இந்தி பேசுபவர்கள்தான் இந்தியர்களா.? இந்தி பேசும் மக்களுக்காக மத்திய அரசா.? கொந்தளிக்கும் மு.க. ஸ்டாலின்!

By Asianet TamilFirst Published Sep 8, 2020, 8:54 AM IST
Highlights

மத்திய பா.ஜ.க. அரசு ஒட்டுமொத்த இந்தியாவுக்கான மத்திய அரசா? அல்லது இந்தி பேசும் மாநிலங்களுக்கு மட்டுமே மத்திய அரசா? திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். 

சென்னை ஜி.எஸ்.டி ஆணையர் அலுவலகத்தில் உதவி ஆணையராகப் பணியாற்றுபவர் பாலமுருகன். இவர் தன் மீது திணிக்கப்படும் இந்தி குறித்து மத்திய மறைமுக வரி மற்றும் சுங்கவரி வாரிய தலைவருக்கு எழுதிய கடிதம் சமூக ஊடகங்களில் விவாதப் பொருளாகி உள்ளது. அந்தக் கடிதத்தில், “இந்தியை தாய் மொழியாக கொண்டவருக்கு இந்தி பிரிவில் பணியை ஒதுக்காமல் எனக்கு திட்டமிட்டு ஒதுக்கியுள்ளார்கள். விருப்பம் இல்லாத ஒருவரை இந்தியைப் பரப்ப வேண்டும் என்று நிர்பந்திப்பது இந்தி திணிப்பே” எனப் பாலமுருகன் பரபரப்பாக குற்றம் சாட்டியுள்ளார்.

 
இந்நிலையில் இந்தப் புகார் குறித்து திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தன்னுடைய ஃபேஸ்புக் பக்கத்தில், “சென்னை ஜி.எஸ்.டி. ஆணையர் அலுவலக உதவி ஆணையர் பாலமுருகன் வெளியிட்டுள்ள குற்றச்சாட்டு, இந்தியாவின் பன்முகத்தன்மைக்கு உருவாகியுள்ள மாபெரும் அச்சுறுத்தலை வெளிப்படுத்துகிறது. ‘இந்தி தெரியாத தனக்கு, இந்திப் பிரிவில் உதவி ஆணையர் பொறுப்பு வழங்கியதில் துளியும் விருப்பம் இல்லை’ என்றும்; இந்திப் பிரிவில் உள்ள மூன்று அதிகாரிகளும் தமிழைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள் என்றும்; அலுவல் கடிதங்களும், குறிப்புகளும் இந்தியில் இருப்பதால், புரியாமல் கையெழுத்திடும் நிலை உள்ளது என்றும் அவர் கூறியிருக்கிறார்.
பல்வேறு தேசிய இனங்கள், மொழிகள், மதங்கள் உள்ள இந்த இந்திய நாட்டை, ஒற்றைத் தன்மைகொண்டதாக மாற்றத் துடிக்கும் பாஜகவின் கபட நோக்கம் பட்டவர்த்தனமாக வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இந்தி பேசுபவர்கள் மட்டுமே இந்தியர்களா? இந்தியாவை, 'ஹிந்தி-யா’வாக மாற்றுவதற்கு மத்திய அரசு துடிக்கிறதா? இந்தி பேசும் மக்கள் தவிர மற்ற மொழியினர் அனைவரும் மாற்றாந்தாயின் பிள்ளைகளா? மத்திய பா.ஜ.க. அரசு ஒட்டுமொத்த இந்தியாவுக்கான மத்திய அரசா? அல்லது இந்தி பேசும் மாநிலங்களுக்கு மட்டுமே மத்திய அரசா?” என்று அடுக்கடுக்காக மு.க. ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். 
 

click me!