
திராவிட மாடல் ஆட்சியை தமிழ்நாட்டில் மட்டுமல்ல இந்தியாவிலும் முதல்வர் மு.க. ஸ்டாலின் கொண்டு வருவார் என்று தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.
முதல்வர் மு.க. ஸ்டாலின் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு கவியரங்கம், வாழ்த்தரங்கம் புதுக்கோட்டையில் நடைபெற்றது. விழாவில் தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, தமிழக சுற்றுச்சூழல் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் மெய்யநாதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். விழாவில் அமைச்சர் மெய்யநாதன் பேசுகையில், “தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற 10 மாத காலத்தில் பல சாதனைகளை செய்துள்ளார். 24 மணி நேரத்தில் 20 மணி நேரம் மக்கள் பணியாற்றி வருகிறார். தமிழகத்தில் யாருமே வழங்க முடியாத ஒரு நேர்மையான ஆட்சியை தமிழகத்தில் தந்து கொண்டிருக்கிறார். தமிழக விளையாட்டுத்துறை மூலமாக தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் ரூ. 100 கோடி செலவில் முதல்வர் புதிய கட்டிடங்களை திறக்கவுள்ளார். எதிர்வரும் எந்தத் தேர்தலாக இருந்தாலும் தமிழக முதல்வரிடம் வெற்றியை சமர்ப்பிப்போம்” என்று பேசினார்.
பின்னர் அமைச்சர் ரகுபதி பேசுகையில், “ திராவிட மாடல் ஆட்சி தமிழ்நாட்டில் மட்டுமல்ல இந்தியாவிலும் கொண்டு வருவோம். திராவிட மாடல் ஆட்சியை கையிலெடுத்து இருக்கிறேன் முன்னெடுத்து வருகிறேன் என்று சொல்லும் ஒரு திராவிடத் தலைவராக தமிழக முதல்வர் திகழ்கிறார். இந்திய அரசியலில் மாற்றத்தை கொண்டு வரவேண்டும் என்று சொன்னால் அது முதlவர் மு.க.ஸ்டாலினால்தான் முடியும். நிச்சயமாக தோழமைக் கட்சிகளை ஒன்றிணைத்து அவர் அதனை செய்து காட்டுவார். இந்த 10 மாத காலத்தில் எத்தனையோ போராட்டங்கள் எத்தனையோ பிரச்சினைகள். ஆனால், எதற்கும் முகம் சுழிக்காமல் புன்முறுவலோடு ஆட்சியை மிகச் சிறப்பாக நடத்தியுள்ளார். தமிழகத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு அரசியலில் எப்படி ஓரிடம் கிடைத்ததோ அதுபோல் பல மடங்கு இடத்தை அவருடைய வாரிசான நான் பெறுவேன் என சொல்லி உழைக்கிறார்.
இன்று அகில இந்திய தலைவர்கள் பாராட்டுகிறார்கள், தமிழக மக்கள் பாராட்டுகிறார்கள். அடுத்த 10 ஆண்டுகளில், 20 ஆண்டுகளில், 30 ஆண்டுகளில் இனிமேல் தமிழகத்தில் ஸ்டாலின் ஆட்சியை அசைத்துப் பார்க்க எந்தக் கொம்பனும் பிறக்கவில்லை எனச் சொல்லிக்கொள்ளும் அளவுக்கு சிறப்பான ஆட்சியை தந்து கொண்டிருக்கிறார். இன்றைக்கு யாரெல்லாம் தமிழகத்திற்கு வருகிறார்கள்? காவி கொடியை பிடித்துகொண்டு வருகிறார்கள். காலூன்ற முடியுமா என ஊன்றி பார்க்கிறார்கள். ஆனால், பாவம் அவர்களால் ஊன்ற முடியாத இடம் தமிழகம் என்று அவர்கள் மறந்துவிட்டார்கள்.” என்று ரகுபதி பேசினார்.