செட்டப் பாக்ஸுகள் கொள்முதலில் என்ன டீல் நடந்தது..? உடுமலை ராதாகிருஷ்ணனை பதவி நீக்கம் செய்து விசாரிக்க வேண்டும்... மு.க. ஸ்டாலின் அதிரடி கோரிக்கை!

By Asianet TamilFirst Published Aug 9, 2019, 8:09 AM IST
Highlights

அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் அமைச்சராக இருந்தவரே, அதன் தலைவராக இருப்பவர் மீது பகிரங்கக் குற்றச்சாட்டை வைத்த பிறகும் - அந்தக் குற்றச்சாட்டுக்கு உள்ளானவரை பாதுகாப்பதில் முதல்வர் மிகுந்த ஆர்வமாக இருப்பது அதிர்ச்சியளிக்கிறது. எஸ்டி செட்டப் பாக்ஸ் தயாரிக்கும் ‘வில்லட்’ நிறுவனத்தையும் உடுமலை ராதாகிருஷ்ணன் நடத்தி வருகிறார் என்று இன்னொரு ஆதாரப்பூர்வமான குற்றச்சாட்டையும் துறை அமைச்சராக இருந்தவரே கூறியிருக்கிறார். 
 

தமிழக அரசு கேபிள் டிவி நிறுவனத் தலைவர் பதவியிலிருந்து உடுமலை ராதாகிருஷ்ணனை நீக்க வேண்டும் என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் அதிரடியாக வலியுறுத்தியுள்ளார்.
தமிழக அரசு கேபிள் டிவி நிறுவனத் தலைவராக அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் அண்மையில் நியமிக்கப்பட்டார். இந்தப் பொறுப்பு தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் மணிகண்டன் கீழ் செயல்பட்டுவந்தது. அந்தப் பொறுப்புக்கு உடுமலை ராதாகிருஷ்ணன் நியமிக்கப்பட்டதால் அதிருப்தி அடைந்த மணிகண்டன், உடுமலை ராதாகிருஷ்ணனையும், அவர் செய்துவரும் கேபிள் டி.வி. தொழில் பற்றி விமர்சித்தார். அந்தப் பேட்டி வெளியான  அடுத்த ஒரு நாளுக்குள் அமைச்சர் பொறுப்பிலிருந்து மணிகண்டன் நீக்கப்பட்டார்.

 
இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “அமைச்சராக இருந்த மணிகண்டன், ‘தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் தலைவராக நியமிக்கப்பட்ட உடுமலை ராதாகிருஷ்ணன், 2 லட்சம் கேபிள் இணைப்புகள் கொண்ட தனியார் கேபிள் நிறுவனத்தை நடத்தி வருகிறார்’ என்று குற்றச்சாட்டை கூறியுள்ளார். எடப்பாடி பழனிச்சாமி ஆட்சியில் அதிகாரத்தை எப்படி துஷ்பிரயோகம் செய்து, லஞ்ச - ஊழல் செய்கிறார்கள் என்பதற்கு அந்தக் கூட்டத்திலிருந்தே ஓர் ஆதாரமாக வெளிவந்திருக்கிறது.


அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் அமைச்சராக இருந்தவரே, அதன் தலைவராக இருப்பவர் மீது பகிரங்கக் குற்றச்சாட்டை வைத்த பிறகும் - அந்தக் குற்றச்சாட்டுக்கு உள்ளானவரை பாதுகாப்பதில் முதல்வர் மிகுந்த ஆர்வமாக இருப்பது அதிர்ச்சியளிக்கிறது. எஸ்டி செட்டப் பாக்ஸ் தயாரிக்கும் ‘வில்லட்’ நிறுவனத்தையும் உடுமலை ராதாகிருஷ்ணன் நடத்தி வருகிறார் என்று இன்னொரு ஆதாரப்பூர்வமான குற்றச்சாட்டையும் துறை அமைச்சராக இருந்தவரே கூறியிருக்கிறார். 
குறிப்பாக அரசு கேபிள் நிறுவனத்தின் கீழ் உள்ள கேபிள் இணைப்புகளுக்கு 60 லட்சம் தரநிலை வரையறை மேலமர்வு பெட்டிகளும், (SD Set Top Box) 10 லட்சம் உயர் வரையறை மேலமர்வு பெட்டிகளும் (HD Set Top Box) வழங்குவதற்கான உலகளாவிய கொள்முதல் ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ள நிலையில் அமைச்சரின் குற்றச்சாட்டு முக்கியத்துவம் பெறுவதோடு விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டியது என்பதும் உறுதியாகிறது.
2 லட்சம் தனியார் கேபிள் இணைப்புகளை வைத்துக் கொண்டுள்ள ஒருவரை, அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் தலைவராக  அவசரமாக முதல்வர் நியமித்தது ஏன்? 70 லட்சம் செட்டப் பாக்ஸுகள் வாங்கும் கொள்முதல் விவகாரத்தில் மணிகண்டனுக்கும் எடப்பாடி பழனிசாமிக்கும் கொடுக்கல் - வாங்கல் சம்பந்தமாக நடைபெற்ற பனிப்போர் என்ன? இந்த செட்டப் பாக்ஸுகளை வழங்கக் கொடுக்கப்பட்டிருக்கும் ஒப்பந்தத்திற்கும் அமைச்சரின் குற்றச்சாட்டிற்கும், பிறகு அமைச்சரின் பதவி நீக்கத்திற்கும் என்ன தொடர்பு? இந்தக் கேள்விகளுக்கு எல்லாம் முதல்வர் உடனடியாக வெளிப்படையாக பதில் சொல்ல வேண்டும். 
உடுமலை ராதாகிருஷ்ணனை அரசு கேபிள் டிவி நிறுவனத் தலைவர் பதவியிலிருந்து உடனடியாக நீக்கி - ஏற்கனவே அந்த நிறுவனத்தில் வழங்கப்பட்டுள்ள செட்டப் பாக்ஸ் கொள்முதல் தொடர்பாக லஞ்ச ஊழல் தடுப்புத் துறை மூலம் உரிய - விரிவான விசாரணைக்கு முதல்வர் உத்தரவிட வேண்டும்” என்று மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

click me!