எங்க வெற்றியை யாராலும் தடுக்க முடியாது... வேலூர் தேர்தலில் ஸ்டாலினின் பலே ஆருடம்!

By Asianet TamilFirst Published Aug 1, 2019, 10:00 PM IST
Highlights

பெரம்பலூரைச் சேர்ந்த கீர்த்தனா என்ற மாணவி நீட் தேர்வால் தற்கொலை செய்துகொண்டார். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே, தமிழக அரசு அனுப்பிய நீட் விலக்கு மசோதாவை குடியரசுத் தலைவர் நிராகரித்துவிட்டார். ஆனால், அதிமுக அரசு இதை அறிந்திருந்தும் மக்களுக்குத் தெரியப்படுத்தவில்லை. அதை அப்படியே மறைத்து மக்களை ஏமாற்றியுள்ளது.
 

வேலூரில் திமுகதான் வெற்றி பெற போகிறது. அந்த வெற்றியை யாராலும் தடுக்க முடியாது என்று அக்கட்சியின் தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
வேலூரில் நாடாளுமன்றம் மக்களவை தொகுதிக்கு ஆகஸ்ட் 5-ம் தேதி நடைபெற உள்ளது. திமுக வேட்பாளர் கதிர் ஆனந்தை ஆதரித்து திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் ஏற்கனவே பிரசாரம் செய்திருந்தார். இந்நிலையில் இரண்டாம் கட்ட பிரசாரத்தை மு.க. ஸ்டாலின் இன்று தொடங்கினார். செங்கிலிகுப்பம், மதானஞ்சேரி உள்ளிட்ட பகுதிகளில் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்தை  மு.க.ஸ்டாலின் ஆதரித்து பிரசாரம்  செய்தார். 
அப்போது மு.க. ஸ்டாலின் பேசுகையில், “வேலூரில் திமுகதான் வெற்றி பெற போகிறது. அந்த வெற்றியை யாராலும் தடுக்க முடியாது. தமிழகத்தை ஆண்டு வரும் எடப்பாடி பழனிச்சாமி அரசு, மத்தியில் உள்ள பாஜக அரசுக்கு அடிமை சேவகம் செய்துவருகிறது. பெரம்பலூரைச் சேர்ந்த கீர்த்தனா என்ற மாணவி நீட் தேர்வால் தற்கொலை செய்துகொண்டார். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே, தமிழக அரசு அனுப்பிய நீட் விலக்கு மசோதாவை குடியரசுத் தலைவர் நிராகரித்துவிட்டார். ஆனால், அதிமுக அரசு இதை அறிந்திருந்தும் மக்களுக்குத் தெரியப்படுத்தவில்லை. அதை அப்படியே மறைத்து மக்களை ஏமாற்றியுள்ளது.
இந்த விவகாரம் குறித்து சட்டப்பேரவையில் நாங்கள்  கேள்வி எழுப்பிபோம். அப்போது அமைச்சர்கள் சாக்குபோக்கு சொல்லி, கேள்விக்குப் பதில் சொல்லாமல் சமாளித்தார்கள். நீட் தேர்வால் இறந்த மாணவி கீர்த்தனாவின் மரணத்துக்குத் தமிழக அரசு என்ன பதில் சொல்லப்போகிறது? அண்மையில் நடந்து முடிந்த தேர்தலில், எடப்பாடி பழனிச்சாமி அரசு, ‘நீட் தேர்வுக்கு விலக்கு வாங்குவோம்’ என கூறி மக்களிடம் வாக்கு கேட்டது வேடிக்கையாக உள்ளது.
அதிமுக ஆட்சியில் குடிநீர்ப் பிரச்னையால் மக்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். குடிநீர்ப் பிரச்சனையைத் தீர்க்க எடப்பாடி பழனிச்சாமி அரசு எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை. ஒகேனக்கல் கூட்டுகுடிநீர்த் திட்டத்தை அதிமுக அரசு முழுமையாக செயல்படுத்தவில்லை. திமுக ஆட்சிக்கு வந்தந்தும் ஒகேனக்கல் கூட்டுக்குடிநீர் திட்டத்தை முழுமையாக நிறைவேற்றுவோம்” என்று பேசினார்.

click me!