலில் வெற்றி பெற ஆளும் தரப்பு வழக்கமான இடைத்தேர்தல் பாணியைக் கையில் எடுக்க இருப்பதாக தகவல்கள் றெக்கைக் கட்டி பறக்கின்றன.

தமிழகத்தில் காலியாக உள்ள 4 சட்டப்பேரவை இடைத்தேர்தலில் வெற்றி பெற ஆளும் அதிமுக அதிரடி திட்டத்தை தீட்டியுள்ளது.
திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, ஓட்டப்பிடாரம், சூலூர் ஆகிய 4 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் மே 19-ம் தேதி நடைபெற உள்ளது. திமுக மற்றும் அமமுக சார்பில் இந்த 4 தொகுதிகளுக்கும்  வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுவிட்டது. அதிமுக சார்பில் பலரும் போட்டியிட முட்டிமோதுகின்றனர். வேட்பாளர் பட்டியலை அறிவிக்கும் முன்பே, தேர்தல் பணிக்குழுவை அக்கட்சி அமைத்துள்ளது.
ஏப்ரல் 18 அன்று நடைபெற்ற 18 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் திமுக 11 தொகுதிகளில் வெல்லும் என உளவுத் துறை அறிக்கைக் கொடுத்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. எஞ்சிய தொகுதிகளில் போட்டி கடுமையாக இருக்கும் என்றும் அறிக்கைக் கொடுக்கப்பட்டிருப்பதால் ஆளுந்தரப்பு சற்று அச்சத்தில் ஆழ்ந்திருப்பதாகக் கூறப்படுகிறது. எனவே மே 19 அன்று நடைபெற உள்ள 4 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் எப்படியும் வெற்றி பெற்றுவிட வேண்டும் என்ற முனைப்பில் ஆளும் அதிமுக உள்ளது. பொதுத் தேர்தலோடு அல்லாமல் இது தனியாக நடைபெறுவதால் வழக்கமான ‘இடைத்தேர்தல் பாணி’யில் தேர்தலை எதிர்கொள்ள அதிமுக தயாராகிவருகிறது.


இதற்கிடையே திமுகவின் மூவ்மெண்டுகளை அறிந்துகொள்ளவும் ஆளுங்கட்சி நிர்வாகிகள் எப்படி தேர்தல் வேலைகளைச் செய்கிறார்கள் என்பதை அறிந்துகொள்ளவும் ஓய்வு பெற்ற உளவுத் துறை அதிகாரி ஒருவரின் உதவியை அதிமுக நாடியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அவர் திமுக ஆட்சிக் காலத்தில் மேலிடத்துடன் நெருக்கமாக இருந்தவர் என்பதால், இவருடைய உதவியை நாடியிருப்பதாகக் கூறப்படுகிறது.

 
மே 23-க்கு பிறகு சிக்கல் இல்லாமல் ஆட்சியைத் தக்க வைத்துக்கொள்ள குறைந்தபட்சம் 9 தொகுதிகளில் அதிமுக வெல்ல வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. எனவே இந்தத் தேர்தலில் வெற்றி பெற ஆளும் தரப்பு வழக்கமான இடைத்தேர்தல் பாணியைக் கையில் எடுக்க இருப்பதாக தகவல்கள் றெக்கைக் கட்டி பறக்கின்றன.

click me!